சிலே நாட்டில் பெண் சிறைக் கைதிகளை சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம் சிலே நாட்டில் பெண் சிறைக் கைதிகளை சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம் 

பட்டினியும், போரும் அற்ற உலகம் – திருத்தந்தையின் டுவிட்டர்

"ஆண்டவரே, பட்டினி, வறுமை, வன்முறை, மற்றும் போர் ஆகியவை இல்லாத உலகை, இன்னும் நலம் மிகுந்த சமுதாயத்தை, இன்னும் மாண்பு மிக்க உலகை படைக்க எங்களை உந்தித் தள்ளியருளும்"

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அசிசி நகரின் புனித பிரான்சிஸ் அவர்களின் திருநாளான அக்டோபர் 4ம் தேதி ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அப்புனிதரின் "Fratelli tutti" என்ற சொற்களை தலைப்பாகக் கொண்ட திருமடலை வெளியிட்டதைத் தொடர்ந்து, பல்வேறு நாள்களில், இத்திருமடலில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை, தன் டுவிட்டர் செய்திகளாக வெளியிட்டு வருகிறார்.

நவம்பர் 26 இவ்வியாழனன்று.#FratelliTutti என்ற 'ஹாஷ்டாக்'குடன் திருத்தந்தை வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், பட்டினி, வறுமை, வன்முறை மற்றும் போர் ஆகியவை அற்ற மாண்புமிக்க உலகை, மனித குடும்பம் உருவாக்க, இறைவனிடம் ஒரு வேண்டுதலை வெளியிட்டுள்ளார்.

"ஆண்டவரே, மனித குடும்பத்தின் தந்தையே, அனைத்து மனிதரையும் சமமான மாண்புடன் நீர் உருவாக்கினீர்: எங்கள் உள்ளங்களில் உடன்பிறந்த உணர்வை ஊற்றியருளும். பட்டினி, வறுமை, வன்முறை, மற்றும் போர் ஆகியவை இல்லாத உலகை, இன்னும் நலம் மிகுந்த சமுதாயத்தை, இன்னும் மாண்பு மிக்க உலகை படைக்க எங்களை உந்தித் தள்ளியருளும்" என்ற வேண்டுதல், திருத்தந்தை வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தது.

மேலும், பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்கும் உலகநாள் நவம்பர் 25 இப்புதனன்று கடைபிடிக்கப்பட்டதையொட்டி, இந்தக் கருத்தை வலியுறுத்தி, டுவிட்டர் செய்தியொன்றை திருத்தந்தை வெளியிட்டார்.

"பெண்கள் அடிக்கடி அவமானப்படுத்தப்படுகின்றனர், அடிக்கப்படுகின்றனர், பாலியல் கொடுமைக்கு உள்ளாகின்றனர்... இவ்வுலகம், ஒரு போர்க்களமாக இல்லாமல், அமைதிநிறைந்த ஓர் இல்லமாக இருப்பதை நாம் விரும்பினால், ஒவ்வொரு பெண்ணின் மாண்பையும் காப்பதற்கு நாம் இன்னும் அதிகம் செயலாற்றவேண்டும்" என்ற சொற்கள், நவம்பர் 25ம் தேதி, திருத்தந்தை வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

அத்துடன், இறைவேண்டலை மையப்படுத்தி இப்புதனன்று வழங்கிய மறைக்கல்வி உரையில் பகிர்ந்துகொண்ட ஒரு கருத்தை, திருத்தந்தை தன் 2வது டுவிட்டர் செய்தியாக இப்புதனன்று வெளியிட்டார்.

"நாம் இறைவேண்டல் செய்யும்போது, இறைவன் நம் கண்களைத் திறந்து, நம் இதயங்களை புதுப்பிக்கிறார், நம் காயங்களை குணமாக்குகிறார், மற்றும் நமக்குத் தேவையான வரத்தை வழங்குகிறார்" என்ற சொற்களை, #Prayer என்ற 'ஹாஷ்டாக்'குடன் திருத்தந்தை வெளியிட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 November 2020, 14:29