தேடுதல்

கியூபா நாட்டிலிருந்து வந்திருந்த சர்க்கஸ் குழுவின் சாகசங்களை இரசிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம் கியூபா நாட்டிலிருந்து வந்திருந்த சர்க்கஸ் குழுவின் சாகசங்களை இரசிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம் 

கியூபா நாட்டு மக்களுக்காக திருத்தந்தையின் இறைவேண்டல்

கோவிட் 19 தொற்றுநோய் நெருக்கடியிலிருந்து கியூபா நாட்டு மக்களை, கோப்ரே (Cobre) அன்னை மரியா காப்பாற்றவேண்டும் என்ற விண்ணப்பத்தை திருத்தந்தை எழுப்பினார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கியூபா நாட்டில் தான் மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 23, புதன் மறைக்கல்வி உரையின்போது நினைவுகூர்ந்த வேளையில், தற்போது அந்நாட்டில் கோவிட் 19 தொற்றுநோயின் தாக்கம் அதிகம் இருப்பது குறித்து தன் கவலையை வெளியிட்டார்.

2015ம் ஆண்டு செப்டம்பர் 19ம் தேதியிலிருந்து, 22ம் தேதி முடிய கியூபா நாட்டில் மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தில் தான் சந்தித்த மக்களின் நினைவு இன்னும் தன்னில் தங்கியுள்ளது என்று குறிப்பிட்ட திருத்தந்தை, தற்போது அம்மக்கள் சந்தித்து வரும் தொற்றுநோய் நெருக்கடியிலிருந்து அம்மக்களை, கோப்ரே (Cobre) அன்னை மரியா காப்பாற்றவேண்டும் என்ற விண்ணப்பத்தை எழுப்பினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கியூபா நாட்டில் மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தின்போது அவர் வெளிப்படுத்திய அக்கறையும், பரிவும் தங்கள் நாட்டு மக்களுக்கு ஓர் உந்துசக்தியாக இன்றுவரை அமைந்துள்ளது என்று அந்நாட்டு ஆயர் பேரவை அண்மையில் ஓர் அறிக்கையில் கூறியுள்ளது.

கியூபா நாட்டில் கோவிட் 19 கொள்ளைநோயினால் 5000த்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இவர்களில் 120 பேர் இறந்துள்ளனர் என்றும் ஆயர்களின் அறிக்கை கூறுகிறது.

2015ம் ஆண்டு செப்டம்பர் 19ம் தேதி, கியூபா நாட்டில் தன் திருத்தூதுப் பயணத்தைத் துவக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதைத் தொடர்ந்து, செப்டம்பர் 23ம் தேதி முதல், 27ம் தேதி முடிய அமெரிக்க ஐக்கிய நாட்டில் தன் திருத்தூதுப் பயணத்தை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 September 2020, 14:32