தேடுதல்

Vatican News
திருத்தந்தை பிரான்சிஸ் மரம் நடுகின்றார் திருத்தந்தை பிரான்சிஸ் மரம் நடுகின்றார்  

நம் கடமைகளை நினைவுகூரவும், புதுப்பிக்கவும் உரிய காலம்

செப்டம்பர் முதல் தேதியிலிருந்து, அசிசியின் புனித பிரான்சிஸ் அவர்களின் திருவிழாவான அக்டோபர் 4ம் தேதிவரை, படைப்பின் இறைவேண்டல் காலம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

செப்டம்பர் முதல் தேதி இச்செவ்வாய்க்கிழமை முதல், அக்டோபர் 4ம் தேதி வரை சிறப்பிக்கப்படும் படைப்பின் கால யூபிலிக் கொண்டாட்டங்களையொட்டி, சிறப்புச் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

'ஐம்பதாம் ஆண்டைத் தூயதாக்கி, நாட்டில் வாழ்வோருக்கெல்லாம் தன்னுரிமை அறிவியுங்கள். அது உங்கள் யூபிலி ஆண்டு', (லேவி 25:10) என்ற லேவியர் நூல் வார்த்தைகளுடன் துவங்கும் திருத்தந்தையின் செய்தி, செப்டம்பர் முதல் தேதியிலிருந்து, அசிசியின் புனித பிரான்சிஸ் அவர்களின் திருவிழாவான அக்டோபர் 4ம் தேதிவரை கொண்டாடப்படும் இச்செப நிகழ்வு, படைப்பு குறித்த நம் கடமைகளை நினைவுகூரவும், அதற்கே திரும்பவும், ஓய்வெடுக்கவும், மீட்டுப் புதுப்பிக்கவும், மகிழவும் உரிய காலம் என சுட்டிக்காட்டுகிறது.

ஒவ்வோர் ஆண்டும் இந்த காலக்கட்டத்தில், 'கிறிஸ்தவர்கள் ஒன்றிணைந்து, படைப்பின் இறைவன் மீது தங்கள் நம்பிக்கையைப் புதுப்பிப்பதுடன், நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியின் மீது நம் அக்கறையை வெளிப்படுத்தி உழைக்கவும், செபிக்கவும் உறுதி பூணும் காலம் இது' என தன் செய்தியில் கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இக்காலத்தின் முக்கியத்துவத்தை ஐந்து பிரிவுகளாகப் பிரித்து விளக்கியுள்ளார்.

1. நினைவுகூர்தலின் காலம்

படைப்பின் இறுதி நோக்கம் என்பது, இறைவன் வழங்கும் நிரந்தர ஓய்வில் நுழைவதாகும் என்பதை நினைவுகூர நாம் அழைக்கப்பட்டுள்ளோம், என உரைக்கிறது, திருத்தந்தையின் செய்தி.

யூபிலி என்பது, வாழவும் வளரவும்,  படைப்பிற்கு வழங்கப்பட்டுள்ள முழு முதல் அழைப்பை நினைவுகூரத் தேவையான அருளை வழங்கும் காலம் எனக் கூறும் திருத்தந்தை, படைப்பின் இறைவனோடும், நம் சகோதரர், சகோதரிகளோடும், ஏனைய படைப்பனைத்தோடும், ஒன்றித்து ஒரே குடும்ப அங்கத்தினர்களாக, ஒருவருக்கொருவர் பின்னிப் பிணைந்து வாழும் நாம், உடன்பிறந்தத்தன்மை, நீதி, மற்றவர்களுக்கு உண்மையாயிருத்தல் என்பவற்றைச் சார்ந்து,  இயற்கையோடு நம் உறவு உள்ளது என்பதை நினைவுகூரும் காலம் இது என மேலும் கூறியுள்ளார்.

2. திரும்பி வரும் காலம்

படைப்பின் இறைவனோடும், நம் சகோதரர், சகோதரிகளோடும், ஏனைய படைப்பனைத்தோடும் உள்ள உறவின் பிணைப்பை முறித்துள்ள நாம், அது குறித்து மனம் வருந்தி, திரும்பி வரவேண்டிய காலம் இது என உரைக்கும் திருத்தந்தையின் செய்தி, ஏழைகள், மற்றும், உதவித்தேவைப்படுவோரின் குரல்களுக்கு நாம் அதிகம் அதிகமாக இக்காலத்தில் செவிமடுக்கவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

சந்தைப்பொருட்களாக மக்கள் கடத்தப்படுதல், பாலர் தொழிலாளர், என அனைத்து விதமான நவீன அடிமை முறைகளும் ஒழிக்கப்பட்டு, மக்கள் விடுதலை அடையவேண்டிய காலம் இது எனவும், திருத்தந்தையின் செய்தி கூறுகிறது.

3. ஓய்வின் காலம்

நிலத்தில் வாழ்வோரும் நிலமும் ஓய்வெடுக்கவேண்டிய தேவை உள்ளது, ஏனெனில், படைப்பிற்கு இருக்கும் உயர்மட்ட அளவையும் தாண்டி, அதனைப் பேராசையால் அனுபவித்துக்கொண்டு செல்லும் உலகு, காடுகள் அழிப்பை நிறுத்தவும், மண் அரிப்பைத் தடுக்கவும், பாலைவனம் விரிந்துகொண்டு செல்வதை நிறுத்தவும், கடலின் அமிலத்தன்மையைக் குறைக்கவும், படைப்பின் அழுகுரலுக்கு செவிமடுக்கவும், மனிதருக்கும், படைப்பனைத்துக்கும் ஓய்வு கொடுக்க வேண்டிய காலம் இது என, திருத்தந்தை தன் செய்தியில் கூறுகிறார்.

4. மீட்டெடுக்கும் காலம்

முறிந்துபோன உறவுகளைக் குணப்படுத்தி, மீட்டு, படைப்புடன்கூடிய இணக்கவாழ்வை மீண்டும் கொண்டுவரவேண்டிய காலம் இது, எனவும் அழைப்பு விடுக்கிறது, திருத்தந்தையின் செய்தி. உலகின் தென் பகுதி அதிகம் அதிகமாகச் சுரண்டப்பட்டு வந்துள்ளது என்பதை தன் செய்தியில் குறிப்பிடும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏழை நாடுகளின் கடன் மன்னிக்கப்படவேண்டியதன் தேவையையும் வலியுறுத்தியுள்ளார்.

5. மகிழ்வதன் காலம்

ஏழைகள், மற்றும், படைப்பின் அழுகுரல்கள் அதிகம் அதிகமாக எழும்பிவரும் இன்றையக் காலக்கட்டத்தில், தனியார்கள், மற்றும், சமுதாயங்களின் பொறுப்புணர்வுகளும் அதிகரித்து வருவதைக் காணமுடிகிறது எனக் கூறும் திருத்தந்தை, படைப்பு, மற்றும், ஏழைகளின் பாதுகாப்பிற்காக, தாராளமனதுடன் பலர் எடுத்துவரும் முயற்சிகள் மகிழ்ச்சி தருவதாக உள்ளன என தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுச்சூழல் நெருக்கடிகளைக் களைவதில், இளையோரும், பூர்வீகக் குடிமக்களும் ஆர்வமுடன் தங்களை ஈடுபடுத்தி செயல்பட்டு வருவது குறித்தும் எடுத்தியம்பியுள்ளார் திருத்தந்தை.

01 September 2020, 13:27