தேடுதல்

Vatican News
கொரோனா தொற்றுக்கிருமி சிகிச்சை கொரோனா தொற்றுக்கிருமி சிகிச்சை   (ANSA)

கோவிட்-19, சமுதாயத்தில் உறவுகளைப் பாதித்துள்ளது

ஐரோப்பிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் (CCEE) ஆண்டு நிறையமர்வு மெய்நிகர் கூட்டத்திற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

செப்டம்பர் 26, இச்சனிக்கிழமையன்று நிறைவடைந்த, ஐரோப்பிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் (CCEE) ஆண்டு நிறையமர்வு மெய்நிகர் கூட்டத்திற்கு செய்தி ஒன்றை அனுப்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்போதைய கொள்ளைநோய், மக்களுக்கு மத்தியிலும், சமுதாயத்திலும் உறவுகளைப் பாதித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா கொள்ளைநோய், நமது பழக்கவழக்கங்கள், உறவுகள் போன்றவற்றை மட்டுமல்லாமல், சமுதாய மற்றும், பொருளாதார வாழ்வு நிலைகளையும் முற்றிலும் மாற்றியுள்ளது என்றுரைத்துள்ள திருத்தந்தை, இது, திருஅவையின் பல மேய்ப்புப்பணி நடவடிக்கைகள், மற்றும், சமய நடைமுறைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார்.

இந்தக் கொள்ளைநோயினால் உயிரிழந்த பல வயதுமுதிர்ந்தவர்கள், குடும்பங்கள் எதிர்நோக்கும் கடும்துன்பம், சிறார் மற்றும், இளைஞர்கள் வெளியே செல்ல இயலாமல் வீடுகளிலே இருப்பது போன்றவற்றை தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, பல அருள்பணியாளர்களும், துறவியரும், துணிவுடன் இக்காலத்தில் மேற்கொள்ளும் மேய்ப்புப்பணிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இப்போது வறுமையின் புதிய வடிவங்கள் உருவாகியுள்ளதால், பலவீனமானவர்கள் மீது சிறப்புக் கவனம் செலுத்தி, பிறரன்புப் பணிகளை, புதிய படைப்பாற்றலுடன் நாம் தொடர்ந்து ஆற்றவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள திருத்தந்தை, இப்போதைய அனுபவப் பாடங்களை வைத்து, வருங்காலத்தின் கூறுகளை நாம் தெளிந்து தேர்வு செய்யவேண்டும் என்று கூறினார்.

CCEE கூட்டமைப்பின் தலைவரான கர்தினால் ஆஞ்சலோ பஞ்ஞாஸ்கோ அவர்களுக்கு இச்செய்தியை அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "கொள்ளைநோய்க்குப்பின் ஐரோப்பாவில் திருஅவை: படைப்பு மற்றும் குழுமத்தின் கூறுகள்" என்ற தலைப்பில், இக்கூட்டம் நடைபெற்றதற்கு, தன் பாராட்டுதல்களைத் தெரிவித்துள்ளார்.

26 September 2020, 15:09