தேடுதல்

திருத்தந்தையின் மறைக்கல்வியுரை . 181120 திருத்தந்தையின் மறைக்கல்வியுரை . 181120  (ANSA)

மறைக்கல்வியுரை - இறைவேண்டலின் பெண்மணி, அன்னை மரியா

“உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்” என அன்னை மரியா கூறிய இந்த எளிய வார்த்தைகள், நம் இறைவேண்டலுக்கு ஒரு நல்லதொரு எடுத்துக்காட்டாக உள்ளன.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

இத்தாலிய அரசால் கொணரப்பட்டுள்ள, கொரோனா கட்டுப்பாடு விதிகளை மதிக்கும் விதமாகவும், மக்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்க உதவும் நோக்கத்திலும், இந்த மாதம், முதல் புதன்கிழமையிலிருந்து, தன் நூலக அறையிலிருந்தே, நேரடி காணொளி வழியாக மறைக்கல்வியுரையை வழங்கி வருகிறார் திருத்தந்தை பிரான்சிஸ். இறைவேண்டல் குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிவரும் தொடரில், நவம்பர் 18, இப்புதனன்று, 'இறைவேண்டலின் பெண்மணி, அன்னை மரியா' என்ற தலைப்பில் தன்  சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டார். முதலில் லூக்கா நற்செய்தி, பிரிவு இரண்டிலிருந்து ஒரு பகுதி வாசிக்கப்பட்டது.

ஆண்டவருடைய திருச்சட்டப்படி எல்லாவற்றையும் செய்துமுடித்த பின்பு அவர்கள் கலிலேயாவிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிச் சென்றார்கள். குழந்தையும் வளர்ந்து வலிமை பெற்று ஞானத்தால் நிறைந்து கடவுளுக்கு உகந்ததாய் இருந்தது. […] அவருடைய தாய் இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார் (லூக் 2:39-40,51), என்ற பகுதி பல்வேறு மொழிகளில் வாசிக்கப்பட்டபின், திருத்தந்தையின் உரை தொடர்ந்தது.

மறைக்கல்வியுரை

அன்பு சகோதரரே, சகோதரிகளே, இறைவேண்டல் குறித்த நம் மறைக்கல்வி தொடரில் இன்று,  அன்னை மரியா, இறைவேண்டலின் பெண்மணியாக எவ்வாறு திகழ்கிறார், நம் இறைவேண்டல் வாழ்வில் அவர் எவ்வாறு ஓர் எடுத்துக்காட்டாக உள்ளார் என்பது குறித்து சிந்திப்போம். தன் இளம்பருவத்திலிருந்தே அன்னை மரியா, தாழ்ச்சியுடன் இறைவேண்டலை மேற்கொள்பவராகவும், கடவுள் காட்டும் வழிகளுக்கெல்லாம் தன் உள்ளத்தைத் திறந்தவராகவும் செயல்பட்டார். இறைமகனுக்குத் தாயாகவிருக்கும் செய்தியைத் தாங்கி கபிரியேல் வானதூதர் அன்னை மரியாவை நெருங்கியபோது, அவர் இறைவேண்டலில் ஈடுபட்டிருந்ததைக் காண்கிறோம். “உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” என அன்னை மரியா கூறிய இந்த எளிய வார்த்தைகள், நம் இறைவேண்டலுக்கு ஒரு நல்லதொரு எடுத்துக்காட்டாக உள்ளன. இறைவிருப்பத்தில் முழுநம்பிக்கை கொண்டு, அவருக்கு நம் இதயங்களைத் திறந்தவர்களாகச் செயல்படுவதை இந்த இறைவேண்டலின் வார்த்தைகள் காட்டி நிற்கின்றன. இயேசுவின் அனைத்து இக்கட்டான வேளைகளிலும்,  சிலுவையின் அடிவரைக்கூட,  அன்னை மரியா தன் இறைவேண்டலுடன் மகனுக்கு அருகிலேயே இருந்தார். உயிர்ப்பின் மகிழ்வில் அன்னைமரியா, தன் இறைவேண்டலுடன், புதிதாக பிறந்த திருஅவையுடன் இணைந்து நடந்தார். தூய ஆவியாரின் வல்லமைக்கு தன் இதயத்தைத் திறந்தவராகச் செயல்பட்டதன் வழியாக, இறைவனின் தாயாம் மரியா, திருஅவையின் தாயாக மாறினார். 'மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார்' (லூக் 2:19) என உரைக்கிறார், புனித லூக்கா. நம் இதயங்களும், அன்னை மரியாவின் மாசற்ற இதயத்துடன் ஒன்றித்திருந்து,   இறைவிருப்பத்திற்குத் தங்களை திறந்ததாகச் செயல்படுவதாக. இறைவிருப்பத்திற்கு நம் இதயத்தைத் திறந்தவர்களாகச் செயல்படுவது என்பது,  இயேசுவின் வாழ்வு, மற்றும், மீட்புப்பணியின் மறையுண்மைகளை ஆழ்ந்து தியானிப்பதன் வழி இடம்பெறுவதாகும்.

இவ்வாறு, தன் மறைக்கல்வியுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதலில், நம்மை விட்டுப்பிரிந்து விண்ணுலகம் சென்றுள்ள நம் உறவினர்கள், மற்றும், நண்பர்களுக்காக, இந்த நவம்பர் மாதத்தில் சிறப்பான விதத்தில் இறைவேண்டல் செய்வோம் என அழைப்புவிடுத்தார். மேலும், வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பெருங்கோவிலும், உரோம் நகரின் புனித பவுல் பசிலிக்காப் பெருங்கோவிலும் இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட விழா, இப்புதனன்று சிறப்பிக்கப்பட்டதை நினைவூட்டிய திருத்தந்தை, விசுவாசிகள் ஒன்றுகூடும் இடமாக இருக்கும் ஆலயங்கள், நாம் ஒவ்வொருவரும் இறைவனின் உயிருள்ள உறைவிடங்கள் என்ற விழிப்புணர்வைத் தருவதாக உள்ளன, என எடுத்துரைத்தார். இறுதியில், முதியோர், நோயுற்றோர், இளையோர், புது மணத்தம்பதியர் என அனைவருக்கும் தன வாழ்த்துக்களை தெரிவித்து, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

18 November 2020, 11:16