தேடுதல்

சாயெது (Zayed) விருது குழு சாயெது (Zayed) விருது குழு 

திருத்தந்தை, “மனித உடன்பிறந்தநிலை” விருது குழு சந்திப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தில், மனித உடன்பிறந்தநிலை உயர்மட்ட குழு உருவாக்கப்பட்டதிலிருந்து, அந்நாடு, உலகில், மனித உடன்பிறந்தநிலையை ஊக்குவிப்பதற்கு, மிகவும் அக்கறை எடுத்து செயல்பட்டு வருகிறது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்  

உலகில் “மனித உடன்பிறந்தநிலை”யை ஊக்குவித்து பணியாற்றுகின்றவர்களுக்கு விருது வழங்கத் தீர்மானித்திருக்கும், சாயெது (Zayed) விருது குழுவின் ஏறத்தாழ பத்துப் பேரை, அக்டோபர் 23, இவ்வெள்ளியன்று, திருப்பீடத்தில் சந்தித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

உலக அளவில், மனித சமுதாயத்திற்கு சிறப்பான பணிகள் ஆற்றும், ஆர்வலர்கள் மற்றும், நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்கும், விதிமுறைகள் மற்றும், நடைமுறைகளை அமைப்பதற்கு என்று, முதன்முறையாக, இவ்வெள்ளியன்று உரோம் நகரில் கூடிய சாயெது விருது குழுவினர், திருத்தந்தையையும் சந்தித்து கலந்துரையாடினர்.

அக்டோபர் 19, இத்திங்களன்று, மனித உடன்பிறந்தநிலை உயர்மட்ட குழு, இவ்விருதுக்கென்று, வேட்பாளர்களைத் தேடும் பணியைத் துவக்கியது.

இந்த சாயெது விருதை, முதன் முதலாக, 2019ம் ஆண்டில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், எகிப்தின் அல் அசார் பல்கலைக்கழகத்தின் இஸ்லாம் பெரிய குரு Ahmed el-Tayeb அவர்களும் பெற்றனர்.

கடந்த ஆண்டு, பிப்ரவரி 4ம் தேதி, அபு தாபியில், இவ்விருவரும், மனித உடன்பிறந்தநிலை பற்றிய புகழ்பெற்ற அறிக்கையில் கையெழுத்திட்டதைப் பாராட்டும் நோக்கத்தில், இந்த விருது அவர்களுக்கு வழங்கப்பட்டது.

ஐக்கிய அரபு அமீரகத்தில், மனித உடன்பிறந்தநிலை உயர்மட்ட குழு உருவாக்கப்பட்டதிலிருந்து, அந்நாடு, உலகில் மனித உடன்பிறந்தநிலையை ஊக்குவிப்பதற்கு மிகவும் அக்கறை எடுத்து செயல்பட்டு வருகிறது என்று, அந்த விருதுக் குழு கூறியுள்ளது.

மேலும், இந்த சாயெது விருதுபற்றி பேசிய, அக்குழுவின் தலைமை பொதுச் செயலரான நீதிபதி Mohamed Abdelsalam அவர்கள், சாயெது விருது வழங்குவதன் வழியாக, மனித சமுதாயத்தின் நலனுக்கு ஒன்றிணைந்து மேற்கொள்ளப்படும் முயற்சிகளை வலுப்படுத்த தொடர்ந்து ஊக்கப்படுத்தப்படும் என்று கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 October 2020, 14:48