மூவேளை செப உரை - 130920 மூவேளை செப உரை - 130920 

Moria முகாமைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோருடன் ஒருமைப்பாடு

திருத்தந்தை : சமுதாய, மற்றும், அரசியல் நிலைகளில் தாங்கள் அடைந்துள்ள ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் விதமாக மக்கள் மேற்கொள்ளும் போராட்டங்கள், வன்முறையற்ற, அமைதியான முறையில் இடம்பெறவேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

கிரேக்க நாட்டின் லெஸ்போஸ் தீவிலுள்ள  Moria  புலம்பெயர்ந்தோர் முகாமில், கடந்த வாரம் இடம்பெற்ற தீவிபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடன் தன் அருகாமையை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரைக்குப்பின், இதனை தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடன் தன் அருகாமையையையும் ஒருமைப்பாட்டையும் வெளியிட்டதோடு, 2016ம் ஆண்டு இதே புலம்பெயர்ந்தோர் முகாமை, தான் சென்று சந்தித்தது இன்றும் தன் நினைவில் உள்ளதாக கூறினார்.

லெஸ்போஸ் தீவின் புலம்பெயர்ந்தோர் முகாம் தீக்கிரையாகியுள்ளதைத் தொடர்ந்து ஏறத்தாழ 13,000 பேர் தங்கள் தங்குமிடங்களை இழந்துள்ளனர், மற்றும், ஐரோப்பிய காரித்தாஸ் அமைப்பு இவர்களிடையே தன் பணிகளை அதிகரித்துள்ளது.

அமைதி வழிகளில் போராட்டங்கள்

மேலும், இவ்வுலகின் பல்வேறு பகுதிகளில் இடம்பெறும் போராட்டங்கள், மற்றும், எதிர்ப்பு ஊர்வலங்கள் குறித்து விண்ணப்பம் ஒன்றையும், இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப்பின் விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.,

சமுதாய, மற்றும், அரசியல் நிலைகளில் தாங்கள் அடைந்துள்ள ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் விதமாக மக்கள் மேற்கொள்ளும் போராட்டங்கள், வன்முறையற்ற, அமைதியான முறையில் இடம்பெறவேண்டும் என அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பொறுப்பிலுள்ள தலைவர்களும், மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிமடுப்பவர்களாக, மனித உரிமைகளையும், மக்களின் சுதந்திரத்தையும் காப்பவர்களாக செயல்படவேண்டும் என அழைப்புவிடுத்த திருத்தந்தை, இத்தகையப் போராட்டங்கள் இடம்பெறும் பகுதிகளிலுள்ள திருஅவை அதிகாரிகள், உரையாடல்களையும், ஒப்புரவையும் உருவாக்குபவர்களாக செயல்படவேண்டும் எனவும் விண்ணப்பித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 September 2020, 12:59