நைஜீரியா நாட்டில் இளையோருக்கும் இராணுவத்திற்கும் இடையே நிகழ்ந்துவரும் மோதல்கள் நைஜீரியா நாட்டில் இளையோருக்கும் இராணுவத்திற்கும் இடையே நிகழ்ந்துவரும் மோதல்கள் 

நைஜீரியாவில் வன்முறை மோதல்கள் முடிவுக்கு வர விண்ணப்பம்

திருத்தந்தை : நைஜீரியாவில் பாதுகாப்புத் துருப்புகளுக்கும், இளையோருக்கும் இடையே இடம்பெறும் மோதல்கள் கவலை தருவதாக உள்ளன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

நீதியையும் பொதுநலனையும் ஊக்குவிக்கும் நோக்கம் கொண்டதாக, சமுதாய இணக்க வாழ்வு நைஜீரியா நாட்டில் இடம்பெறவேண்டும் என அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நைஜீரியா நாட்டில் இடம்பெறும் வன்முறை, மற்றும், உயிரிழப்புக்கள் குறித்து தன் ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையின் இறுதியில், தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வன்முறை மோதல்கள் முடிவுக்கு வரவேண்டும் என விண்ணப்பித்தார்.

நைஜீரியாவிலிருந்து வெளிவரும் செய்திகள் குறித்து ஆழ்ந்த அக்கறையுடன் நோக்கி வருவதாக உரைத்த திருத்தந்தை, பாதுகாப்புத் துருப்புகளுக்கும், இளையோருக்கும் இடையே இடம்பெறும் மோதல்கள் கவலை தருவதாக உள்ளன என குறிப்பிட்டார்.

நீதி, மற்றும், பொதுநலனை ஊக்குவிப்பதில் சமுதாய இணைக்க வாழ்வை நோக்கி தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நாட்டில், அனைத்து விதமான வன்முறைகளும் தவிர்க்கப்பட வேண்டும் என இறைவனை நோக்கி செபிப்போம் என்ற அழைப்பையும் முன்வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

காவல்துறையின் அத்துமீறல் நடவடிக்கைகள் குறித்து நைஜீரிய இளையோரால் நடத்தப்பட்ட அமைதி போராட்டங்கள், காவல்துறைக்கும் இளையோருக்கும் இடையே மோதல்களாக உருவெடுத்ததைத் தொடர்ந்து, குறைந்தது 69 பேர் உயிரிழந்துள்ளனர்.

எதிர்ப்புப் பேரணியினர் என்ற போர்வையில் வன்முறையில் ஈடுபடும் குற்றக் கும்பல்களிடமிருந்து பொது இடங்களை காப்பாற்றவேண்டும் என நைஜீரியாவின் தலைமை காவல்துறை அதிகாரி தற்போது அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, மேலும் வன்முறை அதிகரிக்கலாம் என்ற அச்சம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

திருட்டுக்கு எதிரான சிறப்புக் காவல்துறை அமைப்பு, பல்வேறு அத்துமீறல்களில், குறிப்பாக, சட்டவிரோத கொலைகளில் ஈடுபட்டதால், அவ்வமைப்பு கலைக்கப்பட வேண்டும் என இளையோரால் நைஜீரியாவில் நடத்தப்பட்ட போராட்டத்திற்கு செவிமடுத்து, அந்நாட்டு அரசுத் தலைவர் Muhammadu Buhari அச்சிறப்பு அமைப்பை கலைத்துள்ளபோதிலும், நாட்டில் மேலும் சீர்திருத்தங்கள் இடம்பெற வேண்டும் என இளையோர் போராடி வருகின்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 October 2020, 12:50