தேடுதல்

வத்திக்கானுக்கு பாதுகாப்பு வழங்கும் இத்தாலிய காவல் துறையினருடன் திருத்தந்தை வத்திக்கானுக்கு பாதுகாப்பு வழங்கும் இத்தாலிய காவல் துறையினருடன் திருத்தந்தை  

இத்தாலியின் வத்திக்கான் பாதுகாப்பு துறையுடன் திருத்தந்தை

வத்திக்கான் வளாக பாதுகாப்பிலும், வத்திக்கானுக்கு வரும் திருப்பயணிகளின் பாதுகாப்பிலும் அக்கறையுடனும், தியாக உணர்வுடனும் செயல்பட்டுவரும் இத்தாலியக் காவல்துறை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலுக்கும், வளாகத்திற்கும், வருகைதரும் திருப்பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கத்தில் 75 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட இத்தாலியக் காவல்துறையின் வத்திக்கான் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றுவோரையும், அவர்களின் குடும்பத்தினரையும், இத்திங்கள் காலை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

1929ம் ஆண்டு வத்திக்கானுக்கும் இத்தாலிக்கும் இடையே இலாத்தரன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதன் அடிப்படையில், 1945ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இத்தாலி காவல்துறையின் வத்திக்கான் பாதுகாப்பு பிரிவு துவக்கப்பட்டதன் 75ம் ஆண்டு நிறைவு, இவ்வாண்டு கொண்டாடப்படும் நிலையில், இப்பிரிவில் பணியாற்றுவோரை திருத்தந்தை சந்தித்து, தன் வாழ்த்துக்களைக் கூறினார்.

உரோம் நகரை 1943ம் ஆண்டு ஆக்கிரமித்த ஜெர்மன் துருப்புக்களால் எழுந்த பிரச்னைகளையும், அதனைத் தொடர்ந்து வத்திக்கான் வளாகம், மற்றும், திருப்பயணிகள் குறித்து எழுந்த அக்கறையையும் சுட்டிக்காட்டி, இந்த காவல்துறை பிரிவு துவக்கப்பட்டதைக் குறித்த வரலாற்றை திருத்தந்தை நினைவூட்டினார்.

வத்திக்கான் வளாக பாதுகாப்பிலும், வத்திக்கானுக்கு வரும் திருப்பயணிகளின் பாதுகாப்பிலும் அக்கறையுடனும், தியாக உணர்வுடனும் செயல்பட்டுவரும் இப்பிரிவின் இத்தாலியக் காவல்துறையினருக்கு தன் நன்றியையும் பாராட்டையும் வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தாலியில் பங்குத்தளங்களைச் சந்திக்கச் செல்லும்போது, தனக்கு பாதுகாப்பு வழங்கிவருவதற்கும் நன்றியை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  உலக அளவில் பல்வேறு மாற்றங்கள் இடம்பெற்றுவருகின்ற போதிலும், திருத்தந்தைக்கும் திருப்பயணிகளுக்கும், இக்காவல் துறை பாதுகாப்பு வழங்குவது குறித்து கொண்டுள்ள கொள்கைகளில் எவ்வித மாற்றமும் இடம்பெறவில்லை எனவும் பாராட்டினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 September 2020, 13:58