வறியோர் உலக நாளையொட்டி, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை வறியோர் உலக நாளையொட்டி, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை  

ஏழைகளுக்கு கொடுப்பது, வட்டியோடு திருப்பி வழங்கப்படும்

நம் திறமைகளை நமக்கென மட்டும் ஒதுக்கி வைக்காமல், அவற்றை அச்சமின்றி, பிறருக்கென பயன்படுத்தவேண்டும், ஏனெனில், நற்செயல்களை ஆற்றாத திறமைகளால் எவ்வித பயனுமில்லை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

உலகில் உதவி அதிகம் தேவைப்படும் மக்களின் சார்பாக நாம் ஒவ்வொருவரும், நற்செய்திக்கும் பிறரன்புக்கும் சான்றுகளாக இருந்து, செபவாழ்வை மேற்கொள்ளவேண்டும் என இஞ்ஞாயிறு திருப்பலியில் அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

2017ம் ஆண்டு துவக்கப்பட்டு, ஒவ்வோர் ஆண்டும் பொதுக்காலத்தின் 33வது ஞாயிறன்று திருஅவையில் சிறப்பிக்கப்படும், வறியோர் உலக நாளையொட்டி, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நாளின் நற்செய்தி வாசகத்தில் காணப்படும் தாலந்து உவமை, நம் வாழ்வின் துவக்கம், மையம் மற்றும் இறுதியைப்பற்றி எடுத்துரைப்பதாக உள்ளது என்று கூறினார்

நம் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான கொடைகள் வழங்கப்பட்டுள்ளன, அக்கொடைகளின் பலன், நாம் வாழும் முறைகளைச் சார்ந்துள்ளது என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நமக்கு கிடைக்காதவை குறித்து நாம் கவலை கொள்ளாமல், நமக்கு கொடுக்கப்பட்டுள்ள திறமைகளை நாம் நன்முறையில் பயன்படுத்தவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

கடந்தகாலங்களைக் குறித்து கவலைகொள்ளாமல், நிகழ்காலத்தை நன்முறையில் பயன்படுத்தி, இறைவன் மீண்டும் வரவிருக்கும் வருங்காலத்திற்கு நம்மை தயாரித்து, நாம் எப்போதும் தயாராக இருக்கவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார் திருத்தந்தை.

நமக்கு வழங்கப்பட்டுள்ள, திறமைகளைக்கொண்டு மற்றவர்களுக்குப் பணியாற்றும்போதுதான் அது பயனுள்ளதாகவும், நம் வாழ்வுக்கு அர்த்தம் தருவதாகவும் உள்ளது என எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் திறமைகளை நமக்கென மட்டும் ஒதுக்கி வைக்காமல், அவற்றை அச்சமின்றி, பிறருக்கென பயன்படுத்தவேண்டும், ஏனெனில், நற்செயல்களை ஆற்றாத  திறமைகளால் எவ்வித பயனுமில்லை என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒரு தாலந்து பெற்றவர், அதைப் பயன்படுத்தி இலாபம் பார்க்காமல் புதைத்து வைத்ததைப்பற்றி அறியவந்த முதலாளி, அப்பணத்தை, வட்டிக்கடைக்காரரிடமாவது கொடுத்திருக்கலாம் என கூறுகிறார், ஆம், அந்த வட்டிக்கடைக்காரர் நம்மைப் பொருத்தவரையில், ஏழைகளே, ஏனெனில், அவர்களிடம் நாம் கொடுப்பது நமக்கு வட்டியோடு இறைவனால் திருப்பி வழங்கப்படும் என்றார் திருத்தந்தை.

ஒருபக்கம் பொருளின்றி ஏழ்மையாய் இருக்கும் உலகில், மறுபக்கம் அன்பில் ஏழையாக இருக்கும் மக்களையும் காணமுடிகிறது என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏழைகளுக்கு நாம் உதவும்போது, நாம் அன்பில் பணக்காரர்களாக மாற அவர்கள் நமக்கு உதவுகின்றனர் எனக் கூறினார்.

இத்தாலியின் கோமோ நகரில், ஏழைகளில் இயேசுவைக்கண்டு அவர்களுக்காக பணியாற்றிக்கொண்டிருந்த அருள்பணியாளர் Roberto Malgesini அவர்கள், தன்னிடம் உதவிபெற்ற ஒருவராலேயே இரண்டு மாதங்களுக்கு முன்னர் கொலைசெய்யப்பட்டது குறித்து தன் மறையுரையில் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  ஏழைகளில் இறைவனைக் கண்டுகொள்ளும் வரத்திற்காக வேண்டுவோம் என அனைவரையும் கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 November 2020, 14:43