தேடுதல்

மூன்று முதன்மை வானதூதர்கள் மூன்று முதன்மை வானதூதர்கள்  

புனித மிக்கேலே, எமது வாழ்வு போராட்டத்தில் உதவியருளும்

திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், 1951ம் ஆண்டு, முதன்மைத் தூதரான புனித கபிரியேலை, ஊடகங்களின் பாதுகாவலராக அறிவித்தார். புனித கபிரியேல், வத்திக்கான் வானொலியின் பாதுகாவலர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

புனிதர்கள் மிக்கேல், கபிரியேல், இரபேல் ஆகிய முதன்மை வானதூதர்களின் விழாவாகிய செப்டம்பர் 29, இச்செவ்வயான்று, அந்த தூதர்களின் முக்கிய பண்புகளை மையப்படுத்தி, தன் டுவிட்டர் செய்தியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

“புனித மிக்கேலே, மீட்புக்காக நாங்கள் தொடுக்கும் போரில் எமக்கு உதவியருளும். புனித கபிரியேலே, இயேசு எம்மை மீட்ட நற்செய்தியை எமக்குக் கொண்டுவாரும் மற்றும், எமக்கு நம்பிக்கையை அருளும். புனித இரபேலே, முழுமையான குணப்படுத்தல் பாதையில் எம் கரங்களைத் தாங்கியருளும் மற்றும், எமக்கு உதவியருளும்” என்ற சொற்கள், #ArchangelSaints என்ற 'ஹாஷ்டாக்'குடன், திருத்தந்தை வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

புனித மிக்கேல்

“கடவுளுக்கு நிகர் யார்” என்னும் பெயருடைய புனித மிக்கேல் பற்றி விவிலியத்தில் நான்கு முறை (தானி.10,13; தானி.12,1;யூதா1,9;தி.வெ.12,7-8) குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நான்கையும் வைத்து, புனித மிக்கேலின் பணி குறிப்பிடப்படுகின்றது. முதன்மை வானதூதரான புனித மிக்கேல், சாத்தானுக்கு எதிராகப் போரிடுகிறார். விசுவாசிகளின் ஆன்மாக்களை, குறிப்பாக, இறக்கும் நேரத்தில், அவற்றை தீய சக்திகளிடமிருந்து காப்பாற்றுகிறார். திருஅவையைப் பாதுகாக்கிறார். இறந்தவர்களின் ஆன்மாக்களை இறுதித் தீர்வுக்கு உட்படுத்துகிறார். எனவே இவர் நீதியின் வானதூதராகக் கருதப்படுகிறார் மற்றும், இவர், வத்திக்கானின் பாதுகாவலர்.

புனித கபிரியேல்

“கடவுளின் ஆற்றல்” என்னும் பெயருடைய புனித கபிரியேல், இரக்கத்தின் வானதூதர் என்று கருதப்படுகிறார். இவர், நாசரேத்து கன்னி மரியிடம் இயேசு பிறப்பு பற்றிய மங்களச் செய்தியை அறிவித்தவர். திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், 1951ம் ஆண்டு, ஊடகங்களின் பாதுகாவலராக இவரை அறிவித்தார். முதன்மைத் தூதரான புனித கபிரியேல்,  வத்திக்கான் வானொலியின் பாதுகாவலர்.

புனித இரபேல்

“கடவுள் குணமாக்குகிறார்” என்னும் பெயருடைய புனித இரபேல் பற்றி, விவிலியத்தில் தோபித்து நூலில் (5,13;7,8;12,15) குறிப்பிடப்பட்டுள்ளது. தோபித்தின் மகன் தோபியா, மேதியா நாடு சென்று, உறவினரான சாரா என்ற பெண்ணை மணந்து, பாதுகாப்பாக வீடுவந்து சேரும்வரை, அவருக்கு வழித்துணையாக இவர் சென்றார். அவர்களிடமிருந்து விடைபெறுவதற்குமுன், நான் இரபேல். ஆண்டவருடைய மாட்சிமிகு திருமுன் பணிபுரியும் ஏழு வானதூதர்களுள் ஒருவர்” என்று கூறி, தன்னை யார் என்று வெளிப்படுத்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 September 2020, 12:57