தேடுதல்

அருளாளராக உயர்த்தப்படவிருக்கும் Gaetana Tolomeo அருளாளராக உயர்த்தப்படவிருக்கும் Gaetana Tolomeo 

புதிய அருளாளர்கள், வணக்கத்திற்குரியவர்கள் ஏழு பேர்

பொதுநிலையினரான ஒருவரும், நான்கு மறைசாட்சிகளும் உட்பட, ஐவர் அருளாளர்களாகவும், இருவர் வணக்கத்திற்குரியவர்களாகவும் உயர்த்தப்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஏழு புண்ணியவாளர்களை, அருளாளர்களாகவும், வணக்கத்திற்குரியவர்களாகவும் அறிவிக்கும் ஆவணங்களை வெளியிடுவதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 29, இச்செவ்வாய் மாலையில் ஒப்புதல் அளித்தார்.

புனிதர் நிலைக்கு உயர்த்தும் வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை, ஒரு புதுமை, மறைசாட்சிய மரணம் மற்றும் புண்ணிய வாழ்வு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த எழுவரைக் குறித்த விவரங்களை வெளியிட அனுமதி வழங்கினார்.

இந்த ஏழு பேரில், பொதுநிலையினரான ஒருவரும், நான்கு மறைசாட்சிகளும் உட்பட, ஐவர் அருளாளர்களாகவும், இருவர் வணக்கத்திற்குரியவர்களாகவும் உயர்த்தப்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இத்தாலி நாட்டைச் சேர்ந்த வணக்கத்திற்குரிய இறையடியார் Gaetana Tolomeo அவர்களின் பரிந்துரையால் இடம்பெற்ற ஒரு புதுமையையடுத்து, அவரை அருளாளராக உயர்த்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இஸ்பானிய நாட்டில் 1936 மற்றும் 1938ம் ஆண்டுகளுக்கிடையே மறைசாட்சியாக உயிர் துறந்த இறையடியார் Cástor Sojo López அவர்களும், அவரது 3 தோழர்களும், தொழிலாளர்களாக வாழ்ந்த மறைமாவட்ட அருள்பணியாளர்கள். இவர்களும் அருளாளர்களாக உயர்த்தப்பட திருத்தந்தை அனுமதி வழங்கியுள்ளார்.

இஸ்பெயின் நாட்டில் பிறந்து, மாசற்ற இதயத்தின் பிரான்சிஸ்கன் சகோதரிகள் என்ற துறவு சபையை உருவாக்கிய Francisca Pascual Doménech, அருள்பணியாளரான கிறிஸ்துவின் மறைபரப்புப் பணியாளர்களான சகோதரிகள் சபையை உருவாக்கிய Maria Dolores Segarra Gestoso ஆகிய இருவரின் புண்ணிய வாழ்வை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்விருவரையும் வணக்கத்திற்குரியவர்களாக உயர்த்த அனுமதி வழங்கியுள்ளார்.

01 October 2020, 14:37