புதன் மறைக்கல்வியுரை புதன் மறைக்கல்வியுரை  

புதிய துறவு சபைகள் நிறுவுவது பற்றிய ‘Motu proprio’

மறைமாவட்ட அளவில் புதிய சபைகளை நிறுவும் வழிமுறையைத் தேர்ந்துதெளிவதில், திருப்பீடம், ஆயர்களுக்கு உதவவேண்டிய பொறுப்பைக் கொண்டிருக்கிறது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் சொந்த விருப்பத்தினால் வெளியிடும் "Motu Proprio" எனப்படும் ஒரு சிறப்பு அறிக்கை வழியாக, புதிய துறவு சபைகள் நிறுவுவது குறித்து, புதிய விதிமுறை ஒன்றை உருவாக்கியுள்ளார்.

"Authenticum charismatis" என்ற திருத்தூது மடல் வழியாக இதனை வெளியிட்டுள்ள திருத்தந்தை, அர்ப்பணவாழ்வுச் சபைகளை நிறுவுவதில், திருப்பீடத்திடமிருந்து, முறையான அனுமதி பெற்றிருக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

புதிய அர்ப்பணவாழ்வுச் சபைகளை நிறுவுவது பற்றிய திருஅவை சட்டம் 579ல் மாற்றத்தை உருவாக்கியுள்ள திருத்தந்தை, இந்த மாற்றத்தின் வழியாக, அர்ப்பணவாழ்வுச் சபைகள் மற்றும், திருத்தூது வாழ்வுக் கழகங்களை புதிதாக நிறுவும்போது, திருப்பீடத்திடமிருந்து எழுத்து மூலமாக அனுமதி பெறவேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த புதிய விதிமுறை, வத்திக்கானின் லொசர்வாத்தோரே ரொமானோ நாளிதழில் வெளியிடப்பட்டு, இம்மாதம் 10ம் தேதி நடைமுறைக்கு வரும் மற்றும், அது, தூய ஆட்சிப்பீட நடவடிக்கைகளில் வெளியிடப்படும் என்றும், திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிக்கை வழியாக, திருத்தூதரக ஆட்சிப்பீடத்தைக் கலந்தாலோசிக்கவேண்டும் என்னும் நிபந்தனைக்குட்பட்டு, மறைமாவட்ட ஆயர்கள், தங்கள் சொந்த ஆளுகை எல்லையில், அர்ப்பணவாழ்வுச் சபைகளை முறையான ஆணையால் நிறுவலாம் என்ற திருஅவை சட்டம் 579ல், திருத்தந்தை மாற்றத்தைக் கொணர்ந்துள்ளார்.  

மறைமாவட்ட அளவில் புதிய சபைகளை நிறுவும் வழிமுறையைத் தேர்ந்துதெளிவதில், திருப்பீடம், ஆயர்களுக்கு உதவவேண்டிய பொறுப்பைக் கொண்டிருக்கிறது.   

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 November 2020, 15:45