புதன் மறைக்கல்வியுரையின்போது - 091220 புதன் மறைக்கல்வியுரையின்போது - 091220 

மறைக்கல்வியுரை: விண்ணப்பத்தின் இறைவேண்டல்

நம் வாழ்வின் மிக இருண்ட நேரங்களில்கூட, வானகத் தந்தையை நோக்கி இறைவேண்டல் மேற்கொள்ளுமாறு இயேசு நமக்கு கற்பித்துள்ளார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

கடந்த 17 வாரங்களாக, செபம் குறித்த ஒரு மறைக்கல்வித் தொடரை வழங்கி வரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாரம், அதன் தொடர்ச்சியாக, 'விண்ணப்பத்தின் இறைவேண்டல்' குறித்து, தன் சிந்தனைகளை, இணையதளத் தொடர்பு வழியாக பகிர்ந்துகொண்டார். மக்கள் நலனை கருத்தில் கொண்டு, அவர்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்கும் விதிமுறைகளுக்கு இயைந்தவகையில், நம் திருத்தந்தை, தன் நூலக அறையிலிருந்தே புதன் மறைக்கல்வி உரைகளை வழங்கி வருகிறார் என்பது நாம் அறிந்ததே. டிசம்பர் 9ம் தேதி, இப்புதனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறைக்கல்வி சிந்தனைகளை வழங்கும் முன்னர், 28ம் திருப்பாடலிலிருந்து ஒரு பகுதி பல்வேறு மொழிகளில் வாசிக்கப்பட்டது. அதன்பின், திருத்தந்தையின் சிந்தனைப் பகிர்வு தொடர்ந்தது.

திருப்பாடல் 28

ஆண்டவரே, உம்மை நோக்கி

மன்றாடுகின்றேன்;

என் கற்பாறையே, என் குரலைக்

கேளாதவர்போல் இராதேயும்;

நீர் மௌனமாய் இருப்பீராகில்,

படுகுழியில் இறங்குவோருள்

நானும் ஒருவனாகிவிடுவேன்.

நான் உம்மிடம் உதவி வேண்டுகையில்,

உமது திருத்தூயகத்தை நோக்கி

நான் கையுயர்த்தி வேண்டுகையில்,

பதில் அளித்தருளும். […]

ஆண்டவர் போற்றி! போற்றி!

ஏனெனில், அவர் என்

கெஞ்சும் குரலுக்குச் செவிசாய்த்தார்.

ஆண்டவர் என் வலிமை, என் கேடயம்;

அவரை என் உள்ளம் நம்புகின்றது;

நான் உதவி பெற்றேன்; ஆகையால்

என் உள்ளம் களிகூர்கின்றது;

நான் இன்னிசைபாடி

அவருக்கு நன்றி கூறுவேன். (தி.பா.28,1-2.6-7)

மறைக்கல்வியுரை

அன்பு சகோதரரே, சகோதரிகளே, இறைவேண்டல் குறித்த நம் மறைக்கல்வித் தொடரில் இன்று, 'விண்ணப்பத்தின் இறைவேண்டல்' குறித்து சிந்திப்போம். நம்முடைய வாழ்விலும், இவ்வுலகிலும் இறைவனின் அரசு வந்திட வேண்டும் என நாம், நம் ஒவ்வொரு இறைவேண்டலிலும் விண்ணப்பிக்கிறோம் என திருஅவையின் மறைக்கல்வி நமக்கு விவரிக்கிறது. நாம் முற்றிலுமாக இறைவனைச்  சார்ந்தே உள்ளோம் என்பதை ஏற்றுக்கொண்டவர்களாக, இறைபராமரிப்பில் முழு நம்பிக்கை கொண்டவர்களாக, நம் வாழ்வின் மிக இருண்ட நேரங்களில்கூட, வானகத் தந்தையை நோக்கி இறைவேண்டல் மேற்கொள்ளுமாறு இயேசு நமக்கு கற்பித்துள்ளார். விண்ணப்பத்தின் இறைவேண்டல் என்பது, மனித இதயங்களில் இயல்பாகவே பிறப்பெடுக்கும் ஒன்று. நோய், அநீதி, நம்பிக்கைத் துரோகம், விரக்தி போன்ற சூழல்களின் முன்னிலையில், மனிதரின் இயலாமை வேளைகளில் இறைவனின் தலையீட்டை நாடும் இறைவேண்டல்களை பலமுறை நாம் விவிலியத்தில் காண்கிறோம். 'இறைவா எனக்கு உதவியருளும்' என்ற சிறு வேண்டல்கூட, சக்தி நிறைந்த ஓர் இறைவேண்டலாகும். தன்னை நோக்கி அழைப்பவர்கள் குரலுக்கு, இறைவன் எப்போதும் செவிமடுக்கிறார். புனித பவுல் கூறுவதுபோல், இறையரசின் வருகைக்காகவும் (உரோ. 8:22-24), இறைவனின் மீட்பளிக்கும் திட்டத்தின் நிறைவேறலுக்காகவும், பேறுகால வேதனையுற்றுத் தவிக்கும் படைப்பு அனைத்தின் குரலை எதிரொலிப்பதாக நம் இறைவேண்டல்கள் உள்ளன. தன் மகனின் சிலுவை, மற்றும், உயிர்ப்பின் வழியாக, அனைத்து தீமைகளின் மீதும் வெற்றிவாகை சூடியவரும், நமக்காகப் பரிந்து பேசி, அனைத்தையும் புதியதாக்க செயலாற்றிவரும் தூய ஆவியாரை, நமக்கு தந்தவருமான, இறைவனில் முழு நம்பிக்கை கொண்டவர்களாக, நம் இறைவேண்டல்களை எழுப்புவோம்.

இவ்வாறு, தன் மறைக்கல்வியுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் 8, அன்னையின் அமல உற்பவம் பெருவிழாவாகிய, இச்செவ்வாய்க்கிழமையன்று, புனித யோசேப்பு குறித்த திருத்தூது மடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளதை நினைவூட்டினார். உலகளாவிய திருஅவையின் பாதுகாவலராக புனித யோசேப்பை அறிவித்ததன் 150ம் ஆண்டு நிறைவில் இந்த ஏடு வெளியிடப்பட்டுள்ளது என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் அந்த ஏட்டை, 'ஒரு தந்தையின் இதயத்தோடு', என தலைப்பிட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார். விலைமதிப்பிட முடியாத செல்வங்களான, அன்னை மரியாவையும், இயேசுவையும் புனித யோசேப்பின் கைகளில் இறைவன் ஒப்படைத்தார், அவரும் நம்பிக்கையோடும், மன வலிமையோடும், மென்மையோடும், ஒரு தந்தைக்குரிய இதயத்தோடு செயலாற்றினார், என்றார் திருத்தந்தை பிரான்சிஸ். நம் காலத்தின் திருஅவைக்கு புனித யோசேப்பின் பாதுகாவலை நாம் வேண்டுவதோடு, இறைவிருப்பத்திற்கு எவ்வாறு தாழ்ச்சியுடன் பதிலுரைப்பது என்பதை அவரிடமிருந்து கற்றுக்கொள்வோம், என்ற திருத்தந்தை, கிறிஸ்து பிறப்பு பெருவிழாவிற்காக காத்திருக்கும் இந்த திருவருகைக் காலத்தில், பெத்லகேம் மறையுண்மையின் ஒளி, நம் இதயங்களில் புகுந்திட அனுமதிப்போம், என வேண்டினார். இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 December 2020, 12:20