திருத்தந்தையின் "அனைவரும் உடன்பிறந்தோர்" என்ற திருமடல் திருத்தந்தையின் "அனைவரும் உடன்பிறந்தோர்" என்ற திருமடல் 

"அனைவரும் உடன்பிறந்தோர்" – டுவிட்டர் செய்திகள்

அசிசி நகர் புனித பிரான்சிஸ், ஞாயிறு நற்செய்தி, மற்றும், "அனைவரும் உடன்பிறந்தோர்" என்ற திருமடல் ஆகியவற்றை மையப்படுத்தி, ஏழு டுவிட்டர் செய்திகளை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அக்டோபர் 4 இஞ்ஞாயிறு, மற்றும், அக்டோபர் 5 இத்திங்கள், ஆகிய இரு நாள்களும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அசிசி நகர் புனித பிரான்சிஸ், ஞாயிறு நற்செய்தி மற்றும், இஞ்ஞாயிறன்று வெளியிடப்பட்ட "அனைவரும் உடன்பிறந்தோர்" என்ற திருமடல் ஆகியவற்றை மையப்படுத்தி ஏழு டுவிட்டர் செய்திகளை வெளியிட்டுள்ளார்.

அக்டோபர் 5 இத்திங்களன்று திருப்பலியில் வழங்கப்பட்ட நல்ல சமாரியர் உவமையை, "அனைவரும் உடன்பிறந்தோர்" என்ற ஹாஷ்டாக்குடன் வெளியிட்ட திருத்தந்தை, ஒவ்வொரு தனி மனிதரும் மற்றவர்களோடு நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளனர் என்பதை நல்ல சமாரியர் சொல்லித்தருகிறார் என்ற கருத்தை தன் டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.

"பிறரது துயரங்கள் மீது அக்கறையற்று வாழஇயலாது, ஒருவரும் தன் வாழ்வில் தீண்டத்தகாதவர் என்ற உணர்வுடன் வாழ்வதற்கு நாம் அனுமதிக்கக்கூடாது" என்ற சொற்களை, இத்திங்களன்று வெளியிட்ட இரண்டாவது டுவிட்டர் செய்தியில் பதிவு செய்திருந்தார் திருத்தந்தை.

மேலும், இஞ்ஞாயிறன்று வெளியிட்ட முதல் டுவிட்டர் செய்தியில், அக்டோபர் 4ம் தேதி சிறப்பிக்கப்பட்ட அசிசி நகர் புனித பிரான்சிஸ் திருநாளையொட்டி, "திருமறை நூல்களுக்கு பிரமாணிக்கமாக இருந்த அசிசி நகர் புனித பிரான்சிஸ், இயற்கை என்ற நூலின் வழியே, இறைவன் பேசுவதைக் காணவும், அவரது அளவற்ற அழகையும், நன்மைத்தனத்தையும் படைப்பின் வழியே உணரவும் அழைப்பு விடுக்கிறார்" என்ற சொற்களை திருத்தந்தை வெளியிட்டார்.

ஞாயிறு நற்செய்தியில் கூறப்பட்டிருந்த கொடிய குத்தகைக்காரர் உவமையை மையப்படுத்தி தன் 2வது டுவிட்டர் செய்தியை வெளியிட்ட திருத்தந்தை, 3,4,5 ஆகிய மூன்று டுவிட்டர் செய்திகளை, "அனைவரும் உடன்பிறந்தோர்" என்ற திருமடலையொட்டி வெளியிட்டார்.

மூன்றாவது டுவிட்டர் செய்தியில், இத்திருமடலை இணையதளத்தில் வாசிக்க உதவும் தொடர்பு முகவரியை வெளியிட்ட திருத்தந்தை, Laudato Si, மற்றும், Fratelli Tutti என்ற இரு திருமடல்களையும் வெளியிட, அசிசி நகர் புனித பிரான்சிஸ் தனக்கு உந்து சக்தியாக இருந்தார் என்ற எண்ணத்தை நான்கு, மற்றும் ஐந்தாவது டுவிட்டர் செய்திகளாக வெளியிட்டார்.

இதற்கிடையே, எகிப்து நாட்டின் Al-Azhar பல்கலைக்கழகத்தின் தலைமைகுரு Ahmad Al-Tayyeb அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள "அனைவரும் உடன்பிறந்தோர்" என்ற திருமடலைப் பாராட்டி டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.

"என் சகோதரர் பிரான்சிஸ் அவர்கள், "அனைவரும் உடன்பிறந்தோர்" என்ற திருமடல் வழியே, மனித சமுதாயத்தின் மனசாட்சியை மீண்டும் நமக்குத் தந்துள்ளார்" என்ற சொற்கள், Al-Tayyeb அவர்கள், இஞ்ஞாயிறன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் பதிவாகியுள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 October 2020, 14:49