தேடுதல்

ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரை வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரை வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ்   (ANSA)

அன்பின் நாகரீகத்தை கட்டியெழுப்ப உதவும் கிறிஸ்தவர்கள்

திருத்தந்தை : ஒவ்வொரு குடிமகனும் அரசின் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டவராக செயல்படும் அதேவேளை, மனித வாழ்விலும், வரலாற்றிலும், இறைவனின் உயரிய இடத்தை உணர்ந்து செயல்படவேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கடவுளுக்கும் வாழ்வின் அர்த்தத்திற்கும் சான்று பகர்பவர்களாக, இன்றைய உலகில் மனித மாண்பை பாதுகாப்பதிலும், ஊக்குவிப்பதிலும் தாராளமானதுடன் ஒவ்வொரு கிறிஸ்தவரும் தங்களை அர்ப்பணிக்கவேண்டும் என அழைப்புவிடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறன்று வழங்கப்பட்ட நற்செய்தி வாசகத்தை (மத்.  22:15-21) மையமாக வைத்து, நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சீசருக்கு வரி செலுத்துவது முறையா? இல்லையா? என்ற கேள்விக்கு, இயேசு வழங்கிய பதிலின் வழியாக, அரசியலுக்கும் மதத்திற்கும் இடையே நிலவவேண்டிய வித்தியாசத்தை தெளிவாகக் காட்டுகிறார் என்று கூறினார்.

இத்தாலியில் மீண்டும் கொரோனா  தொற்று பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், அரசின் கட்டுப்பாடு விதிகளைப் பின்பற்றி, திருப்பயணிகள், வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருக்க, அவர்களுக்கு, தன் நூலக அறை சன்னல் வழியாகத் தோன்றி, நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, இயேசுவின் எதிரிகள், அவரை, வார்த்தைகளில் சிக்க வைக்க முயன்றதையும், அவர்களுக்கு தெளிவான ஒரு பதிலை இயேசு வழங்கியதையும், இன்றைய நற்செய்தி வாசகத்தில் காண்கிறோம் என்று கூறினார்.

உரோமைய ஆதிக்கத்தை சிரமப்பட்டு சகித்துக்கொண்டு,அதேவேளை,  நாணயங்களில் உரோமைய மன்னரின் உருவம் பொறிக்கப்பட்டிருப்பதை இஸ்ரேல் கடவுளுக்கு வழங்கப்பட்ட அவமதிப்பு எனவும் நோக்கி வந்த மக்கள் நடுவே, இயேசுவை 'ஆம்', அல்லது, 'இல்லை' என்ற எந்த பதில் வழங்கினாலும் சிக்கவைக்க நினைத்த எதிரிகளுக்கு, 'சீசருக்கு உரியவற்றை சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்' என்று இயேசு வழங்கிய பதில், நமக்குள் பொறிக்கப்பட்டுள்ள இறைவனின் திருஉருவத்திற்கு நாம் ஆற்றவேண்டிய கடமைகளை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது என்றார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒவ்வொரு குடிமகனும் அரசின் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டவராக செயல்படும் அதேவேளை, மனித வாழ்விலும், வரலாற்றிலும், இறைவனின் உயரிய இடத்தை உணர்ந்து, அவருக்கு உரிய அனைத்திலும், அவருக்கு இருக்கும் உரிமையை மதித்து செயல்பட வேண்டும் என்பதை, இயேசுவின் பதில் காண்பிக்கிறது என்றார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருஅவை மற்றும் கிறிஸ்தவர்களின் மறைபரப்புப்பணி பற்றியும் தன் மூவேளை செப உரையில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றைய உலகின் ஆண்கள் மற்றும் பெண்களிடையே இறைவனைக் குறித்து எடுத்துரைத்து, அவருக்கு சான்றாக செயல்படவேண்டியது நம் கடமை என்றார்.

நீதியும் உடன்பிறந்த உணர்வும் மேலோங்கி நிற்கும் அன்பின் நாகரிகத்தை கட்டியெழுப்புவதற்கு பங்காற்றுவதில் நாம் அனைவரும் தாழ்மையுணர்வுடனும், உறுதியுடனும் நம்மை அர்ப்பணிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

18 October 2020, 12:30