தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ் 

உலகை மாற்றவல்ல இளைஞர்களாக இருங்கள்

மனிதவாழ்வு ஒரு பயணம் என்பதை, ஒருபோதும் மறத்தல் ஆகாது. வாழ்வுப் பாதையில் இன்னல்கள் மற்றும், தவறுகள் இருந்தபோதிலும், மீண்டும், எப்போதும் சரியான பாதைக்குத் திரும்பி வரவேண்டும் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இம்மாதம் முதல் தேதியிலிருந்து சிறப்பிக்கப்பட்டுவரும் படைப்பின் காலத்தை முன்னிட்டு, படைப்பின் காலம் (SeasonOfCreation) என்ற ஹாஷ்டாக்குடன், செப்டம்பர் 22, இச்செவ்வாயன்று, வாழ்வு பற்றி, தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

“கடவுளோடு உறவு, நம் அயலவரோடு உறவு மற்றும், பூமியோடு உள்ள உறவு ஆகிய மூன்று, அடிப்படையான மற்றும், நெருங்கிய உறவுகளோடு, மனித வாழ்வு இணைக்கப்பட்டுள்ளது” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

அர்ஜென்டீனா இளைஞர்களுக்கு திருத்தந்தை

மேலும், அர்ஜென்டீனா நாட்டில், திருப்பயணம் மேற்கொண்டுள்ள இளைஞர்கள் குழு ஒன்றிற்கு, காணொளிச் செய்தி ஒன்றை அனுப்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகை மாற்றவல்ல கருத்தியல்களைக்கொண்ட மற்றும், வாழ்வை, முழுமையாக வாழ்கின்ற மக்களாக இருங்கள் என்று இளையோரை ஊக்கப்படுத்தியுள்ளார். 

அர்ஜென்டீனா நாட்டின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள Nea மாநிலத்தின் இளைஞர்கள், செப்டம்பர் 19, கடந்த சனிக்கிழமையன்று மேற்கொண்ட 41வது திருப்பயணத்திற்கு திருத்தந்தை அனுப்பியுள்ள செய்தியில்,  சிலைகள் போன்று ஓரிடத்தில் இருக்காமல், உயிர்த்துடிப்புடன் வாழ்கின்ற மக்களாக இருங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா கொள்ளைநோய் காரணமாக, இவ்வாண்டு, இந்தத் திருப்பயணம், முன்னெப்போதும் நடைபெறாத முறையில், இணையம் வழியாக, வேறுபட்ட முறையில் நடைபெற்றிருந்தாலும், இளைஞர்களாகிய நீங்கள், நம் அன்னை மரியாவைச் சந்திக்கச் சென்ற, இந்த புதியமுறை திருப்பயணத்தில், நானும் உங்களோடு சேர்ந்து பயணம் செய்கிறேன், இது எவ்வகையிலும் ஒரு திருப்பயணமே என்று குறிப்பிட்டுள்ளார்.

மனித வாழ்வு ஒரு பயணம் என்பதை, ஒருபோதும் மறவாமல் இருப்பது, மிகவும் முக்கியம் என்றும், வாழ்வுப்பாதையில் இன்னல்கள் மற்றும், தவறுகள் இருந்தபோதிலும், மீண்டும், எப்போதும், சரியான பாதைக்குத் திரும்பி வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ள திருத்தந்தை, தவறான பாதையிலே தொடர்ந்து பயணித்தால், லோத் மனைவிபோன்று சிலையாக மாறவேண்டியருக்கும் எனவும் கூறியுள்ளார்.

Nea மாநிலத்தில் 1979ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இளைஞர்கள் திருப்பயணத்தில், பொதுவாக, ஏறத்தாழ மூன்று இலட்சம் இளைஞர்கள் கலந்துகொள்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 September 2020, 13:52