அருள்பணி ரொபெர்த்தோ மால்ஜெஸீனி அருள்பணி ரொபெர்த்தோ மால்ஜெஸீனி  

பிறரன்பின் சாட்சியாக கொல்லப்பட்டவர் – திருத்தந்தை வேதனை

கோமோ நகரின் சான் ரோக்கோ பகுதியில், பணியாற்றிய 51 வயது நிறைந்த அருள்பணி ரொபெர்த்தோ அவர்கள், தன் அருள்பணித்துவ வாழ்வில், வறியோர், வீடற்றோர், மற்றும் சமுதாயத்தால் ஒடுக்கப்பட்டோர் நடுவே உழைத்து வந்தவர்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இத்தாலியின் கோமோ (Como) என்ற நகரில், வறியோர், குறிப்பாக, வீடற்றோர் நடுவே பணியாற்றிவந்த அருள்பணி ரொபெர்த்தோ மால்ஜெஸீனி (Roberto Malgesini) அவர்கள், செப்டம்பர் 15, இச்செவ்வாயன்று கொல்லப்பட்டுள்ளதைக் குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் ஆழ்ந்த வேதனையை வெளியிட்டுள்ளார்.

இப்புதனன்று வழங்கிய மறைக்கல்வி உரையின் இறுதியில், கவலைதோய்ந்த குரலில் இச்செய்தியை, கூடியிருந்த மக்களுடன் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை, அவர்களுடன் இணைந்து செபத்தில் ஒரு சில நிமிடங்கள் செலவிட்டார்.

அருள்பணி ரொபெர்த்தோ அவர்களின் மரணம், பிறரன்பின் சாட்சிய மரணம் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவரது மறைவையொட்டி துயருறும் அவரது குடும்பத்தினர், கோமோ கத்தோலிக்க குடும்பம், தலத்திருஅவையின் ஆயர், அருள்பணியாளர் அனைவரோடும் தான் செபத்திலும், வேதனையிலும் ஒன்றித்திருப்பதாகக் கூறினார்.

கோமோ நகரின் சான் ரோக்கோ பகுதியில், பணியாற்றிய 51 வயது நிறைந்த அருள்பணி ரொபெர்த்தோ அவர்கள், தன் அருள்பணித்துவ வாழ்வில், வறியோர், வீடற்றோர், மற்றும் சமுதாயத்தால் ஒடுக்கப்பட்டோர் நடுவே உழைத்துவந்தவர்.

ஒவ்வொருநாளும் காலையில், வறியோருக்கு, காலை உணவை வழங்கிவந்த அருள்பணி ரொபெர்த்தோ அவர்கள், செப்டம்பர் 15, இச்செவ்வாய் காலை ஏழுமணி அளவில், காலை உணவு பொட்டலங்களை ஏந்தியவண்ணம், தன் இல்லத்தை விட்டு வெளியேறியபோது, அடையாளம் தெரியாத ஒருவரால் பலமுறை கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தார்.

அவரைக் கொன்றவர், அருள்பணியாளரிடம் உதவிகள் பெற்றவராக இருக்கலாம் என்றும், அவர், ஒருவேளை, மனநலம் குன்றியவராகவும் இருக்கலாம் என்றும் செய்திகள் கூறுகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 September 2020, 14:32