Caucasus பகுதி இராணுவ பயிற்சியின்போது Caucasus பகுதி இராணுவ பயிற்சியின்போது 

Caucasusல் அமைதிக்காக திருத்தந்தை செபம்

1988ம் ஆண்டிலிருந்து, அர்மேனியாவுக்கும் அஜர்பைஜானுக்கும் இடையே, Nagorno Karabakh நிலப்பகுதி தொடர்பாக போர் இடம்பெற்று வருகிறது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

சர்ச்சைக்குரிய Nagorno Karabakh நிலப்பகுதி தொடர்பாக, அர்மேனியாவுக்கும் அஜர்பைஜானுக்கும் இடையே தொடர்ந்து இடம்பெற்றுவரும் போருக்கு, அமைதியான முறையில் தீர்வு ஒன்று காணப்படுமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மீண்டும் ஒருமுறை அழைப்பு விடுத்தார்.

புனிதர் அனைவர் பெருவிழாவன, நவம்பர் 01, இஞ்ஞாயிறன்று, வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு  நண்பகல் மூவேளை செப உரையாற்றியபின், இவ்வாறு அழைப்பு விடுத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தப் போர் ஏராளமான துன்பங்கள் மற்றும், உயிரிழப்புக்களுக்குக் காரணமாகியுள்ளது என்று கூறினார்.

Nagorno Karabakh பகுதியில் இடம்பெறும் ஆயுதமோதல்களை நாம் மறக்கக் கூடாது என்றும், அப்பகுதி குறித்த இடைக்காலப் போர்நிறுத்த ஒப்பந்தங்கள் மீறப்பட்டு வருகிறது என்றும் கூறியத் திருத்தந்தை, அப்பகுதியில் இடம்பெறும் இரத்தம் சிந்துதல் நிறுத்தப்படுவதற்கு, எவ்வளவு விரைவில் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமோ, அவ்வளவு விரைவில் அவற்றை நடைமுறைப்படுத்துமாறு, போரிடும் தரப்புகளுக்கு அழைப்பு விடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தப் போரில், பலியாகும் அப்பாவி மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு, மேலும், வீடுகள், உள்கட்டமைப்பு வழிபாட்டுத்தலங்கள் போன்றவையும் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றன எனவும் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த செப்டம்பர் 28ம் தேதி ஆற்றிய நண்பகல் மூவேளை செப உரைக்குப்பின்னும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Caucasus பகுதியில் அமைதிக்காக அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Nagorno Karabakh நிலப்பகுதி தொடர்பாக, அர்மேனியாவுக்கும் அஜர்பைஜானுக்கும் இடையே 1988ம் ஆண்டிலிருந்து போர் இடம்பெற்று வருகிறது. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 November 2020, 12:52