திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

இத்தாலிய தேசிய வேளாண் கூட்டமைப்புக்கு செய்தி

உலக வரலாற்றின் நெருக்கடியான இக்காலக்கட்டத்தில், மக்கள் மத்தியில் வறுமை மற்றும், சமத்துவமின்மை களையப்படுவதற்கு, பிறரன்பு மற்றும், ஒருமைப்பாடு நிறைந்த புதிய பாதைகள் தேர்ந்தெடுக்கப்படவேண்டும் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கொள்ளைநோய் உருவாக்கியிருக்கும் நெருக்கடியான சூழலில், உணவுகளை உற்பத்தி செய்யும் விவசாயிகளும், அத்துறையில் பணியாற்றுவோரும், இத்தாலி நாட்டின் பொருளாதார மற்றும், சமுதாய வாழ்வுக்கு வழங்கிவரும் சிறப்புப் பங்களிப்பு குறித்து சிந்திக்கவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலிய அமைப்பு ஒன்றிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Coldiretti எனப்படும் இத்தாலிய தேசிய வேளாண் கூட்டமைப்பு நடத்தும் மெய்நிகர் கூட்டத்தில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகளுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பெயரில், செய்தி அனுப்பியுள்ள, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், அக்கூட்டத்தில் பங்குகொள்ளும் அனைவருக்கும், திருத்தந்தையின் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

இந்த மெய்நிகர் கூட்டம், மனிதர், இயற்கை, படைத்தவர் ஆகிய அனைவருக்கும் இடையேயுள்ள மிக ஆழமான உறவுகள் பற்றியும், இலாபம் மற்றும், வளங்களைச் சுரண்டுவதை மட்டுமே கருத்தில் கொள்ளாமல், நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பேணி பாதுகாக்க அழைக்கப்பட்டுள்ளது பற்றியும் சிந்திக்கத் தூண்டுகிறது என்று அச்செய்தி கூறுகிறது.

நம் உலக வரலாற்றின் நெருக்கடியான இக்காலக்கட்டத்தில், மக்கள் மத்தியில் வறுமை மற்றும், சமத்துவமின்மை களையப்படுவதற்கு, பிறரன்பு மற்றும், ஒருமைப்பாடு நிறைந்த புதிய பாதைகளைத் தேர்ந்தெடுக்குமாறு, அச்செய்தி வழியாக வலியுறுத்தியுள்ள திருத்தந்தை, இவ்வாறு செயல்பட, இறைவனிடம் தான் மன்றாடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

“உணவு உற்பத்தி செய்யும் முக்கிய கதாநாயகர்களுடன் இத்தாலி மீண்டும் துவங்குகின்றது” என்ற தலைப்பில், இத்தாலிய தேசிய வேளாண் கூட்டமைப்பு, இந்த மெய்நிகர் கூட்டத்தை நடத்தியது.

1944ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ம் தேதி, குறுநில விவசாயிகளின் தலைவரான  Paolo Bonomi என்பவர், Coldiretti கூட்டமைப்பை உருவாக்கினார். தற்போது 97 கிளை அமைப்புக்களைக் கொண்ட இந்த கூட்டமைப்பில், ஏறத்தாழ 16 இலட்சம் விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். 

மேலும், இந்திய மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி டில்லி - ஹரியானா எல்லைப் பகுதியில் கடந்த இருபது நாட்களாக போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, மேலும் ஏறத்தாழ 60 ஆயிரம் விவசாயிகள், டில்லியை சென்றடைந்துள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 December 2020, 14:47