லொரேட்டோ அன்னை மரியாவின் இல்ல ஆலயம் லொரேட்டோ அன்னை மரியாவின் இல்ல ஆலயம் 

ஐரோப்பாவில், அமைதி, அன்பு கலாச்சாரத்தை உருவாக்க...

ஐரோப்பா, நம்பிக்கை என்ற இரு சொற்களை இணைத்து உருவாக்கப்பட்ட "EurHope" என்ற தலைப்பில், 1995ம் ஆண்டு, லொரேட்டோவில் நிகழ்ந்த கூட்டத்தின் 25ம் ஆண்டு நினைவு, இவ்வாண்டு, செப்டம்பர் 9, இப்புதனன்று சிறப்பிக்கப்பட்டது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

1995ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி, திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் அவர்களும், ஐரோப்பியக் கண்டத்தின் பல நாடுகளிலிருந்து வந்திருந்த 4,00,000த்திற்கும் அதிகமான இளையோரும், அன்னை மரியாவின் புகழ்பெற்ற திருத்தலமான லொரேட்டோவில் கூடிவந்தது, அத்திருத்தலத்தின் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமைந்தது.

"EurHope" இளையோர் கூட்டம்

Europe மற்றும் hope, அதாவது, ஐரோப்பா, நம்பிக்கை என்ற இரு சொற்களை இணைத்து உருவாக்கப்பட்ட "EurHope" என்ற தலைப்பில் நிகழ்ந்த இக்கூட்டத்தின் 25ம் ஆண்டு நினைவு, இவ்வாண்டு செப்டம்பர் 9, இப்புதனன்று சிறப்பிக்கப்பட்டது.

2000மாம் ஆண்டு நெருங்கிவந்த வேளையில், ஐரோப்பாவில், அமைதி மற்றும் அன்பு கலாச்சாரத்தை உருவாக்கும் விருப்பத்துடன், 1995ம் ஆண்டு, திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள் விடுத்த அழைப்பை ஏற்று, 4,00,000த்திற்கும் அதிகமான இளையோர், லொரேட்டோ அன்னை மரியாவின் திருத்தலத்தில் கூடிவந்தனர்.

லொரேட்டோ நகரின், மொந்தோர்சோ (Montorso) என்ற சதுக்கத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில், அன்னை மரியாவும், இயேசுவும் வாழ்ந்த இந்த இல்லம், மனிதரும், இறைவனும் இணைந்து வாழும் இல்லத்தை நினைவுறுத்துகிறது என்று கூறிய திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், அனைவரும் இணைந்து வாழும் ஒரு பொதுவான இல்லமாக இவ்வுலகை மாற்ற இளையோருக்கு அழைப்பு விடுத்தார்.

இச்சந்திப்பைத் தொடர்ந்து, மொந்தோர்சோ சதுக்கத்தில் நிறுவப்பட்ட இளையோர் மையம் ஒன்று, திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்களின் பெயருடன், யூபிலி கொண்டாடப்பட்ட, 2000ம் ஆண்டில் திறக்கப்பட்டது.

Christus vivit - திருத்தூது அறிவுரை மடல்

இளையோரை மையப்படுத்தி, 2018ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் வத்திக்கானில் நடைபெற்ற ஆயர்கள் மாமன்றத்தில் பகிர்ந்துகொள்ளப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் Christus vivit என்ற திருத்தூது அறிவுரை மடலை எழுதினார்.

2019ம் ஆண்டு, மார்ச் 25ம் தேதி, கிறிஸ்து பிறப்பு அறிவிப்பு பெருவிழாவன்று, லொரேட்டோ அன்னை மரியாவின் இல்லத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளையோருக்கென உருவாக்கப்பட்ட Christus vivit என்ற அறிவுரை மடலில் கையொப்பமிட்டு வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 September 2020, 14:04