திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

மரியே, காயப்பட்ட இந்த இவ்வுலகைப் பராமரித்தருளும்

கி.பி. 450ம் ஆண்டில், எருசலேமில், கட்டப்பட்ட புனித அன்னாள் ஆலயம், அன்னை மரியா பிறந்த வீட்டின் மீது அமைக்கப்பட்டதாக வரலாறு கூறுகின்றது. இந்த ஆலய நோ்ந்தளிப்பு நிகழ்விலிருந்து, அன்னை மரியாவின் பிறப்பை, விழாவாகக் கொண்டாடும் வழக்கம் திருஅவையில் துவங்கியது.

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள் 

அன்னை மரியாவின் பிறப்பு விழாவான, செப்டம்பர் 08, இச்செவ்வாயன்று, காயப்பட்ட இந்த இவ்வுலகைப் பாதுகாக்குமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்னை மரியாவின் பரிந்துரையை மன்றாடினார்.

இச்செவ்வாயன்று, தன் டுவிட்டர் செய்தி வழியாக, அன்னை மரியாவிடம் மன்றாடியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “மரியே, இயேசுவைப் பராமரித்த அன்னையே, காயப்பட்ட இந்த உலகையும், உமது தாய்மைக்குரிய பாசத்தால் பராமரித்தருளும்” என்ற சொற்களை, அச்செய்தியில் பதிவுசெய்திருந்தார்.

அன்னை மரியாவின் பிறப்பு

கி.பி.150ம் ஆண்டில் எழுதப்பட்ட ‘யாக்கோபின் முதல் நற்செய்தி’ என்ற நூல், மரியாவின் பிறப்பு மற்றும், அவரது இளமைப்பருவம் பற்றிய தகவல்களைத் தருகிறது. கி.பி. 450ம் ஆண்டில், எருசலேமில், கட்டப்பட்ட புனித அன்னாள் ஆலயம், அன்னை மரியா பிறந்த வீட்டின் மீது அமைக்கப்பட்டதாக வரலாறு கூறுகின்றது. இந்த ஆலய நோ்ந்தளிப்பு நிகழ்விலிருந்து, அன்னை மரியாவின் பிறப்பை, விழாவாகக் கொண்டாடும் வழக்கம் திருஅவையில் துவங்கியது.

இந்த விழா, முதன்முதலாக கீழை வழிபாட்டுமுறை திருஅவையில் கொண்டாடப்பட்டது. ஆங்கர்ஸ் ஆயரான புனித மவுரில்லியுஸ் அவர்கள், 425ம் ஆண்டு தனக்கு கிடைத்த இறைச்செய்தியின்படி, கன்னி மரியா செப்டம்பர் 8ந்தேதி பிறந்தார் என அறிவித்தார். இதுவே, கன்னி மரியாவின் பிறப்பு விழாவை செப்டம்பர் 8ம் தேதி கொண்டாடும் வழக்கத்தை உருவாக்கியதாகச் சொல்லப்படுகிறது.

1671ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி போர்த்துக்கீசிய வர்த்தகர்கள் தமிழகத்தின் வேளாங்கண்ணியில் கரை சேர்ந்ததால், ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 8ம் தேதி, வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை விழா கொண்டாடப்படுகிறது.

மேலும், இந்தியாவில், ஒவ்வோர் ஆண்டும், அன்னை மரியாவின் பிறப்பு விழாவான, செப்டம்பர் 08ம் தேதி, பெண் குழந்தைகள் நாள் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 September 2020, 12:45