உரோம் இஸ்பானிய சதுக்கத்தில் அமல அன்னை திருவுருவம் உரோம் இஸ்பானிய சதுக்கத்தில் அமல அன்னை திருவுருவம் 

அமல உற்பவம் பெருவிழாவுக்கென சிறப்பு செபம்

புனித கன்னி மரியாவின் அமல உற்பவம் பெருவிழாவன்று, உரோம் மறைமாவட்டத்தில் உள்ள குடும்பங்கள் இணைந்து செபிக்கும்படி, கர்தினால் Angelo De Donatis அவர்கள், மடல் ஒன்றையும், செபம் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

டிசம்பர் 8, வருகிற செவ்வாயன்று புனித கன்னி மரியாவின் அமல உற்பவம் பெருவிழாவன்று, உரோம் மறைமாவட்டத்தில் உள்ள அனைத்து குடும்பங்களும் இணைந்து செபிக்கும்படி, இம்மறைமாவட்டத்தில் திருத்தந்தையின் பிரதிநிதியாக பணியாற்றும் கர்தினால் Angelo De Donatis அவர்கள், மடல் ஒன்றையும், அவர்கள் பயன்படுத்தக்கூடிய செபம் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.

பொதுவாக, ஒவ்வோர் ஆண்டும், டிசம்பர் 8ம் தேதி புனித கன்னி மரியாவின் அமல உற்பவம் பெருவிழாவன்று, திருத்தந்தையர், உரோம் நகரின் Spagna சதுக்கம் சென்று, அன்னை மரியாவுக்கு வணக்கம் செலுத்தி, மக்களுக்கு ஆசீர் வழங்கும் நிகழ்வு, இவ்வாண்டு இடம்பெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ள வேளையில், இவ்வாண்டு, அச்சத்துக்கத்தில் பிரான்சிஸ்கன் துறவியர் மேற்கொள்ளும் வணக்க வழிபாட்டில் முடிந்தவர்கள் அனைவரும் கலந்துகொள்வதற்கு, கர்தினால் De Donatis அவர்கள், அழைப்பு விடுத்துள்ளார்.

இத்தாலியர் அனைவரின் உள்ளத்திற்கும் மிக நெருக்கமான அமல உற்பவம் திருநாளன்று, இந்தக் கொள்ளைநோயிலிருந்து, இத்தாலி நாட்டையும், இவ்வுலகையும் காத்தருள மக்கள், அன்னையிடம், தங்கள் மன்றாட்டை எழுப்புமாறு கர்தினால் De Donatis அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

இத்தாலியின் தீயணைப்புப் படையைச் சேர்ந்த 220 பேர் இணைந்து 1857ம் ஆண்டு, Spagna சதுக்கத்தில் தூண் ஒன்றை நிறுவி, அமல உற்பவமாகப் பிறந்த அன்னை மரியாவின் உருவத்தை, அத்தூணின் மீது, டிசம்பர் 8ம் தேதி நிறுவியதைத் தொடர்ந்து, ஒவ்வோர் ஆண்டும், இந்நாளில், அச்சத்துக்கத்தில், காலை 7.30 மணிக்கு, தீயணைப்புப் படையைச் சேர்ந்தவர்கள், அன்னையின் பாதத்தில், மலர் வளையம் வைத்து வணங்கும் நிகழ்வு தொடர்ந்து இடம்பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் 8ம் தேதி கொண்டாடப்படும் அன்னையின் பெருவிழாவிற்கு ஒரு தயாரிப்பாக, நவம்பர் 29ம் தேதி முதல் நவநாள் முயற்சிகள், பன்னிரு திருத்தூதர்கள் பசிலிக்காவில் ஆரம்பமாகியுள்ளன என்பதையும் கர்தினால் De Donatis அவர்கள் தன் மடலில் குறிப்பிட்டுள்ளார்.

இம்மடலின் இறுதியில், குடும்பங்களை அன்னை மரியாவிடம் ஒப்படைக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ள ஒரு செபம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் வெளியிடப்பட்ட Evangelii Gaudium என்ற திருத்தூது அறிவுரை மடலில் கூறப்பட்டுள்ள கருத்துக்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. (Zenit)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 December 2020, 17:11