புதன் மறைக்கல்வியுரை 211020 புதன் மறைக்கல்வியுரை 211020 

நன்றியுணர்வு இல்லாத உடன்பிறந்த உணர்வு வாழ்க்கை

சிலே நாட்டில் அமைதியும், கலந்துரையாடலும் இடம்பெறுவதற்கு, தலத்திருஅவை ஆற்றிவரும் பணிகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஊக்குவித்துள்ளார். அந்நாட்டு மக்களுடன் திருத்தந்தை ஒருமைப்பாட்டுணர்வு கொண்டிருக்கிறார் - சான் சந்தியாகோ பேராயர் Celestino Aós

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

“அனைவரும் உடன்பிறந்தோர்” (FratelliTutti) என்ற தனது புதிய திருமடலை மையப்படுத்தி, தன் டுவிட்டர் செய்திகளை வெளியிட்டுவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்டோபர் 23, இவ்வெள்ளியன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், உடன்பிறந்த உணர்வற்ற வாழ்க்கை, வெறித்தனமான வர்த்தக முறையாக மாறிவிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“நன்றியுணர்வு இல்லாத உடன்பிறந்த வாழ்க்கை, நாம் என்ன கொடுக்கிறோம், என்ன திரும்பிப் பெறுகிறோம் என்பதைத் தொடர்ந்து கணக்குப் பார்க்கும், வெறித்தனமான வர்த்தக வடிவாக மாறிவிடும். அதற்கு மாறாக, கடவுள், தமக்கு பிரமாணிக்கமற்று இருப்பவர்களுக்கும்கூட, எதையும் எதிர்பார்க்காமல் இலவசமாக வழங்குகிறார், அவர் நல்லோர் மேலும், தீயோர் மேலும், தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார்” (மத். 5:45) என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

சிலே மக்களுடன் திருத்தந்தை

மேலும், சிலே நாட்டில், அமைதியும், கலந்துரையாடலும் இடம்பெறுவதற்கு, தலத்திருஅவை ஆற்றிவரும் பணிகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஊக்குவித்துள்ளார் என்றும், அந்நாட்டு மக்களுடன் திருத்தந்தை ஒருமைப்பாட்டுணர்வு கொண்டுள்ளார் என்றும், சான் சந்தியாகோ உயர்மறைமாவட்ட பேராயர் Celestino Aós அவர்கள் கூறினார்.

அண்மையில் சந்தியாகோ உயர்மறைமாவட்டத்தில் இரு ஆலயங்கள் எரிக்கப்பட்டது, கட்டடங்கள் சேதமானது, பங்குத்தள மக்களின் துன்பங்கள் ஆகியவற்றை நினைவுகூர்ந்த திருத்தந்தை, நாம் அனைவரும் உடன்பிறந்த உணர்வோடு வாழவேண்டியதன் முக்கியத்துவத்தை, தன்னுடன் மேற்கொண்ட தொலைப்பேசி அழைப்பில் வலியுறுத்தினார் என்பதையும், பேராயர் Aós அவர்கள் குறிப்பிட்டார்.

சிலே நாட்டில், அக்டோபர் 25 வருகிற ஞாயிறன்று நடைபெறும் தேர்தலில், குடிமக்கள் தங்களது வாக்குரிமையை செயல்படுத்துமாறு, பேராயர் Aós அவர்கள் கேட்டுக்கொண்டார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 October 2020, 14:33