திருத்தந்தை பிரான்சிஸ் வழங்கிய காணொளிச் செய்தி - கோப்புப் படம் திருத்தந்தை பிரான்சிஸ் வழங்கிய காணொளிச் செய்தி - கோப்புப் படம் 

அர்ஜென்டினா மருத்துவப் பணியாளர்களுக்கு திருத்தந்தை செய்தி

அனைத்து மருத்துவர்கள், மற்றும், செவிலியர்களின் அருகாமையில் தான் இருக்க விரும்புவதாகவும், அவர்களுக்காக தான் செபிப்பதாகவும் உறுதிகூறும் திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இந்த கொள்ளைநோய்க் காலத்தில் தங்கள் அருகாமையாலும், ஆதரவுப் பணிகளாலும், உயிர்த் தியாகத்தாலும் நோயாளிகளிடையே சிறப்புப் பணியாற்றிவரும் அர்ஜென்டினா நாட்டின் மருத்துவர்கள், மற்றும், செவிலியர்களுக்கு தன் பாராட்டுக்களை வெளியிட்டு காணொளிச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இக்கொள்ளை நோய்க்காலத்தில் அதிக அளவில் பாராட்டப்படாமலிருந்தாலும், தங்கள் கடமையிலேயே கருத்தாக இருக்கும் மருத்துவர்களும் செவிலியர்களும் உண்மையிலேயே பாராட்டுக்கு உரியவர்கள் எனக்கூறும் திருத்தந்தையின் இக்காணொளிச் செய்தி, அர்ஜென்டினா நாட்டில் நவம்பர் 21ம் தேதி சிறப்பிக்கப்பட்ட செவிலியர் நாளையொட்டியும், அந்நாட்டில் டிசம்பர் 3ம் தேதி சிறப்பிக்கப்பட உள்ள மருத்துவர் நாளையொட்டியும் அனுப்பப்பட்டுள்ளது.

அனைத்து மருத்துவர்கள், மற்றும், செவிலியர்களின் அருகாமையில் தான் இருக்க விரும்புவதாகவும், அதிலும், குறிப்பாக, நோயுற்று துன்புறுவோருக்கு அருகில் இருந்து ஆறுதல் வழங்கும் அவர்களுடன் இருக்க ஆவல் கொள்வதாகவும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்காகவும், அவர்களின் குடும்பங்களுக்காகவும் தான் செபிப்பதாகவும் அச்செய்தியில் உறுதிகூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அர்ஜென்டினா நாட்டு மருத்துவப் பணியாளர்களுக்கென தயாரிக்கப்பட்டுள்ள இக்காணொளிச் செய்தியில், நோயுற்றோரிடையே பணியாற்றுபவர்களை உள்ளடக்கிய காணொளிகளும், மருத்துவப் பணியாளர்களால் பயனடைந்தோரின் நன்றியுரைகளும் இடையிடையே இடம்பெற்றுள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 November 2020, 14:54