திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

திருத்தந்தை: பொருள்களை வீணாக்குவது, பெரும் இடறல்

சுவாசிப்பதற்கு தூய்மையான காற்று, குடிப்பதற்கு சுத்தமான நீர், உண்பதற்குத் தேவையான உணவு, வாழ்வதற்கு சொந்த இடம் ஆகிய உரிமைகள், இப்பூமியில் வாழ்கின்ற எந்த மனிதருக்கும் மறுக்கப்படக் கூடாது – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவா உமக்கே புகழ் எனப்படும், தனது Laudato si’ திருமடலில் அழைப்பு விடுத்திருந்த ஒருங்கமைவு சுற்றுச்சூழலை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள குழுமங்கள் நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்டவர்களை, செப்டம்பர் 12, இச்சனிக்கிழமை நண்பகலில், வத்திக்கானில் சந்தித்து உரையாற்றினார்.

ஒருங்கமைவு என்ற சொல்லுக்கு விளக்கமளித்த திருத்தந்தை, நாம் அனைவரும் படைப்புயிர்கள், படைப்பில் அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புகொண்டுள்ளன மற்றும், அவை நல்லிணக்கத்துடன் உள்ளன என்று உறுதிபடக் கூறலாம், இந்த ஓர் உண்மையை, தற்போதைய கோவிட்-19 கொள்ளைநோயும் நமக்கு எடுத்துரைத்துள்ளது என்று திருத்தந்தை கூறினார்.

மனிதரின் நலவாழ்வு, அவர் வாழ்கின்ற சுற்றுச்சூழலிலிருந்து பிரிக்கமுடியாதது என்பதை, கொரோனா கொள்ளைநோய் உணர்த்தியுள்ளது என்று கூறிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், காலநிலை மாற்றம், இயற்கையின் சமநிலையை குலைத்துள்ளதோடு அல்லாமல், வறுமை மற்றும், பசியை அதிகரித்து, சமுதாயத்தில் மிகவும் நலிவுற்றோரையும் பாதித்துள்ளது, இது அம்மக்களை கட்டாயமாகப் புலம்பெயர வைக்கின்றது என்றும் கூறினார்.

படைப்பைப் புறக்கணிப்பதும், சமுதாய அநீதிகளும், ஒருவர் ஒருவரைப் பாதிக்கின்றன, சமநிலையின்றி சுற்றுச்சூழல் இல்லை, சுற்றுச்சூழல் இன்றி சமநிலை இல்லை என்று நாம் சொல்லலாம் என்றுரைத்த திருத்தந்தை, இக்காலத்தில் நம்மைச் சூழ்ந்துள்ள இயற்கை, நாம் வியந்து பார்க்கும் நிலையில் இல்லை, மாறாக, அது, அளவுக்கதிகமாக வளங்களை நுகர்வதிலும், இலாபத்தின்மீதும் பேரார்வம் கொண்டவர்களிடம் பலியாகியுள்ளது என்று கவலை தெரிவித்தார்.

காடுகள் எரிப்பு போன்ற செய்திகள், தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளன என்றும், கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தியானம், பரிவன்பு ஆகிய இரு கூறுகளை அடிப்படையாக வைத்து, ஒருங்கமைவு சுற்றுச்சூழலுக்கு விளக்கம் அளித்தார்.

புறக்கணிப்பு என்ற தொற்றுப்பரவல் நோய்க்கு, சிறந்த மருந்து பரிவன்பே எனவும், பரிவன்பு குறைவுபடுவதால், வயதுமுதிர்ந்தோர், சிறார், தொழிலாளர், மாற்றுத்திறனாளிகள் போன்றோர் அலட்சியப்படுத்தப்படுகின்றனர் எனவும் உரைத்த திருத்தந்தை, பொருள்களை வீணாக்குவது, பெரும் இடறல் என்று கூறினார்.   

தொழில்மயமான நாடுகளில் ஓராண்டில் 100 கோடி டன்களுக்கு அதிகமாக உணவு வீணாக்கப்படுகிறது என்று, FAO அமைப்பின் அறிக்கை கூறுவதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, பொருள்கள் வீணாக்கப்படுவதற்கு எதிராக ஒன்றுசேர்ந்து முயற்சிப்போம், இதற்கு அரசியலிலும் ஆர்வம் தேவை என்று கூறினார்.

சுவாசிப்பதற்கு தூய்மையான காற்று, குடிப்பதற்கு சுத்தமான நீர், உண்பதற்குத் தேவையான உணவு, வாழ்வதற்கு சொந்த இடம் ஆகிய உரிமைகள், இப்பூமியில் வாழ்கின்ற எந்த மனிதருக்கும் மறுக்கப்படக் கூடாது எனவும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையே, இயற்கைப் பேரிடர்கள் மற்றும், வளங்கள் பற்றாக்குறைவால், 2050ம் ஆண்டுக்குள், குறைந்தது 120 கோடி மக்கள், ஆபத்து அதிகமாகவுள்ள பகுதிகளில் வாழ்வார்கள் என்று, பொருளாதாரம் மற்றும், அமைதி (IEP) குறித்த ஓர் ஆய்வறிக்கை கூறுகின்றது. இயற்கைப் பேரிடர்களால், மத்திய ஆசியா மற்றும், மத்திய கிழக்குப் பகுதியும், நச்சுப்பொருள் சார்ந்த அச்சுறுத்தல்களால், பாகிஸ்தானும் ஈரானும் பாதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 September 2020, 13:46