தேடுதல்

உலக அமைதி வேண்டி, உரோம் நகரில் நடைபெற்ற பல்சமய வழிபாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ், முதுபெரும் தந்தை பர்த்தலோமேயு உலக அமைதி வேண்டி, உரோம் நகரில் நடைபெற்ற பல்சமய வழிபாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ், முதுபெரும் தந்தை பர்த்தலோமேயு 

முழு ஒன்றிப்பை நோக்கிய பாதையில் கிறிஸ்தவ சபைகள்

ஏனைய பாரம்பரிய மதங்களுடன் இணைந்து, கிறிஸ்தவ சபைகள், உரையாடல், ஒருவருக்கொருவர் மதிப்பு, ஒத்துழைப்பு ஆகியவற்றின் எடுத்துக்காட்டாக செயல்படவேண்டியது முதல் கடமை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கிறிஸ்தவ ஒன்றிப்பு திருஅவையின் பாதுகாவலரும், புனித பேதுருவின் சகோதரருமான புனித அந்திரேயாவின் திருவிழா, நவம்பர் 30, இத்திங்களன்று சிறப்பிக்கப்பட்டதையொட்டி  கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயு அவர்களுக்கு வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்தவ ஒன்றிப்பை ஊக்குவிக்கும் திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் Kurt Koch அவர்களுடன் சென்ற திருப்பீடப் பிரதிதிநிதிகள் வழியாக அனுப்பப்பட்டுள்ள திருத்தந்தையின் வாழ்த்துச்செய்தி, இஸ்தான்புல் நகரில் இடம்பெற்ற திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களுக்குப்பின் வழங்கப்பட்டது.

இச்செய்தியில், இவ்வாண்டு அக்டோபர் மாதம் 20ம் தேதி, உலக அமைதி வேண்டி, உரோம் நகரில் நடைபெற்ற பல்சமய வழிபாட்டில், ஏனைய மதத் தலைவர்களுடன் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை கலந்துகொண்டதை நினைவுகூர்ந்து, திருத்தந்தை, தன் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார்.

ஏனைய பாரம்பரிய மதங்களுடன் இணைந்து, கிறிஸ்தவ சபைகள், உரையாடல், ஒருவருக்கொருவர் மதிப்பு, ஒத்துழைப்பு ஆகியவற்றின் எடுத்துக்காட்டாக செயல்படவேண்டியது, முதல் கடமை என்பதையும் தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை.

.ஒவ்வொரு கிறிஸ்தவ சபையும், மற்றவர்களைப் பற்றிய தங்கள் தீர்ப்பகளில், அன்பிற்கு முதலிடம் கொடுக்கும்போது, உடன்பிறந்த உணர்வும், ஒன்றிப்பும் அதிகரிக்கும் என, நூறாண்டுகளுக்கு முன்னர் கிறிஸ்தவ ஒன்றிப்பு சபை வெளியிட்ட சுற்றுமடல் கூறியுள்ளதையும் தன் வாழ்த்துச் செய்தியில் நினைவு கூர்ந்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கத்தோலிக்க திருஅவைக்கும், கிறிஸ்தவ ஒன்றிப்பு சபைக்கும் இடையே கடந்த நூறாண்டுகளில் இடம்பெற்றுள்ள உறவு முன்னேற்றங்கள் குறித்து தன் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முழு ஒன்றிப்பை நோக்கிய பாதையில் இந்த இரு கிறிஸ்தவ சபைகளும் நடைபோடுகின்றன என்ற நம்பிக்கையையும் வெளியிட்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 November 2020, 15:05