தேடுதல்

Vatican News
குழந்தை இயேசுவின் புனித தெரேசா குழந்தை இயேசுவின் புனித தெரேசா  

குழந்தை இயேசுவின் புனித தெரேசா திருநாள் டுவிட்டர் செய்தி

"குழந்தை இயேசுவின் புனித தெரேசா, அன்பின் சிறிய வழியைப் பின்பற்ற நம்மை அழைக்கிறார்" – திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அக்டோபர் 1, இவ்வியாழனன்று, குழந்தை இயேசுவின் புனித தெரேசா அவர்களின் திருநாள் சிறப்பிக்கப்பட்டதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புனிதரின் வாழ்வை நாம் பின்பற்றும்படி, தன் டுவிட்டர் செய்தி வழியே அழைப்பு விடுத்துள்ளார்.

"குழந்தை இயேசுவின் புனித தெரேசா, அன்பின் சிறிய வழியைப் பின்பற்ற நம்மை அழைக்கிறார். அமைதியையும், நட்பையும் விதைக்கும் ஒரு புன்னகை, அல்லது ஒரு சிறிய அன்புச்செயல் ஆகியவை நம்மைவிட்டு நழுவிச்செல்லாமல் பார்த்துக்கொள்ள அழைக்கிறார்" என்ற சொற்களை, திருத்தந்தை தன் டுவிட்டர் தளத்தில் பதிவு செய்திருந்தார்.

குழந்தை இயேசுவின் புனித தெரேசா

1873ம் ஆண்டு, சனவரி 2ம் தேதி, பிரான்ஸ் நாட்டின் Alençon என்ற ஊரில் பிறந்த தெரேசா, தன் நான்காவது வயதில் தாயை இழந்ததால், அவரது தந்தையும், மூத்த சகோதரியும் அவரை வளர்த்தனர்.

1886ம் ஆண்டு கிறிஸ்து பிறப்பு நாளன்று, இறைவனின் ஆழ்ந்த அனுபவத்தைப் பெற்ற இளம்பெண் தெரேசா, அதற்கடுத்த ஆண்டு, 14வயது நிறைந்த இளம்பெண்ணாக, உரோம் நகருக்கு மேற்கொண்ட ஒரு திருப்பயணத்தின்போது, திருத்தந்தை 13ம் லியோ அவர்களிடம், தான் துறவு சபையில் இணைவதற்குத் தேவையான உத்தரவை வழங்குமாறு கேட்டார்.

தன் 15வது வயதில், Lisieux என்ற ஊரில், கார்மேல் துறவு சபையில் இணைந்த தெரேசா, தன் வாழ்நாள் முழுவதையும், அத்துறவு மடத்தில், செபத்திலும், தவ முயற்சிகளிலும் கழித்தார்.

செபங்கள் வழியே, மறைபரப்புப் பணியாளராக

ஒரு மறைபரப்புப் பணியாளராக வாழ்ந்து, மறைசாட்சியாக உயிர் துறக்கும் கனவுகளுடன் வாழ்ந்த இளம்பெண் தெரேசா, தன் துறவு மடத்தில் மேற்கொள்ளும் செபங்கள் வழியே, அந்தக் கனவுகளை நிறைவேற்ற முடியும் என்பதை, இயேசு தனக்கு உணர்த்தினார் என்று, தன் குறிப்பேட்டில் பதிவு செய்துள்ளார்.

1895ம் ஆண்டு ஜூன் 9ம் தேதி, மூவொரு இறைவன் பெருவிழாவன்று, தன்னை இறைவனின் இரக்கம் நிறைந்த அன்புக்கு ஒரு பலிப்பொருளாக அர்ப்பணித்ததை தொடர்ந்து, அடுத்த ஆண்டு முதல், அவர், காசநோயினால் தாக்கப்பட்டதை உணர்ந்தார்.

தன் நோயின் வழியே இறைவன் தன்னை ஒரு பலிப்பொருளாக மாற்றுகிறார் என்பதை உணர்ந்த தெரேசா அவர்கள், 1897ம் ஆண்டு, செப்டம்பர் 30ம் தேதி, இந்த நோயின் காரணமாக இறைவனடி சேர்ந்தார்.

அருளாளராக, புனிதராக, மறைவல்லுனராக...

இளம்பெண் தெரேசா அவர்களின் புண்ணிய வாழ்வைக் குறித்து அறிந்து, அவர்மீது ஆழ்ந்த மதிப்பு கொண்டிருந்த திருத்தந்தை 11ம் பயஸ் அவர்கள், அவரை, 1923ம் ஆண்டு, ஏப்ரல் 29ம் தேதி, ஓர் அருளாளராகவும், 1925ம் ஆண்டு, மே 17ம் தேதி, ஒரு புனிதராகவும் உயர்த்தினார்.

இவரது மரணத்தின் 100ம் ஆண்டு சிறப்பிக்கப்பட்ட 1997ம் ஆண்டு, திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், புனித தெரேசாவை, திருஅவையின் மறைவல்லுனர் என்று அறிவித்தார். கத்தோலிக்கத் திருஅவையில், சியென்னா நகர் புனித கேத்தரீன், மற்றும் அவிலாவின் புனித தெரேசா ஆகியோருக்குப் பின், பெண் புனிதர்களில் மூன்றாவதாக, குழந்தை இயேசுவின் புனித தெரேசா மறைவல்லுனராக உயர்த்தப்பட்டவர்.

புனித தெரேசா அவர்களின் பெற்றோரும் புனிதர்களாக...

குழந்தை இயேசுவின் புனித தெரேசா அவர்களின் பெற்றோர், Louis Martin, மற்றும் Marie Zelie Guerin Martin ஆகிய இருவரையும், 2015ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தம்பதியராக இணைந்து புனிதர் நிலைக்கு உயர்த்தினார்.

குழந்தை இயேசுவின் புனித தெரேசாவும், இயேசு சபைத் துறவியான புனித பிரான்சிஸ் சேவியரும் மறைபரப்புப்பணி நாடுகளின் பாதுகாவலர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.

01 October 2020, 14:32