படைப்பு குறித்த நம் அக்கறையை வெளிப்படுத்துவோம்

திருத்தந்தை : ஓர் ஆரஞ்சுப் பழத்தை பிழிவதுபோல், நாம் இவ்வுலகின் வளங்களை பிழிந்து எடுத்துக்கொண்டிருக்கிறோம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

படைப்பு குறித்த நம் பொறுப்புணர்வுடன் கூடிய அக்கறையை வெளிப்படுத்துவோம் என்ற அழைப்பைத் தாங்கியதாக, திருத்தந்தையின் செப்டம்பர் மாத இறைவேண்டுதல் வெளியிடப்பட்டுள்ளது.

இம்மாதம் சிறப்பிக்கப்படும் படைப்பின் இறைவேண்டல் காலம் குறித்தே, இம்மாதத்திற்குரிய செபக்கருத்தையும் காணொளிச் செய்தியாக வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வுலகின் வளங்களை மதிக்க நாம் கற்றுக்கொள்ளவேண்டும் என அனைவரும் செபிப்போம் எனவும், தன் செய்தியில் விண்ணப்பித்துள்ளார்.

ஓர் ஆரஞ்சுப்பழத்தை பிழிவதுபோல், நாம் இவ்வுலகின் வளங்களைப் பிழிந்து எடுத்துக்கொண்டிருக்கிறோம் எனக் கவலையை வெளியிடும் திருத்தந்தையின் செய்தி, உலகின் வடபகுதியில் உள்ள நாடுகள், தென்பகுதியில் உள்ள வளங்களை உறிஞ்சி தங்களை வளப்படுத்திக்கொண்டன, எனக் கூறுவதோடு, யார் இந்த சுற்றுச்சூழல் கடனை திருப்பி அளிக்கப்போகிறார் என்ற கேள்வியையும் முன்வைக்கிறது.

தங்கள் சொந்த நாட்டில் செய்யமுடியாத சுரண்டல்களை, பன்னாட்டு நிறுவனங்கள், ஏனைய நாடுகளில் செய்துவரும்போது, சுற்றுச்சூழல் அழிவு மேலும் அதிகரிக்கின்றது எனவும், தன் செப விண்ணப்பத்தில் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இவ்வுலகின் வளங்கள், சுரண்டப்படுவதற்கல்ல, மாறாக, பகிர்ந்துகொள்ளப்படவே என்பதை, நாளையல்ல, மாறாக, இன்றே செயல்படுத்துவோம், எனவும் விண்ணப்பித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 September 2020, 13:43