புதன் மறைக்கல்வி உரையின் இறுதியில் மக்களைச் சந்திக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் புதன் மறைக்கல்வி உரையின் இறுதியில் மக்களைச் சந்திக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் 

செப்டம்பர் 30 – திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகள்

"நமது மறைநூலில், எழுத்து வடிவில் வெளிப்பட்டுள்ள இறைவனின் வார்த்தையின் மீது ஆழ்ந்த பக்தி கொண்டிருக்கவேண்டும் என்பதே, புனித ஜெரோம் நமக்கு வழங்கியுள்ள பரம்பரைச் சொத்து"

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

செப்டம்பர் 30, இப்புதனன்று, மறைநூல் வல்லுனரான புனித ஜெரோம் அவர்களின் திருநாள் சிறப்பிக்கப்பட்ட வேளையில், இவ்வாண்டு, இந்த நாள், அப்புனிதர் இறையடி சேர்ந்ததன் 16வது நூற்றாண்டு என்பதால், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'Scripturae Sacrae Affectus' என்ற பெயரில் திருத்தூது மடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த மடலின் ஆரம்பத்தில் தான் கூறியுள்ள சொற்களை, முதல் டுவிட்டர் செய்தியாக வெளியிட்டதோடு, அந்த டுவிட்டரின் வழியே, இந்த திருத்தூது மடலை இணையத்தில் வாசிக்க உதவும் தொடர்பு முகவரியையும் திருத்தந்தை வழங்கியுள்ளார்.

"நமது மறைநூலில், எழுத்து வடிவில் வெளிப்பட்டுள்ள இறைவனின் வார்த்தையின் மீது ஆழ்ந்த பக்தி கொண்டிருக்கவேண்டும் என்பதே, புனித ஜெரோம் நமக்கு வழங்கியுள்ள பரம்பரைச் சொத்து" என்ற சொற்கள், திருத்தந்தை, இப்புதனன்று வெளியிட்ட முதல் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

மேலும், இப்புதனன்று வழங்கிய புதன் மறைக்கல்வி உரையில் பகிர்ந்துகொண்ட ஒரு கருத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் 2வது டுவிட்டர் செய்தியாக வெளியிட்டார்.

"நீதியான, சமநிலைகொண்ட சமுதாயம், நலமானதொரு சமுதாயம். பங்கேற்பு கொண்ட சமுதாயம், ஒருங்கிணைப்பை உறுதிபடுத்துகிறது. பன்முகத்தன்மை மதிக்கப்படும் சமுதாயம், எத்தகைய தொற்றுக்கிருமியையும் எதிர்கொள்ளும்" என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் 2வது டுவிட்டர் செய்தியில் பதிவு செய்திருந்தார்.

ஒவ்வொரு நாளும் @pontifex என்ற வலைத்தள முகவரியில் திருத்தந்தை வழங்கிவரும் டுவிட்டர் செய்திகள், இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு, இஸ்பானியம், போர்த்துகீசியம், ஜெர்மன், போலந்து, இலத்தீன் மற்றும் அரேபியம் ஆகிய ஒன்பது மொழிகளில் வெளியாகின்றன.

செப்டம்பர் 30, இப்புதன் முடிய, @pontifex என்ற வலைத்தள முகவரியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 2,821 என்பதும், அவரது டுவிட்டர் பதிவுகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 87 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 September 2020, 16:03