ஓசோன் மண்டலத்தைச் சீரழிக்கும் வாயுக்களின் வெளியேற்றம் ஓசோன் மண்டலத்தைச் சீரழிக்கும் வாயுக்களின் வெளியேற்றம் 

ஓசோன் மண்டலத்தைக் காக்கும் உலக நாள் - திருத்தந்தை

திருத்தந்தையின் டுவிட்டர் - "கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதில் இன்னும் தீவிர இலக்குகளை கடைபிடிக்க, நான் அனைத்து நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கிறேன்"

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஆயர்கள் மாமன்றத்தின் தலைமைச் செயலராக இதுவரைப் பணியாற்றிவந்த கர்தினால் லொரென்ஸோ பால்திஸ்ஸேரி (Lorenzo Baldisseri) அவர்கள் பணிஓய்வு பெற விழைந்து அனுப்பிய விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்த மாமன்ற இணைச் செயலராகப் பணியாற்றிவந்த ஆயர் மாரியோ கிரெக் (Mario Grech) அவர்களை, ஆயர்கள் மாமன்றத்தின் தலைமைச் செயலராக செப்டம்பர் 16, இப்புதனன்று நியமித்துள்ளார்.

மேலும், செப்டம்பர் மாதத் துவக்கத்திலிருந்து, அக்டோபர் 4ம் தேதி முடிய சிறப்பிக்கப்படும் படைப்பின் காலத்தையொட்டி தன் டுவிட்டர் செய்திகளை வெளியிட்டு வரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 16, இப்புதனன்று, ஓசோன் மண்டலத்தைக் காக்கும் உலக நாள் சிறப்பிக்கப்பட்டதை நினைவுறுத்த, மேலும் ஒரு டுவிட்டர் செய்தியை, இயற்கையைக் குறித்து வெளியிட்டார்.

"காலநிலையை மறுசீரமைத்து நிலைப்படுத்துவது, பூமிக்கோளத்தின் எதிர்காலத்திற்கு மிகவும் இன்றியமையாதது. எனவே, கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதில் இன்னும் தீவிர இலக்குகளை கடைபிடிக்க, நான் அனைத்து நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கிறேன்" என்ற சொற்களை, 'படைப்பின் காலம்' (#SeasonOfCreation) என்ற ‘ஹாஷ்டாக்’குடன்  திருத்தந்தை வெளியிட்டிருந்தார்.

மேலும், படைப்பின் காலத்தை மையப்படுத்தி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செப்டம்பர் 16, இப்புதனன்று வழங்கிய மறைக்கல்வி உரையில் வெளியிட்ட ஒரு கருத்தை, தன் இரண்டாவது டுவிட்டர் செய்தியாக வெளியிட்டார்.

"பல்வேறு ஆன்மீக அறிஞர்கள் சொல்லித்தந்துள்ளதுபோல், வானம், பூமி, கடல், மற்றும் ஒவ்வொரு படைப்பும், படைத்தவருடன் மீண்டும் நம் உறவைப் புதுப்பிக்க உதவும் அடையாளங்களாக அமைந்துள்ளன" என்ற சொற்களை, படைப்பின் காலம் என்ற ‘ஹாஷ்டாக்’குடன்  திருத்தந்தை பதிவு செய்திருந்தார்.

1987ம் ஆண்டு, செப்டம்பர் 16ம் தேதி, கனடா நாட்டின் மோன்ட்ரியால் நகரில் கூடிய ஐ.நா. நிறுவனத்தின் பன்னாட்டுப் பிரதிநிதிகள், ஓசோன் மண்டலத்தைச் சீரழிக்கும் வாயுக்களின் வெளியேற்றம் குறித்து ஓர் ஒப்பந்தத்தை நிறைவேற்றினர்.

இந்த நிகழ்வை மையப்படுத்தி, 1994ம் ஆண்டு முதல், ஐ.நா. நிறுவனம், ஒவ்வோர் ஆண்டும், செப்டம்பர் 16ம் தேதியன்று, ஓசோன் மண்டலத்தைக் காக்கும் உலக நாளை சிறப்பித்து வருகிறது.

பூமிக்கோளத்தின் அனைத்து உயிரினங்களுக்கும் ஓசோன் மண்டலம் தேவை என்பதை வலியுறுத்த, 2020ம் ஆண்டு சிறப்பிக்கப்பட்ட இந்த உலகநாள், "வாழ்வுக்காக ஓசோன்" என்பதை, தன் கருப்பொருளாகக் கொண்டிருந்தது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 September 2020, 14:38