"அனைவரும் உடன்பிறந்தோர்" என்ற திருமடலில் கையொப்பமிடும் திருத்தந்தை பிரான்சிஸ் "அனைவரும் உடன்பிறந்தோர்" என்ற திருமடலில் கையொப்பமிடும் திருத்தந்தை பிரான்சிஸ் 

"அனைவரும் உடன்பிறந்தோர்" என்ற திருமடல்

மக்களாட்சி, சுதந்திரம், நீதி போன்றவை படுகாயமுற்று, இலாபத்தை மையமாகக் கொண்ட சந்தை வியாபாரமும், பயன்படுத்தி தூக்கியெறியும் கலாச்சாரமும் இன்றைய உலகை ஆளுகின்றன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

சமுதாய நட்புறவு, ஒருமைப்பாடு, உண்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஓர் உலகை கட்டியெழுப்ப உதவும் நோக்கத்தத்தில், "அனைவரும் உடன்பிறந்தோர்" என்று பொருள்படும்,  “Fratelli Tutti” என்ற திருமடலை, இஞ்ஞாயிறன்று வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அசிசி நகர் புனித பிரான்சிசின் திருநாளாகிய அக்டோபர் 04, இஞ்ஞாயிறன்று, மனித உடன்பிறந்தநிலை, மற்றும், சமுதாய நட்புறவு ஆகியவற்றை மையப்படுத்தி வெளியிடப்பட்டுள்ள, "அனைவரும் உடன்பிறந்தோர்" என்ற இத்திருமடல்,  இலாபத்தையே மையமாக வைத்த சந்தை வியாபாரம், மனித உரிமைகள், போருக்கும் மரண தண்டனைக்கும் எதிர்ப்பு, மத சுதந்திரத்திற்கு உரிமை போன்றவை குறித்தும் விவாதிக்கிறது.

பண்டை கால மோதல்கள் முடிவுக்கு வந்துவிட்டதாக நம்பிக்கொண்டிருந்த ஒரு காலக்கட்டத்தில், தற்போது தீவிரவாதங்களும், அடக்கியாள முயலும் தேசியவாதங்களும் முளைவிட்டு வளரத் துவங்கியுள்ளன எனக்கூறும் திருத்தந்தையின் புதிய திருமடல், திடீரென்று தோன்றிய இந்த கொள்ளைநோய், நாம் அனைவரும் ஒன்றிணைந்தே நம்மை மீட்க முடியும் என்பதை நமக்கு கற்றுத்தந்துள்ளது எனவும் சுட்டிக்காட்டுகிறது.

மக்களாட்சி, சுதந்திரம், நீதி போன்றவை படுகாயமுற்று, இலாபத்தை மையமாகக் கொண்ட சந்தை வியாபாரமும், பயன்படுத்தி தூக்கியெறியும் கலாச்சாரமும் இன்றைய உலகை ஆளுகின்றன என்ற கவலையை வெளியிடும் திருத்தந்தையின் இத்திருமடல், வேலைவாய்ப்பின்மைகள், இனவெறி, ஏழ்மை, அடிமைத்தனம் போன்றவை பெருகிவருவதையும், ஆண்-பெண் உரிமைகளில் சரிநிகர் அற்ற நிலைகளையும் சுட்டிக்காட்டுகிறது.

அனைத்துத் தடைகளையும் தாண்டி நல்ல சமாரியர் போல், நாம் அனைத்து மக்களுக்கும் மிக நெருக்கமாக இருந்து உதவிபுரிய வேண்டியதன் தேவையையும் வலியுறுத்துகிறது இந்த திருமடல்.

நம்மை பிறருக்கு கொடையாக கையளிக்கும் வாழ்வில்தான், நாம், வளர்ச்சியையும் மனநிறைவையும் காணமுடியும் என்பதையும் திருத்தந்தை இத்திருமடலில் வலியுறுத்தியுள்ளார்.

நாடுகளின் வெளிநாட்டுக்கடன்களால் மக்கள் அனுபவிக்கும் துயர்கள், போர்கள், சித்ரவதைகள், இயற்கைப் பேரிடர்கள் போன்றவைகளால் புலம்பெயர்வோர்,  மாண்புடன் மனிதர்கள் வாழ்வதற்கு வழிசெய்யும் நல்ல நிர்வாகம், ஆயுத, மற்றும், போதைப்பொருள் கடத்தல் தடுப்பு, உரையாடல் கலாச்சாரத்தின் தேவை, ஒப்புரவின் அவசியம், மரணதண்டனையை ஒழித்தல், மத சுதந்திரம் என   பல்வேறு தலைப்புகளில் இத்திருமடலில் தன் கருத்துக்களை பதிவிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 October 2020, 14:56