நம் பொதுவான இல்லமான பூமியின் பாதுகாப்பு நம் பொதுவான இல்லமான பூமியின் பாதுகாப்பு 

புதன் மறைக்கல்வி உரையின் தொடர்ச்சியாக டுவிட்டர்கள்

"நம்மை இந்த உலகம் என்ற பூங்காவிலும், இல்லத்திலும் இறைவன் தங்க வைத்துள்ளார். என்ற உண்மையை நாம் மறக்கும்போது, நம் சமுதாயம் வலுவிழப்பதோடு, சுற்றுச்சூழலும் சீரழிகிறது" – திருத்தந்தையின் டுவிட்டர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கொள்ளைநோயைத் தீர்க்கும் முயற்சிகள் மற்றும் படைப்பின் காலத்தையொட்டிய எண்ணங்கள் ஆகியவற்றை இணைத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செப்டம்பர் 2ம் தேதி, புதனன்று வழங்கிய மறைக்கல்வி உரையின் தொடர்ச்சியாக, தன் டுவிட்டர் செய்திகளை வெளியிட்டிருந்தார்.

"வாழ்வோ, தாழ்வோ, நாம் அனைவரும் ஒருவரோடு ஒருவர் பின்னிப் பிணைந்துள்ளோம் என்பதை தற்போதைய கொள்ளைநோய் உணர்த்திவருகிறது. எனவே, இந்த நெருக்கடியிலிருந்து மீண்டுவரும் வேளையில், முன்னெப்போதும் இல்லாத அளவு, நாம் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருக்கவேண்டும்" என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று வெளியிட்ட முதல் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

"நாம் அனைவரும் இறைவன் என்ற ஒரே சுனையிலிருந்து வந்தவர்கள். நம்மை இந்த உலகம் என்ற பூங்காவிலும், இல்லத்திலும் இறைவன் தங்க வைத்துள்ளார். இந்த உண்மைகளை நாம் மறக்கும்போது, நம் சமுதாயம் வலுவிழப்பதோடு, சுற்றுச்சூழலும் சீரழிகிறது" என்ற கருத்தை, தன் இரண்டாவது டுவிட்டர் செய்தியாக வெளியிட்டார், திருத்தந்தை.

இப்புதன் மறைக்கல்வி உரையின் இறுதியில், லெபனான் நாட்டிற்காக செப்டம்பர் 4ம் தேதி, வெள்ளிக்கிழமையை, செபத்திலும் உண்ணாநோன்பிலும் செலவிட திருத்தந்தை விடுத்த அழைப்பை, இப்புதனன்று வெளியிட்ட மூன்றாவது டுவிட்டர் செய்தியாகப் பதிவு செய்திருந்தார்.

"லெபனான் நாட்டிற்காக, செப்டம்பர் 4ம் தேதியை, உலகளாவிய இறைவேண்டல், மற்றும், உண்ணாநோன்பு நாளாகக் கடைபிடிக்க ஒவ்வொருவரையும் அழைக்கிறேன். ஏனைய மத நம்பிக்கை கொண்ட சகோதரர், சகோதரிகளையும், அவர்களால் முடிந்த அளவு, இந்த முயற்சியில் இணைவதற்கு அழைக்கிறேன்" என்ற சொற்களில் திருத்தந்தையின் அழைப்பு வெளியானது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 September 2020, 14:50