பசி, மானுடத்தை வெட்கத்துக்குள்ளாக்கும் ஓர் அவலம்

பசியை அகற்றவும், மிக வறிய நாடுகளின் வளர்ச்சிக்கும் உதவும் வகையில், ஆயுதங்களுக்கும், இராணுவத்திற்கும் செலவழிக்கப்படும் பணத்தைக்கொண்டு, உலகளாவிய நிதியமைப்பு ஒன்று உருவாக்கப்படவேண்டும் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பசி, மனித சமுதாயத்திற்கு பெரும் துன்பம் தருகின்ற ஓர் அவலம் மட்டுமல்ல, வெட்கத்துக்குரியதுமாகும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் அமைப்பு ஒன்றிற்கு அனுப்பிய காணொளிச் செய்தியில் கூறியுள்ளார்.

அக்டோபர் 16, இவ்வெள்ளியன்று கடைப்பிடிக்கப்பட்ட, உலக உணவு நாளை முன்னிட்டு, FAO எனப்படும், ஐ.நா.வின் உணவு மற்றும், வேளாண்மை அமைப்பின் தலைமை இயக்குனர் Qu Donguy அவர்களுக்கு திருத்தந்தை அனுப்பிய செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.

உரோம் நகரில் அமைந்துள்ள FAO அமைப்பு, தன் 75வது ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் இந்நாளில், கடந்த 75 ஆண்டுகளாக, உலகில் பசியை அகற்றவும், உணவுப் பாதுகாப்பின்மை, மற்றும், ஊட்டச்சத்துப் பற்றாக்குறையைப் போக்கவும், அந்த அமைப்பு ஆற்றிவருகின்ற பணிகளை, திருத்தந்தை பாராட்டியுள்ளார்.  

FAO அமைப்பின் பணிகளுக்கு பாராட்டு

உணவுகளை உற்பத்தி செய்தால் மட்டும் போதாது, மாறாக, நீடித்த மற்றும், நலமான உணவுகள் அனைவருக்கும் கிடைப்பதற்கு, உணவு பாதுகாப்பு அமைப்புகள் உருவாக்கப்படவேண்டும் என்பதை, FAO அமைப்பு கற்றுக்கொண்டுள்ளது என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

FAO அமைப்பு, உலக உணவு திட்ட அமைப்பு (WFP), வேளாண் வளரச்சி உலகளாகிய நிதியகம் (IFAD) போன்றவை மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு, குறிப்பாக, இந்த கொள்ளைநோய் காலத்தில், ஆதரவு வழங்கப்படவேண்டியது மிகவும் முக்கியம் என்று கூறியுள்ள திருத்தந்தை, உலகில் பசியை அகற்றும் சவால்கள் எதிர்கொள்ளும் முரண்பாடுகளையும் குறிப்பிட்டுள்ளார். 

அறிவியலின் பல்வேறு துறைகளில், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முன்னேற்றம் இடம்பெறுவதற்கு நாம் சான்றுகளாக உள்ளோம், அதேநேரம், உலகம், எண்ணற்ற மனிதாபிமான நெருக்கடிகளையும் சந்திக்கின்றது என்றுரைத்துள்ள திருத்தந்தை, பசி மற்றும், உணவுப் பாதுகாப்பின்மை ஆகிய பிரச்சனைகளை களைவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அண்மை பத்தாண்டுகளில் நல்ல பலனைத் தந்திருந்தாலும், அது தற்போதைய கொள்ளைநோயால், மேலும் மோசமடைந்துள்ளது என்றார்.

உலகில் பசிக்கு காரணம்

பசி, மனித சமுதாயத்திற்கு பெருந்துன்பத்தைத் தருவது மட்டுமல்ல, வெட்கத்துக்குரியதுமாகும் என்றும், இப்பூமியின் பலன்கள் சமமாகப் பகிர்ந்துகொள்ளப்படாதது, வேளாண் துறையில் முதலீடுகள் பற்றாக்குறை, காலநிலை மாற்றத்தின் எதிர்விளைவு, இப்பூமிக்கோளத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெறும் போர்கள் ஆகியவையும், இத்துன்பத்திற்குக் காரணம் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

அதேவேளை, டன்கள் கணக்கில் உணவுப்பொருள்கள் வீணாக்கப்படுகின்றன, இந்த அவலங்களுக்குமுன் நாம் உணர்வற்று இருக்க இயலாது, இந்த நிலைக்கு நாம் அனைவருமே காரணம் என்று கூறியுள்ள திருத்தந்தை, உலகில் பசியைப் போக்குவதற்கு, தெளிவான கொள்கைகளும், நடவடிக்கைகளும் அவசியம் என்று கூறியுள்ளார்.

பசியை அகற்ற நிதியமைப்பு

பசியை அகற்றவும், மிக வறிய நாடுகளின் வளர்ச்சிக்கும் உதவும் வகையில், ஆயுதங்களுக்கும், இராணுவத்திற்கும் செலவழிக்கப்படும் பணத்தைக்கொண்டு, உலகளாவிய நிதியமைப்பு ஒன்று அமைப்பதற்கு, துணிவுடன் தீர்மானம் எடுக்கப்படவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த தீர்மானம், பல போர்களைத் தவிர்க்கும், மற்றும், மாண்புள்ள வாழ்வைத் தேடி இடம்பெயரும் நம் சகோதரர், சகோதரிகளை அங்கேயே வாழ வைக்கும் என்றுரைத்துள்ள திருத்தந்தை, FAO அமைப்பின் பணிகள், மேலும் நல்ல பலன்களை வெளிக்கொணர தனது ஆசீரையும், செபங்களையும் தெரிவித்து இந்த காணொளிச் செய்தியை நிறைவு செய்துள்ளார்.

உலக உணவு நாள் 2020 கருப்பொருள்

"சாகுபடி செய்தல், வளர்த்தல், பாதுகாத்தல் மற்றும், ஒன்றுசேர்ந்து நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளே நம் வருங்காலம்" என்ற தலைப்பில், இவ்வாண்டு உலக உணவு நாள் சிறப்பிக்கப்பட்டது.

ஊட்டச்சத்து மற்றும், உணவுப் பற்றாக்குறை ஆகியவற்றை ஒழிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, 1945ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி, FAO எனப்படும், ஐ.நா.வின் உணவு மற்றும், வேளாண்மை அமைப்பு உருவாக்கப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 October 2020, 10:20