"அமைதி பற்றி அறிவதற்கு" புதிய நூல் "அமைதி பற்றி அறிவதற்கு" புதிய நூல் 

அமைதியின் அறிவியல்கள்" நூலுக்கு திருத்தந்தை அணிந்துரை

அமைதிக்காக உண்மையாகவே பணியாற்றுகிறவர், சமுதாயத்தின் எதார்த்தமான நிலையை, நடுநிலைமையோடு, உலகையும், வரலாற்றையும் அணுகுபவராக இருக்கவேண்டும் - திருத்தந்தை

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

"அமைதியின் அறிவியல்கள்" பற்றி மேற்கொள்ளப்படும் ஆய்வுகள், நற்செய்தியால் தூண்டப்பட்டு, இக்கால மனிதரின் நம்பிக்கைகள் மற்றும் ஏக்கங்களைப் பகிர்ந்துகொள்ளும் முறையில் நடைபெறவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

"அமைதி பற்றி அறிவதற்கு (Per un sapere della pace)" என்ற தலைப்பில், வத்திக்கான் பதிப்பகம் வெளியிட்டுள்ள புதிய நூலுக்கு அணிந்துரை எழுதியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளைஞர்களை மையப்படுத்தி தன் எண்ணங்களை வெளியிட்டுள்ளார்.

போர் மற்றும், வன்முறைச் சூழல்களால் குறிக்கப்பட்டுள்ள, இக்கால சமுதாயத்தை எதிர்கொள்வதற்கு இளையோருக்குக் கற்றுக்கொடுக்கப்படவேண்டும் என்று கூறியுள்ள திருத்தந்தை, உரோம் இலாத்தரன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில், அமைதி அறிவியல்கள் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ள, பாடத்திட்டம் ஒன்று உருவாக்கப்படுவதற்கு அண்மையில் தான் எடுத்த தீர்மானம் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். 

அமைதிக்காக உண்மையாகவே பணியாற்றுகிறவர், சமுதாயத்தின் எதார்த்தமான நிலையை, நடுநிலைமையோடு, உலகையும், வரலாற்றையும் அணுகுபவராக இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, கற்றல் என்பது, அந்தந்த காலத்தின் அடையாளங்கள் மீது கவனமாக இருப்பதும் ஆகும் என்றும் கூறியுள்ளார்.

திருத்தந்தை புனித 2ம் யோவான் பால் பாப்பிறை இறையியல் நிறுவனத்தின் உதவித் தலைவரும், இறையில் மானுடவியல் துறையின் பேராசிரியருமான Gilfredo Marengo அவர்களின் முயற்சியால் வெளிவந்துள்ள இந்த நூலுக்கு திருத்தந்தை அணிந்துரை எழுதியுள்ளார்.

இத்தாலிய மொழியில் வெளிவந்துள்ள இந்த நூலில், பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்களும், நீதி மற்றும் அமைதி திருப்பீட அவையின் முன்னாள் தலைவர் கர்தினால் Renato Raffaele Martino அவர்களும் எழுதியுள்ள கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 September 2020, 13:53