திருத்தந்தை புனித 2ம் யோவான் பால், கர்தினால் Simonis  திருத்தந்தை புனித 2ம் யோவான் பால், கர்தினால் Simonis  

கர்தினால் Simonisன் மறைவுக்கு திருத்தந்தை இரங்கல் செய்தி

நெதர்லாந்து கர்தினால் Simonis அவர்களின் மறைவோடு, கத்தோலிக்கத் திருஅவையில், மொத்த கர்தினால்களின் எண்ணிக்கை 220 ஆகவும், இவர்களில் 80 வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை 122 ஆகவும் மாறியுள்ளன.

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

செப்டம்பர் 02, இப்புதனன்று, இறைபதம் அடைந்துள்ள நெதர்லாந்து நாட்டு கர்தினால் Adrianus Johannes Simonis அவர்களின் ஆன்மா, நிறையமைதி அடைய, இறைவேண்டல் செய்வதாகவும், அவரது மறைவால் வருந்தும் அந்நாட்டினருடன் தனது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிப்பதாகவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

நெதர்லாந்து நாட்டின் Utrecht உயர்மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயர் கர்தினால் Simonis அவர்களின் மறைவை முன்னிட்டு, அவ்வுயர்மறைமாவட்டத்தின் தற்போதைய பேராயர் கர்தினால் Willem Jacobus Eijk அவர்களுக்கு இரங்கல் செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை, கர்தினால் Simonis அவர்களின் மறைவால் வருந்தும் அனைவருக்கும், தனது அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்குவதாகவும் தெரிவித்துள்ள்ளார்.

கர்தினால் Simonis அவர்கள், நற்செய்திக்கு, பிரமாணிக்கத்துடன் சான்று பகர்ந்தது, திருஅவையின் ஒன்றிப்புக்கு அவர் மேற்கொண்ட மதிப்புமிக்க முயற்சிகள், Rotterdam மற்றும், Utrecht தலத்திருஅவைகளுக்கு அவர் ஆற்றிய சிறப்பான மேய்ப்புப்பணிகள் போன்ற எல்லாவற்றையும், தான் நன்றியுடன் நினைவுகூர்வதாக, தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நெதர்லாந்து நாட்டின் Lisse நகரில், 1931ம் ஆண்டு பிறந்த கர்தினால் Simonis அவர்கள், 1957ம் ஆண்டு அருள்பணித்துவ வாழ்வுக்கும், 1970ம் ஆண்டு ஆயர் பணிக்கும் திருப்பொழிவு செய்யப்பட்டார். திருத்தந்தை புனித 2ம் யோவான் பால் அவர்களால், 1985ம் ஆண்டு கர்தினாலாக உயர்த்தப்பட்ட இவர், 1983ம் ஆண்டு முதல், 2007ம் ஆண்டு வரை, Utrecht உயர்மறைமாவட்டத்தின் பேராயராகப் பணியாற்றினார்.

செப்டம்பர் 02, இப்புதனன்று, தனது 88வது வயதில் இறைவனடி சேர்ந்த, கர்தினால் Simonis அவர்களின் மறைவோடு, கத்தோலிக்கத் திருஅவையில், மொத்த கர்தினால்களின் எண்ணிக்கை 220 ஆகவும், இவர்களில், புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும், எண்பது வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை 122 ஆகவும் மாறியுள்ளன. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 September 2020, 12:37