அப்போஸ்தலிக்க மாளிகையிலுள்ள  நூலகத்திலிருந்து மறைக்கல்வியுரை அப்போஸ்தலிக்க மாளிகையிலுள்ள நூலகத்திலிருந்து மறைக்கல்வியுரை  

திருத்தந்தையின் புதன் மறைக்கல்வியுரை மீண்டும் நேரடி ஒளிபரப்பு

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புதன் மறைக்கல்வியுரை, நவம்பர் 4, வருகிற புதன்கிழமையிலிருந்து, வத்திக்கானின் அப்போஸ்தலிக்க மாளிகையிலுள்ள நூலகத்திலிருந்து நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

துன்பங்களை எதிர்கொள்ளும்போது, எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, அடுத்தவருக்கு உதவிக்கரம் நீட்டவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அக்டோபர் 30, இவ்வெள்ளியன்று தன் டுவிட்டர் செய்தியை, 'அனைவரும் உடன்பிறந்தோர்' (#FratelliTutti) என்ற 'ஹாஷ்டாக்'குடன் வெளியிட்டுள்ளார்.

“நமது அனைத்து வேறுபாடுகளைப் புறந்தள்ளுவதற்கும், துன்பங்களை எதிர்கொள்கையில், கேள்விகள் எதுவும் கேட்காமல், மற்றவருக்கு அருகில் சென்று உதவுவதற்கும், இயேசு நமக்கு அழைப்பு விடுக்கிறார்” என்ற சொற்களை, திருத்தந்தை, தன் டுவிட்டர் செய்தியாக பதிவு செய்திருந்தார்.

புதன் மறைக்கல்வியுரை

மேலும், கோவிட்-19 கொள்ளைநோய் தொடர்ந்து பரவி வருவதால், அதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புதன் மறைக்கல்வியுரை, மீண்டும் இணையதளம் வழியாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புதன் மறைக்கல்வியுரை, நவம்பர் 4, வருகிற புதன்கிழமையிலிருந்து, வத்திக்கானின் அப்போஸ்தலிக்க மாளிகையிலுள்ள நூலகத்திலிருந்து நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று, அக்டோபர் 29, இவ்வியாழனன்று,  திருப்பீட தகவல் தொடர்பகத்தின் இயக்குனர் மத்தேயோ புரூனி அவர்கள் அறிவித்தார்.  

அக்டோபர் 21, புதன்கிழமையன்று, வத்திக்கானின் திருத்தந்தை புனித 6ம் பவுல் அரங்கத்தில் நடைபெற்ற மறைக்கல்வியுரையில், கோவிட்-19 கொள்ளைநோயால் தாக்கப்பட்ட ஒருவர் கலந்துகொண்டதை முன்னிட்டும், வருங்காலத்தில் புதன்  மறைக்கல்வியுரைகளில் பங்குபெறுவோரின் நலவாழ்வை கருத்தில் கொண்டும், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று, புரூனி அவர்கள் கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் புதன் மறைக்கல்வியுரைகளை, கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதியிலிருந்து அப்போஸ்தலிக்க நூலகத்திலிருந்து வழங்கத் தொடங்கினார். பின்னர், 189 நாள்கள் சென்று, செப்டம்பர் 2ம் தேதியிலிருந்து வத்திக்கானின் புனித தமாசோ வளாகத்திலும், அதன்பின்னர் அக்டோபர் 7ம் தேதியிலிருந்து திருத்தந்தை புனித 6ம் பவுல் அரங்கத்திலும் அதை வழங்கினார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 October 2020, 11:15