வயது முதிர்ந்த அருள்பணியாளர்கள் நடுவே செபிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம் வயது முதிர்ந்த அருள்பணியாளர்கள் நடுவே செபிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம் 

வயது முதிர்ந்த அருள்பணியாளர் நாள் – திருத்தந்தையின் செய்தி

அருள்பணியாளரின் வாழ்வில் வலுவிழந்த நேரங்கள் "புடமிடுகிறவரின் நெருப்பைப் போலும் சலவைத் தொழிலாளியின் சவர்க்காரத்தைப் போலும்" (மலாக்கி 3:2) இருக்கும் – திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

வயது முதிர்ந்த நிலையிலும், நோயுற்ற நிலையிலும் வாழும் அருள்பணியாளர்களை நினைவுகூர்ந்து, அவர்கள் ஆற்றியுள்ள பணிகளுக்கு நன்றி சொல்வதற்கென ஒரு நாளை உருவாக்கியுள்ள லொம்பார்தி பகுதி தலத்திருஅவைக்கு நன்றி கூறுகிறேன் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

இத்தாலியின் லொம்பார்தி பகுதியில் உள்ள மறைமாவட்டங்கள் இணைந்து, வயதில் முதிர்ந்த, மற்றும் நோயுற்ற அருள்பணியாளருக்கென ஒரு நாளை உருவாக்கி, கடந்த ஆறு ஆண்டுகளாக சிறப்பித்து வருவது குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அப்பகுதி தலத்திருஅவைக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச்செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.

நோயுற்றோர், மற்றும், மாற்றுத்திறனுற்றோரை, லூர்து நகர் அன்னை மரியா திருத்தலத்திற்கு அழைத்துச்செல்லும் பணிகளை ஆற்றிவரும் UNITALSI என்ற அமைப்பினராலும், ஏனைய பிறரன்பு அமைப்புக்களைச் சார்ந்தோராலும், செப்டம்பர் 17 இவ்வியாழனன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த சிறப்பு நாள், நல்லமுறையில் பயனளிக்க தான் செபிப்பதாக, திருத்தந்தை, இச்செய்தியில் கூறியுள்ளார்.

கடந்த சில மாதங்களாக நிலவிவரும் கொள்ளைநோயின் காரணமாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின் விளைவாக, ஒருவரையொருவர் சந்திக்கும் வாய்ப்புக்கள் குறைந்துள்ளன என்பதை தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த கட்டுப்பாடுகளால், வயதில் முதிர்ந்தோர், தனிமையை இன்னும் கூடுதலாக உணர்ந்துவருகின்றனர் என்பதை எடுத்துரைத்தார்.

தனித்து விடப்பட்ட, அல்லது, மிக வலுவற்ற நிலையில் எத்தனையோ முதியோர், குறிப்பாக, வயதில் முதிர்ந்த அருள்பணியாளர்கள், இறைவனை நோக்கி கண்களை உயர்த்தி, இறைவேண்டல் செய்துள்ளனர் என்பதையும், திருத்தந்தை, தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இயேசு நம்மோடு இணைந்து சிலுவையைச் சுமப்பதனால், துன்பத்தையும், தனிமையையும் கண்டு நாம் அஞ்சத் தேவையில்லை என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அருள்பணியாளரின் வாழ்வில் வலுவிழந்த நேரங்கள் "புடமிடுகிறவரின் நெருப்பைப் போலும் சலவைத் தொழிலாளியின் சவர்க்காரத்தைப் போலும்" (மலாக்கி 3:2) இருக்கும் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

வயதில் முதிர்ந்தோர் சிறப்பு நாளன்று, இந்த கொள்ளைநோயினால் இறையடி சேர்ந்த அருள்பணியாளரை சிறப்பான முறையில் நினைவுகூர்வோம் என்ற விண்ணப்பத்துடன் திருத்தந்தை இச்செய்தியை நிறைவு செய்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 September 2020, 14:02