“Fratelli tutti” அனைவரும் உடன்பிறந்தோர்  புதிய திருமடல் “Fratelli tutti” அனைவரும் உடன்பிறந்தோர் புதிய திருமடல் 

வாரம் ஓர் அலசல்: அனைவரும் உடன்பிறந்தோர் - பகுதி 1

நமக்கு அடுத்திருப்பவரை அன்புகூர்வதில் அக்கறை காட்ட, அமைதியின் காவலர்களாகச் செயல்பட, உடன்பிறந்தோருக்குப் பணியாற்ற நாம் எல்லாரும் அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை உணர்ந்து வாழ்வோம்

மேரி தெரேசா: வத்திக்கான்

உடன்பிறந்த உணர்வு, சமுதாய நட்புறவு, ஒருமைப்பாடு, உண்மை, நம் பொதுவான இல்லமாகிய இப்பூமிக்கோளத்தின் மீது அக்கறை. இத்தகைய உயரிய பண்புகளின் அடிப்படையில் நாம் வாழ்கின்ற இன்றைய உலகை உருவாக்கினால், அந்த உலகு, இப்போதைய நிலைமையைவிட, மேலும் நீதியும், அமைதியும் நிறைந்த சிறந்த இடமாக அமையும். அத்தகையதோர் உலகை அமைப்பதற்கு பல சமுதாயத் தீமைகள் வேரோடு பிடுங்கி எரிக்கப்படவேண்டும். அதாவது, இலாபத்தையே இலக்காக வைத்து நடத்தப்படும் சந்தைப் பொருளாதாரம், வரையறையின்றி இடம்பெறும் மனித உரிமை மீறல்கள், மரணதண்டனை வழங்குதல் போன்றவை நிறுத்தப்படவேண்டும். போர்களும், குறிப்பாக, இக்காலக்கட்டத்தில் துண்டு துண்டாக இடம்பெறும் மூன்றாம் உலகப்போரும், உலக அளவில் இடம்பெறும் புறக்கணிப்புகளும், வேண்டவே வேண்டாம் என்பதற்கு, உலக அளவில் உறுதி வழங்கப்பட வேண்டும். இவை தேவையே இல்லை என்பது, உலகில் வாழ்கின்ற ஒவ்வொரு மனிதரின் மனங்களில் ஆழமாகப் பதியவேண்டும். உலகில் இடம்பெற்றுள்ள ஒட்டுமொத்த இனப்படுகொலைகள் மறக்கப்படக் கூடாது. சமய சுதந்திரம், எல்லாருக்கும் உரிய அடிப்படை உரிமை என்பது காக்கப்படவேண்டும். இந்த உலகில் எந்த ஒரு மனிதரும், தன்னந்தனியாக தன்னைக் காப்பாற்றிக் கொள்ள இயலாது, மாறாக, அடுத்திருப்பவரை, சகோதரர், சகோதரிகளாக, அதாவது உடன்பிறந்தோராக நோக்கினால் மட்டுமே, தங்களையும், உலகையும் பாதுகாக்கமுடியும் என்ற சிந்தனை முன்னிலைப்படுத்தப்படவேண்டும். உடன்பிறந்த உணர்வு, சமுதாய நட்பு மற்றும், நீதி ஆகிய பண்புகள் கொண்ட உலகை சமைப்பதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “Fratelli tutti” அதாவது அனைவரும் உடன்பிறந்தோர் என்ற தனது புதிய திருமடலில்,  இவ்வாறெல்லாம் உலக சமுதாயத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.

புதிய திருமடல்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்டோபர் 3, இச்சனிக்கிழமை, இத்தாலிய நேரம் மாலை 3 மணியளவில், அசிசி நகரில் புனித பிரான்சிஸ் கல்லறையில், “அனைவரும் உடன்பிறந்தோர்” என்ற, தனது திருமடலில் கையெழுத்திட்டார். அந்த திருமடலை, திருத்தந்தையே, அக்டோபர் 4, இஞ்ஞாயிறன்று வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் வழங்கிய நண்பகல் மூவேளை செப உரையின் இறுதியில் அறிமுகம் செய்துவைத்தார். அந்த நேரத்தில் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்திற்குள்ளும், அதற்கு வெளியேயும் கூடியிருந்த மக்கள் எல்லாருக்கும், அந்த திருமடலின் பிரதி ஒன்றை பரிசாக வழங்குவதாகவும் திருத்தந்தை கூறினார். இஞ்ஞாயிறன்று, வத்திக்கான் புதிய மாமன்ற அரங்கில், திருப்பீட செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் தலைமையில், பல்சமய திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Miguel Ayuso, மனித உடன்பிறந்தநிலை உயர்மட்ட குழுவின் பொதுச்செயலரான, நீதிபதி Mohamed Mahmoud Abdel Salam, பிரித்தானியாவில் Durham பல்கலைக்கழகத்தில் கத்தோலிக்க சமுதாய சிந்தனை மற்றும் நடைமுறைத் துறையில் பணியாற்றும் பேராசிரியர் Anna Rowlands, உரோம் நகரை மையமாக வைத்து இயங்கி வரும் சான் எஜிதியோ பிறரன்பு அமைப்பின் நிறுவனரும், சமகால வரலாற்றியல் பேராசிரியருமான Andrea Riccardi போன்றோர், திருத்தந்தையின் இந்த புதிய திருமடலை செய்தியாளர் கூட்டத்தில் வெளியிட்டனர்.

புதிய திருமடலின் எட்டு பிரிவுகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மூன்றாவது திருமடலாக வெளிவந்துள்ள “அனைவரும் உடன்பிறந்தோர்” என்ற திருமடல், எட்டு பிரிவுகளாக, ஒவ்வொன்றும் பல இணை தலைப்புக்களைக்கொண்டு, 287 எண்களாக, திருத்தந்தையின் சிந்தனைகளை அருமையாக அள்ளித் தெளித்துள்ளன. பல்வேறு உண்மைகளுக்குத் திறந்தமனம் இன்றி இருக்கும் உலகை இருள் கவ்வியுள்ளது என்ற தலைப்பில் முதல் பிரிவும் (எண்கள் 9-55), சாலையில் ஓர் அந்நியர் என்ற தலைப்பில் இரண்டாவது பிரிவும் (எண்கள் 56-86), திறந்த ஓர் உலகை கற்பனை செய்தல் மற்றும், உருவாக்குதல் என்ற தலைப்பில் மூன்றாவது பிரிவும் (எண்கள் 87-127), அகில உலகிற்கும் திறந்த மனம் கொண்ட ஓர் இதயம் என்ற தலைப்பில் நான்காவது பிரிவும் (எண்கள் 128-153), சிறந்த அரசியல் முறை என்ற தலைப்பில் ஐந்தாவது பிரிவும் (எண்கள் 154-197), சமுதாயத்தில் கலந்துரையாடல் மற்றும் நட்புறவு என்ற தலைப்பில் ஆறாவது பிரிவும் (எண்கள் 198-224), புதுப்பிக்கப்பட்ட சந்திப்புப் பாதைகள் என்ற தலைப்பில் ஏழாவது பிரிவும் (எண்கள் 225-270), நமது உலகில் உடன்பிறந்த உணர்வுப் பணியில் மதங்கள் என்ற தலைப்பில் எட்டாவது பிரிவும் (எண்கள் 271-287) அமைந்துள்ளன. இறுதியில், படைத்தவரை நோக்கி இறைவேண்டலை எழுப்பி, கிறிஸ்தவ ஒன்றிப்பு இறைவேண்டலோடு, திருத்தந்தை, தனது திருமடலை நிறைவு செய்துள்ளார்.

2019ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், தானும், எகிப்து நாட்டின் Al-Azhar பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியரின் பெரிய குருவான Ahmed el-Tayeb அவர்களும் கையெழுத்திட்ட, மனித உடன்பிறந்தநிலை என்ற ஆவணம், இந்த திருமடலுக்கு உந்துசக்தியாக இருந்தது என்பதை, திருத்தந்தை இந்த புதிய திருமடலில் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். நாம் வாழ்ந்து வருகின்ற இந்த உலகை போர்கள், புறக்கணிப்புகள், வன்செயல்கள் போன்ற காரிருள் மேகங்கள் சூழ்ந்திருந்தாலும், இவற்றுக்கு மத்தியிலும், உடன்பிறந்த உணர்விலும், சமுதாய நட்புறவிலும் மனித சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதற்கு, தொடர்ந்து நம்பிக்கையுடன் கனவு காண்கின்ற உள்ளங்கள் உள்ளன. இவர்கள், இத்தகைய பணிக்கு தங்களையே அர்ப்பணிப்பதன் வழியாக, தங்கள் கரங்களை அழுக்காக்கிக் கொள்கின்றனர். தங்களின் சாதாரண உறவுகளில், சமுதாய வாழ்வில், அரசியலில், மற்றும், நிறுவனங்களில், நீதியும், உடன்பிறந்த உணர்வும் கொண்ட உலகை கட்டியெழுப்புவதற்கு விரும்புகின்றவர்கள், அவற்றை முன்னெடுத்துச் செல்வதற்கு என்னென்ன மிகப்பெரும் கருத்தியல்களும், தெளிவான வழிமுறைகளும் உள்ளன என்ற இந்த முக்கியமான கேள்விக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “அனைவரும் உடன்பிறந்தோர்” என்ற திருமடலில் பதில்சொல்ல முனைந்துள்ளார்.

உடன்பிறந்த உணர்வு

அனைவரும் உடன்பிறந்தோர் என்ற திருமடல், ஒரு, சமுதாயத் திருமடல். இதன் தலைப்பு, அசிசி நகர் புனித பிரான்சிசின் “அறிவுரைகள்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. அப்புனிதர் அறிவுரைகளை வழங்குகையில், சகோதரரே, சகோதரிகளே என்ற சொல்லாடல்களையே பயன்படுத்தியுள்ளார், மற்றும், நற்செய்தியின் நறுமணத்தால் நிரம்பியுள்ள ஒரு வாழ்வுமுறையையே அவர்களுக்குப் பரிந்துரை செய்துள்ளார். இந்த புனிதர், கோட்பாடுகளைப் புகுத்துகையில், சொற்போரைத் தொடுக்கவில்லை, மாறாக, அவர் எளிமையாக, கடவுள் அன்பையே பரப்பினார். அவர், எல்லாருக்கும் தந்தையானார், மற்றும், உடன்பிறந்த சமுதாயத்தை அமைப்பதற்குத் தூண்டினார். இந்த திருமடல், உடன்பிறந்த உணர்வு மற்றும், சமுதாய நட்புறவை நோக்கி, உலக அளவில் ஓர் ஏக்கத்தைத் தூண்டும் நோக்கத்தைக் கொண்டிருக்கிறது. நாம் எல்லாரும் சகோதரர், சகோதரிகள், அதாவது உடன்பிறப்புகள். ஏனெனில், நாம் எல்லாரும், ஒரே படைத்தவரின் பிள்ளைகள், ஒரே படகில் உள்ளவர்கள். இதனால், மனிதக் குடும்பத்தில் பொதுவான உறுப்பினர்களாக நாம் உள்ளோம். எனவே, உலகமயமாக்கப்பட்ட, மற்றும், ஒன்றோடொன்று தொடர்புகொண்டுள்ள உலகில், ஒன்றாய் இருந்தால் மட்டுமே, நாம் காப்பாற்றப்படுவோம் என்ற விழிப்புணர்வு தேவைப்படுகின்றது. உடன்பிறந்த உணர்வுக் கலாச்சாரத்தை வளர்ப்பதன் வழியாக, ஒவ்வொரு மனிதரும் அன்புகூரப்படவேண்டும், இது உலகளாவிய உறவுகளில் பயன்படுத்தப்படவேண்டும். சகோதரத்துவம், அதாவது உடன்பிறந்த உணர்வு, ஏதோ ஒரு புதுப்பாணியோ அல்லது, நாகரீக முறையோ அல்ல, மாறாக, அது, தெளிவான செயல்கள் வழியாக, சிறப்பாக, அரசியல் செயல்முறைகள் வழியாக வெளிப்படுத்தப்படவேண்டும். இந்த செயல்முறை, நிதி ஆதாயத்திற்கு அடிமையாக இருந்துவிடக் கூடாது, மாறாக, ஒவ்வொரு மனிதரின் மாண்பும் மையத்தில் வைக்கப்பட்டு, ஒவ்வொருவருக்கும் வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்படுவதாக அமையவேணடும். அதனால் ஒவ்வொரு மனிதரும் தங்களின் திறமைகளை வளர்த்துக்கொள்ள முடியும்.    

நீதி அதிகமதிமாக நிலவுகின்ற உலகு எட்டப்படுவதற்கு, அமைதி ஊக்குவிக்கப்படவேண்டும். அமைதி என்பது போர்கள் இன்றி இருப்பது மட்டுமல்ல, அது, எல்லாருக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கிக்கொடுக்கும் கைவினைஞராக இருப்பதாகும். அது தொடர்புகொண்டுள்ள, உண்மை, அமைதி, மற்றும், ஒப்புரவால் தூய்மைப்படுத்தப்படவேண்டும். அது, ஒருவர் ஒருவரை முன்னேற்றுதல் என்ற பெயரில், கலந்துரையாடல் வழியாக, நீதியை நோக்கி உழைப்பதாக அமையவேண்டும். இவ்வாறு இந்த புதிய திருமடலில் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், போர்களையும், அனைத்து உரிமைகள் புறக்கணிக்கப்படுவதையும் வன்மையாய் கண்டனம் செய்துள்ளார். அப்போதைக்கு நியாயப்படுத்தப்பட்டதாய் இருக்கும் நிலையிலும்கூட, போரை ஏற்கவே முடியாது. ஏனெனில், அணு, வேதியல் மற்றும், உயிரியல் ஆயுதங்கள், அப்பாவி குடிமக்கள் மீது, சொல்லமுடியாத கடும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளன. மரணதண்டனை வழங்குதலை அனுமதிக்கவே முடியாது. மன்னிப்பது என்பது மறப்பது என்றோ, கடவுளின் கொடையாகிய ஒருவரின் மாண்பை பாதுகாக்கும், ஒருவரின் உரிமையைப் பாதுகாப்பதை கைவிடுவது என்றோ அர்த்தமல்ல, மாறாக, மன்னிப்பு என்பது, நினைவு மற்றும், நீதி சார்ந்த கூறுகளோடு தொடர்புடையதாகும்.  

கோவிட்-19 சூழலில் திருமடல் தயாரிப்பு

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த தனது மூன்றாவது திருமடலை தயாரித்துக்கொண்டிருந்தவேளையில், கோவிட்-19 கொள்ளைநோய் எதிர்பாராத விதமாய் உலக அளவில் பரவி வந்தது. இந்த கொள்ளைநோய் உலக அளவில் உருவாக்கியுள்ள நலவாழ்வு நெருக்கடிகள், இந்த உலகில், நாம் அனைவரும், ஒரே மனிதக் குடும்பமாக வாழ்வதற்கு அழைக்கப்பட்டுள்ளோம் என்ற திருத்தந்தையின் கருத்தாழமிக்க சிந்தனையை விளக்குவதற்கு மேலும் உதவியுள்ளன. அதாவது, வாழ்க்கையில் எவரும் தனிமையை எதிர்கொள்ளக் கூடாது. நாம் எல்லாரும் சகோதரர், சகோதரிகளாக, உடன்பிறந்தோராக, ஒரே மனிதக் குடும்பமாக வாழும் கனவை உண்மையாக்குவதற்கு காலம் கனிந்துள்ளது என்ற எதார்த்தத்தை திருத்தந்தை மிக அழகாக, இந்த திருமடலில் எடுத்துரைத்துள்ளார் (எண்கள் 7-8).

உலகளாவிய பிரச்சனைகள், உலகலாவிய செயல்திட்டங்கள், உரிமைகளுக்கு எல்லைகள் கிடையாது, புலம்பெயர்ந்தோருக்கு நீண்டகாலத் திட்டங்கள், மதிப்புமிக்க பிறரன்பு அரசியல், கனிவன்பு பிறப்பிக்கும் அற்புதம், அமைதி என்ற கலை மற்றும், மன்னிப்பின் முக்கியத்துவம், போர்களே வேண்டாம், பல்சமய உரையாடலின் முக்கியத்துவம், உலகளாவிய உடன்பிறப்பான அருளாளர் சார்லஸ் தெ ஃபோகால்டு போன்ற தலைப்புகள் பற்றி அடுத்த வார நிகழ்ச்சியில் அலசுவதற்கு திட்டமிட்டுள்ளோம். நமக்கு அடுத்திருப்பவரை அன்புகூர்வதில் அக்கறை காட்ட, அமைதியின் காவலர்களாகச் செயல்பட, உடன்பிறந்தோருக்குப் பணியாற்ற நாம் எல்லாரும் அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை உணர்ந்து வாழ்வோம். கிறிஸ்து மற்றும், திருஅவையின் அன்பை அதிகமாகச் சுவைப்பதற்கு, இந்த உலகின் உடன்பிறந்த உணர்வுக்குப் பணியாற்ற இந்த புதிய திருமடல் நம் எல்லாரையும் தூண்டுகின்றது. இதற்காக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு நன்றி சொல்லி, அவர் விருப்பத்தைச் செயல்படுத்த முயற்சிப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 October 2020, 15:08