புனித தமாசோ (San Damaso) வளாகத்தில், மக்களை சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் புனித தமாசோ (San Damaso) வளாகத்தில், மக்களை சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் 

புதன் மறைக்கல்வியுரை : மனிதரின் திறமைகள், மாண்பை மதிப்போம்

இவ்வுலகிற்கு குணப்படுத்தலையும், நம்பிக்கையையும் வழங்கும் நோக்கத்தில் ஒன்றிணைந்து உழைக்க நாம் அழைப்புப் பெற்றுள்ளோம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

கடந்த பல மாதங்களாக, இவ்வுலகை அச்சுறுத்திவரும் கொரோனா தொற்றுநோய் குறித்து, ஆகஸ்ட் மாத துவக்கத்திலிருந்து, 'உலகை குணப்படுத்தல்’ என்ற தலைப்பில், தன் சிந்தனைகளை, புதன் மறைக்கல்வி உரைகளில், ஒரு தொடராக பகிர்ந்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 23ம் தேதி, இப்புதனன்று, 'ஒன்றிணைந்து பணியாற்றுதல்' என்ற கருத்தில் உரையை தொடர்ந்தார்.

செப்டம்பர் மாதத்தின் முதல் புதன்கிழமையிலிருந்து, வத்திக்கானிலுள்ள புனித தமாசோ (San Damaso) வளாகத்தில், மக்களை நேரடியாக சந்தித்துவரும் திருத்தந்தை, அதே வளாகத்திலேயே, இவ்வாரமும் மக்களைச் சந்தித்து உரை வழங்கினார். முதலில், புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம், 12ம் பிரிவிலிருந்து ஒரு பகுதி, பல மொழிகளில் வாசிக்கப்பட்டது.

1 கொரி. 12,14.21-22.24-25

உடல் ஒரே உறுப்பால் ஆனது அல்ல; பல உறுப்புகளால் ஆனது. கண் கையைப்பார்த்து, “நீ எனக்குத் தேவையில்லை” என்றோ தலை கால்களைப் பார்த்து, “நீங்கள் எனக்குத் தேவையில்லை” என்றோ சொல்ல முடியாது. மாறாக, உடலில் மிக வலுவற்றனவாய்த் தோன்றும் உறுப்புகளே மிகவும் தேவையானவையாய் இருக்கின்றன. மதிப்புக் குறைந்த உறுப்புகளுக்கு மிகுந்த மதிப்புக் கொடுத்தே கடவுள் உடலை ஒன்றித்து உருவாக்கினார். உடலில் பிளவு ஏற்படாமல், ஒவ்வொரு உறுப்பும் மற்ற உறுப்புகளின் மீது ஒரேவிதக் கவலை கொள்ளவேண்டுமென்றே இப்படிச் செய்தார்.

இந்த வாசகத்திற்குப்பின், திருத்தந்தையின் மறைக்கல்வியுரை துவங்கியது.

மறைக்கல்வியுரை

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, தற்போதைய கொள்ளை நோயின் விளைவுகளை, திருஅவையின் சமுதாயப் படிப்பினைகளின் ஒளியில் சிந்தித்துவரும் நாம், நம் சகோதரர், சகோதரிகளுடன், குறிப்பாக, ஏழைகள், பாதிப்படைய வாய்ப்புடையோர், ஒதுக்கிவைக்கப்பட்டவர்கள், ஆகியோருடன் ஒருமைப்பாட்டுணர்வைக் கொண்டிருக்க வேண்டிய தேவை குறித்து சிந்தித்தோம். தனிப்பட்டவர்களும், பல்வேறு அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும், விசுவாசிகள் என்ற முறையில், இவ்வுலகிற்கு குணப்படுத்தலையும், நம்பிக்கையையும் வழங்கும் நோக்கத்தில் ஒன்றிணைந்து உழைக்க நாம் அழைப்புப் பெற்றுள்ளோம்.

ஒருமைப்பாடு என்பது, சமுதாயத்தின் ஒவ்வொரு துணையமைப்பையும் மதித்து ஏற்பதை உள்ளடக்குகின்றது. சமுதாயத்தின் அனைத்துப் படிநிலைகளும், அதாவது, அரசு நிர்வாகம், அதன் கீழுள்ளவை, குடும்பங்கள், திருஅவை ஆகியவை, சமுதாயம் எனும் துணியை பின்னி உருவாக்கும் நூல்களாக இருந்து, புத்துயிரளிக்கும் பங்கைக் கொண்டுள்ளன. புனித பவுல் எடுத்துரைப்பதுபோல், உடலின் சில உறுப்புகள் மிக வலுவற்றனவாய் தோன்றினாலும், உடல் நன்முறையில் செயல்பட, அனைத்து உறுப்புக்களும் தேவை.

கொள்ளைநோய்க் காலத்தில் முடங்கிப்போயிருந்த மக்களுக்கு தனியார்களும், குழுக்களும் ஆற்றிய பணிகள் பாராட்டும்படியாக இருந்தன. வருங்காலத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கும் நம் பாதையில், சமுதாயத்தின் ஒவ்வொரு உறுப்பினரின் திறமைகள், மற்றும், மாண்பை மதிப்போம்.  நீதியுடன் கூடிய சமூக ஒழுங்கமைவை கட்டியெழுப்பி, சமூக நெருக்கடிகளிலிருந்து வெளிவருவதற்குத் தேவையான முயற்சிகளில், ஒருமைப்பாடு, மற்றும்,  துணையமைப்புகளாக ஒன்றிணைந்து உள்ளோம் என்ற கொள்கைகள், நம் முயற்சிகளுக்கு வழிகாட்டிகளாக இருக்கட்டும்.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதியோர், இளையோர், நோயுற்றோர், புதுமணத்தம்பதியர் ஆகியோரை நோக்கி தன் எண்ணங்கள் செல்வதாக எடுத்துரைத்தார். இப்புதனன்று, இத்தாலி நாட்டைச் சேர்ந்த பியெத்ரெல்சீனாவின் புனித பியோ அவர்களின் விழா சிறப்பிக்கப்படுவதை நினைவூட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விசுவாசம் மற்றும் பிறரன்பின் சாடசியாகவும், ஒப்புரவு எனும் அருளடையாளத்தை சோர்வின்றி நிறைவேற்றியவராகவும் செயல்பட்ட புனித பியோ அவர்களின் எடுத்துக்காட்டை முன்வைத்தார். இறுதியில் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 September 2020, 12:00