C6 கர்தினால்கள் அவை C6 கர்தினால்கள் அவை 

C6 கர்தினால்கள் அவையின் மெய்நிகர் கூட்டம் ஆரம்பம்

வத்திக்கானில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற 33வது ஆலோசனைக் கூட்டத்தில் பங்குபெற்ற கர்தினால்கள், திருப்பீடத் தலைமையகம் பற்றிய புதிய திருத்தூதுக் கொள்கை விளக்கத் தொகுப்பை ஆழ்ந்து வாசித்து பரிசீலனை செய்தனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அண்மையில் வெளியிடப்பட்டுள்ள “அனைவரும் உடன்பிறந்தோர் (Fratelli tutti)” என்ற தனது புதிய திருமடலை மையப்படுத்தி, தன் டுவிட்டர் செய்திகளை வெளியிட்டுவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  அக்டோபர் 13, இச்செவ்வாயன்று, உடன்பிறந்த உணர்வுக்குத் தேவையான, கனிவு, மென்மை போன்ற பண்புகளை மையப்படுத்தி, தன் டுவிட்டர் செய்தியைப் பதிவுசெய்துள்ளார்.

“கனிவு என்பது அன்பு, ஓர் இயக்கம். இது, இதயத்திலிருந்து துவங்கி, கண்கள், காதுகள், மற்றும், கரங்கள் ஆகியவற்றை அடைகிறது, கனிவு என்பது ஒரு பாதை. இது, துணிவான மற்றும், வல்லமைமிக்க ஆண்களும் பெண்களும் பயணம் மேற்கொண்டுள்ள பாதையாகும்” என்ற சொற்கள் “அனைவரும் உடன்பிறந்தோர் (#FratelliTutti)” என்ற ஹாஷ்டாக்குடன் திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

கர்தினால் ஆலோசனை அவை

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, திருப்பீடத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் ஆலோசனை வழங்கும் கர்தினால்கள் அவையின் (C6), மெய்நிகர் கூட்டம், அக்டோபர் 13, இச்செவ்வாய் பிற்பகலில் தொடங்கியது என்று, திருப்பீட தகவல் தொடர்பகத்தின் இயக்குனர் மத்தேயோ புரூனி அவர்கள் அறிவித்துள்ளார்.

கோவிட்-19 கொள்ளைநோய் கட்டுப்பாட்டு விதிமுறைகளால், வலைத்தளம் வழியாக நடைபெறும் இக்கூட்டத்தில், நலவாழ்வு பிரச்சனை அதிகரித்துள்ள இக்காலக்கட்டத்தில், இந்தக் கூட்டத்தை எவ்வாறு தொடர்ந்து நடத்துவது என்பது பற்றி கர்தினால்கள் கலந்துரையாடுகின்றனர் என்று, புரூனி அவர்கள் கூறினார்.

வத்திக்கானில், கடந்த பிப்ரவரி மாதம் 17ம் தேதி முதல், 19ம் தேதி முடிய நடைபெற்ற 33வது கூட்டத்தில், கர்தினால்கள் பியெத்ரோ பரோலின், ஆஸ்கர் ரொட்ரிகெஸ் மாராதியாகா, ரெய்ன்ஹார்டு மார்க்ஸ், ஜான் பேட்ரிக் ஓ’மாலே, ஜூசப்பே பெர்த்தெல்லோ, ஆசுவால்டு கிரேசியஸ் ஆகியோர் பங்குபெற்று, திருப்பீடத் தலைமையகம் பற்றிய புதிய திருத்தூது கொள்கை விளக்கத் தொகுப்பை ஆழ்ந்து வாசித்து பரிசீலனை செய்தனர்.

இந்த புதிய திருத்தூது கொள்கை விளக்கம் அங்கீகரிக்கப்பட்டால், இது, திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், 1988ம் ஆண்டு ஜூன் மாதம் 28ம் தேதி வெளியிட்ட Pastor Bonus  திருத்தூது கொள்கை விளக்கத்திற்குப் பதிலாகச் செயலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 October 2020, 14:44