Buenos Aires நகரில், கருக்கலைப்பு சட்டத்திற்கு எதிராக போராட்டம்  Buenos Aires நகரில், கருக்கலைப்பு சட்டத்திற்கு எதிராக போராட்டம்  

"Mujeres de las villas" அமைப்பிற்கு திருத்தந்தையின் மடல்

மனித உயிரை அனைத்து நிலைகளிலும், குறிப்பாக, கருவில் பாதுகாப்பது ஒன்றே, நம் குடும்பங்களையும், சமுதாயத்தையும் காக்கும் - ஆர்ஜென்டீனா ஆயர் பேரவை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஆர்ஜென்டீனா நாட்டில், கருக்கலைப்பை சட்டமாக்கும் முயற்சிகளை எதிர்த்துப் போராடிவரும் "mujeres de las villas" என்ற பெண்கள் அமைப்பிற்கு தன் நன்றியையும், செபங்களையும் தெரிவித்து திருத்தந்தை மடல் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இன்னும் பிறக்காத குழந்தைகள் சார்பாக, 2018ம் ஆண்டுமுதல் போராடிவரும் இவ்வமைப்பினரின் ஒருங்கிணைப்பாளர் Victoria Morales Gorleri அவர்களுக்கு, தன் கைப்பட எழுதிய இம்மடலை, திருத்தந்தை அனுப்பியுள்ளார்.

'கிராமத்துப் பெண்கள்' என்று பொருள்படும் "mujeres de las villas" என்ற அமைப்பினர், கருக்கலைப்பு சட்டமாக்கப்படும் முயற்சிகள் அந்நாட்டில் அண்மையில் துவங்கியதையடுத்து, திருத்தந்தைக்கு எழுதியிருந்த மடலுக்கு, திருத்தந்தை தன் பதிலை வழங்கியுள்ளார்.

ஆர்ஜென்டீனா நாட்டில், வளர் இளம் பருவப் பெண்கள் பல்வேறு விரும்பத்தகாத சூழல்களில் கருவுருவதைச் சுட்டிக்காட்டி, அவர்கள் நலனுக்காக, இந்த சட்டம் வகுக்கப்படுகின்றது என்று, அரசியல்வாதிகள் பேசிவருவதை, இவ்வமைப்பினர் திருத்தந்தைக்குச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வளர் இளம் பருவப் பெண்கள், நல்வழியில் நடக்க அவர்களுக்கு உதவி செய்வதை விடுத்து, இந்தச் சட்டத்தை அமலுக்குக் கொணர்வதன் வழியே, இளையோரை இன்னும் தவறான வழிமுறைகளுக்கு அழைத்துச் செல்ல அரசியல் வாதிகள் முயல்கின்றனர் என்பதையும், இவ்வமைப்பினர் தங்கள் கவலையாக வெளியிட்டுள்ளனர்.

"mujeres de las villas" அமைப்பினர் வெளியிட்டுள்ள கவலைகள் அனைத்தும் உண்மை என்பதையும், அவர்கள் மேற்கொண்டுள்ள எதிர்ப்பு போராட்டத்தில் தானும் ஆன்மீக வழியில் ஒன்றித்திருப்பதாகவும் திருத்தந்தை தன் மடலில் கூறியுள்ளார்.

இந்த கருக்கலைப்பு சட்டத்தை எதிர்க்கும் மக்கள் அனைவரும், பல்வேறு ஊர்களிலிருந்து, நவம்பர் 28 வருகிற சனிக்கிழமை, Buenos Aires நகரில், சட்டமன்ற அவைக்கு முன் கூடிவந்து, செபமாலை செபிக்கவுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கருக்கலைப்பை சட்டமாக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, நவம்பர் 20ம் தேதி, ஆர்ஜென்டீனா ஆயர் பேரவை வெளியிட்ட ஓர் அறிக்கையில், மனித உயிரை அனைத்து நிலைகளிலும், குறிப்பாக கருவில் பாதுகாப்பது ஒன்றே, நம் குடும்பங்களையும், சமுதாயத்தையும் காக்கும் என்று கூறியுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 November 2020, 14:41