UISG - துறவு சபைகளின் உலகத் தலைவர்கள் அமைப்பினரின் இணையம் UISG - துறவு சபைகளின் உலகத் தலைவர்கள் அமைப்பினரின் இணையம் 

கல்வி கருத்தரங்கிற்கு திருத்தந்தையின் செய்தி

குழந்தையின் தனித்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து சொல்லித்தரப்படும் கல்வியே அவர்களின் வளர்ச்சியை உறுதிப்படுத்தும் என்பதால், அத்தகைய கல்வியை துறவியர் முதன்மைப்படுத்தவேண்டும் - திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வைத் தெரிவு செய்துள்ளவர்கள், கல்விப்பணியில் முன்னிலை வகிப்பதை இவ்வுலகம் அறியும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 12 இவ்வியாழனன்று, உரோம் நகரில், இணையவழி நடைபெறும் பன்னாட்டு கருத்தரங்கிற்கு அனுப்பியுள்ள செய்தியில் கூறினார்.

துறவு சபைகளின் உலகத் தலைவர்கள் அமைப்பு, 'உலகளாவிய கல்வி ஒப்பந்தத்தை மீண்டும் கட்டியெழுப்ப' என்ற மையக்கருத்துடன், நவம்பர் 12 இவ்வியாழன் முதல், நவம்பர் 14 இச்சனிக்கிழமை முடிய உரோம் நகரில் நடத்தும் ஒரு இணையவழி கருத்தரங்கிற்கு திருத்தந்தை இச்செய்தியை அனுப்பியுள்ளார்.

இறைவனின் தாயின் வறிய அருள்பணியாளர்கள் என்ற துறவு சபையின் உலகத்தலைவரான அருள்பணி Pedro Aguado Cuesta அவர்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பிய இச்செய்தி, இக்கருத்தரங்கின் துவக்க அமர்வில் வாசிக்கப்பட்டது.

இத்துறவு சபையை உருவாக்கிய புனித José de Calasanz அவர்கள், குழந்தைகளுக்கென நிறுவிய பள்ளி, அக்குழந்தைகளில், அறிவையும், கலாச்சாரத்தையும், வளர்ப்பதற்கு ஆணிவேராக அமைந்தது என்பதை, திருத்தந்தை தன் செய்தியின் துவக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

உலகளாவிய கல்வி ஒப்பந்தத்தின் பல்வேறு அம்சங்களை, கூர்மைப்படுத்துதல், வரவேற்றல், மற்றும் ஈடுபாடு கொள்ளுதல் என்ற மூன்று செயல்பாடுகள் வழியே விளக்கிக் கூறலாம் என்று தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, இந்த மூன்று செயல்பாடுகளையும் சுருக்கமாக விவரித்துள்ளார்.

கூர்மைப்படுத்துதல் என்பதை விளக்கும்போது, ஒவ்வொரு குழந்தையின் தனித்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து சொல்லித்தரப்படும் கல்வியே அவர்களின் வளர்ச்சியை உறுதிப்படுத்தும் என்பதால், அத்தகைய கல்வியை துறவியர் முதன்மைப்படுத்தவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

வரவேற்றல் என்ற செயலில், கல்வி கற்கும் குழந்தைகள், இளையோர், அவர்களின் பெற்றோர் என்ற பல தரப்பினரையும் வரவேற்று, அவர்களின் குரல்களுக்கு செவிமடுப்பது முக்கியம் என்று திருத்தந்தை விளக்கம் அளித்துள்ளார்.

பிறருக்கு செவிமடுப்பது, வெறும் செவிவழி கேட்பது மட்டுமல்ல, மாறாக, தாங்கள் கேட்டதற்கு ஏற்ப, செயல்களில் தங்களையே ஈடுபடுத்திக்கொள்வதில் வெளிப்படும் என்பதை கல்வி ஒப்பந்தத்தின் மூன்றாவது செயல்பாடாக கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

குழந்தைகளும், இளையோரும், அவர்களைச் சுற்றியுள்ள உலகின், அரசியல், பொருளாதாரம், முன்னேற்றம் என்ற பலதுறைகளில் நிகழ்வதை கூர்ந்து கவனித்து, செவிமடுத்து, அவற்றில் தங்களையே ஈடுபடுத்திக்கொள்ளும் வகையில் அவர்களை உருவாக்குவதே கல்வியின் முக்கிய பணி என்ற கருத்துடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் செய்தியை நிறைவு செய்துள்ளார்.

நவம்பர் 12, இவ்வியாழன் முதல், 14 இச்சனிக்கிழமை முடிய மூன்று நாள்களிலும் ஒவ்வொரு நாளும் உரோம் உள்ளூர் நேரம் பிற்பகல் 2 மணி முதல் 6 மணி முடிய இணையத்தளம் வழியே இக்கருத்தரங்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 November 2020, 14:42