இத்தாலியின் நெத்தூனோ இராணுவ கல்லறைத் தோட்டத்தில் திருத்தந்தை இத்தாலியின் நெத்தூனோ இராணுவ கல்லறைத் தோட்டத்தில் திருத்தந்தை 

இறந்தோர் நினைவுநாள் - திருப்பலி நிறைவேற்றும் திருத்தந்தை

நவம்பர் 2, வருகிற திங்கள், இறந்தோர் அனைவரின் நினைவுநாளன்று, வத்திக்கானில் உள்ள Teutonic கல்லறையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த நினைவு நாள் திருப்பலியை நிகழ்த்துவார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி நம் அயலவருக்கு வழங்கவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அக்டோபர் 29 இவ்வியாழனன்று தன் டுவிட்டர் செய்தியை, 'அனைவரும் உடன்பிறந்தோர்' (#FratelliTutti) என்ற 'ஹாஷ்டாக்'குடன் வெளியிட்டுள்ளார்.

"அடுத்தவரிடமிருந்து எதையும் எதிர்பார்க்காமல் நாம் அனைவரும் வழங்கமுடியும், அவர்கள் நம்மை நன்றாக நடத்தவேண்டும் என்ற நிபந்தனையின்றி அவர்களுக்கு நன்மை செய்யமுடியும். இதைத்தான் இயேசு தன் சீடர்களுக்கு இவ்வாறு கூறியுள்ளார்: "கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள்" (மத். 10:8) என்ற சொற்களை, தன் டுவிட்டர் செய்தியாக திருத்தந்தை பதிவு செய்திருந்தார்.

மேலும், நவம்பர் 2, வருகிற திங்கள், இறந்தோர் அனைவரின் நினைவுநாளன்று, வத்திக்கானில் உள்ள Teutonic கல்லறையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த நினைவுநாள் திருப்பலியை நிகழ்த்துவார் என்றும், இத்திருப்பலியில் மக்களின் பங்கேற்பு இடம்பெறாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திருப்பலியைத் தொடர்ந்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கானில் அடக்கம் செய்யப்பட்டுள்ள திருத்தந்தையரின் கல்லறைகளில் இறைவேண்டலை மேற்கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஓராண்டில் இறையடி சேர்ந்த கர்தினால்கள், மற்றும் ஆயர்கள், நிறையமைதி பெறவேண்டி, நவம்பர் 5ம் தேதி காலை 11 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு பெருங்கோவிலில் மிகக் குறைந்த அளவு மக்களின் பங்கேற்புடன், திருப்பலி நிறைவேற்றுவார் என்றும் வத்திக்கான் தகவல் தொடர்பகம் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு, இறந்தோர் அனைவரின் நினைவுநாள் திருப்பலியை, உரோம் நகரில், 'நிலத்தடி கல்லறைகளின் அரசி' என்ற பெயரில் அமைந்துள்ள பிரிசில்லா நிலத்தடி கல்லறையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றினார்.

2018ம் ஆண்டு, Laurentino கல்லறையில், இறந்த குழந்தைகளுக்காகவும், 2017ம் ஆண்டு, Nettuno என்ற கல்லறையில் புதைக்கப்பட்டுள்ள அமெரிக்க வீரர்களுக்காகவும், திருத்தந்தை திருப்பலி நிறைவேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 October 2020, 13:18