தேடுதல்

Vatican News

திருஅவையின் சமுதாய கோட்பாடு, எதிர்நோக்கை...

கிறிஸ்தவர்கள் என்ற முறையில், நாம் திருமுழுக்கில் மறுபிறப்பு அடைந்துள்ளோம். இதனை, கடவுளோடும், மற்றவரோடும், படைப்போடும் ஒருங்கிணைந்து வாழும் கொடையாகப் பெற்றுள்ளோம் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இத்தாலியின் வெரோனா நகரில், நவம்பர் 26, இவ்வியாழனன்று  தொடங்கியுள்ள திருஅவையின் சமுதாயக் கோட்பாடுகளின் பத்தாவது விழாவில், நேரடியாகவும், இணையதளம் வழியாகவும் கலந்துகொள்ளும் பிரதிநிதிகளுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், காணொளிச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.  

நினைவு, திருமுழுக்கு மற்றும், எதிர்நோக்கு ஆகியவற்றை தொடர்புபடுத்தவேண்டியதன் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை, திருஅவையின் சமுதாயக் கோட்பாடுகள், எதிர்நோக்கை ஊக்குவிப்பவர்களாகச் செயல்பட, நமக்கு உதவுகின்றன என்று கூறியுள்ளார்.

“வருங்காலம் பற்றிய நினைவு” என்ற தலைப்பில், இந்த விழா நடைபெறுவதையும் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, வருங்காலம், ஒரு பெயரைக்கொண்டிருக்கின்றது, மற்றும்,   இந்தப் பெயர்தான் எதிர்நோக்கு என்று கூறியுள்ளார்.

எதிர்நோக்கு என்பது, இருளில் தன் இதயத்தை மூடிக்கொள்ளாத ஓர் இதயத்தின் பண்பு என்றும், இத்தகைய இதயம், கடந்த காலத்திலே தன்னை மூழ்கச்செய்து விடாது, மற்றும், நிகழ்காலத்தில் மட்டும் வாழ்ந்துகொண்டிருக்காது, மாறாக, வருங்காலத்தை எவ்வாறு நோக்கவேண்டும் என்பதை அறிந்திருக்கும் என்றும், திருத்தந்தை கூறியுள்ளார்.

கிறிஸ்தவர்களுக்கு, நாளை என்பது, மீட்படைந்த வாழ்வாகும் என்று விளக்கிய திருத்தந்தை, திருஅவையில் இருப்பது என்பது, படைப்பாற்றல் திறனோடும், மறுஉலக வாழ்வு பற்றிய உணர்வோடும் வாழ்வதாகும் என்றும் கூறினார்.

மேலும், திருஅவையின் சமுதாயக் கோட்பாட்டின் கடந்த ஒன்பது ஆண்டு விழாக்களை ஏற்பாடு செய்த, அருள்பணி Adriano Vincenzi அவர்கள், இவ்வாண்டு பிப்ரவரி மாதத்தில் உயிரிழந்தது பற்றியும், தனது காணொளிச் செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, அவர் தொடங்கிவைத்த இந்த விழாவின் கனிகள், மற்றவர்களால் அறுவடை செய்யப்படுகின்றன என்று கூறியுள்ளார். 

வெரோனா நகரில் நடைபெறும் இந்த விழா, நவம்பர் 28, இச்சனிக்கிழமையன்று நிறைவடையும்.

27 November 2020, 14:34