தேடுதல்

Vatican News
தாபோர் மலையில் கிறிஸ்துவின் தோற்றமாற்றம் தாபோர் மலையில் கிறிஸ்துவின் தோற்றமாற்றம்  

தோற்றமாற்றம், ஹிரோஷிமா - திருத்தந்தையின் டுவிட்டர்கள்

"ஆயுதப்போட்டிக்கென பயன்படுத்தப்படும் நிதி, மக்களின் ஒருங்கிணைந்த முன்னேற்றத்திற்கும், இயற்கையைப் பாதுகாப்பதற்கும் பயன்படுத்தப்படவேண்டும் என்பதை நினைவில் கொள்வோம்" - திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஆகஸ்ட் 6, இவ்வியாழனன்று, ஆண்டவரின் தோற்றமாற்றம் விழா சிறப்பிக்கப்பட்டதையொட்டியும், இதே ஆகஸ்ட் 6ம் தேதி, 1945ம் ஆண்டு, ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமாவில் அணுகுண்டு தாக்குதல் நடைபெற்றதையொட்டியும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இரு டுவிட்டர் செய்திகளை இவ்வியாழனன்று வெளியிட்டார்.

"தாபோர் மலையில், தோற்றமாற்றம் அடைந்த கிறிஸ்துவை காட்சி தியானமாகக் காணும்போது, கடவுளின் ஒளிமிக்க முகத்தின் மீது நம் பார்வையைப் பதிப்போம். அவரே, நம் ஒவ்வொருநாள் நிகழ்வுகளையும் ஒளிர்விக்கும் ஒளி" என்ற சொற்களை, தோற்றமாற்றம் என்ற பொருள்படும் #Transfiguration என்ற 'ஹாஷ்டாக்'குடன் திருத்தந்தை தன் முதல் டுவிட்டர் செய்தியாக வெளியிட்டார்.

மேலும், 1945ம் ஆண்டு, ஆகஸ்ட் 6ம் தேதி, ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் அமெரிக்க ஐக்கிய நாடு நிகழ்த்திய அணுகுண்டு தாக்குதலின் 75ம் ஆண்டு நினைவு இவ்வாண்டு கடைபிடிக்கப்பட்டதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் இரண்டாவது டுவிட்டர் செய்தியை, ஹிரோஷிமா75 (#Hiroshima75) என்ற 'ஹாஷ்டாக்'குடன் வெளியிட்டார்.

"இன்று, ஹிரோஷிமாவில் அணுத்தாக்குதல் நடைபெற்ற 75ம் ஆண்டை நினைவுகூரும் வேளையில், ஆயுதப்போட்டிக்கென பயன்படுத்தப்படும் நிதி, மக்களின் ஒருங்கிணைந்த முன்னேற்றத்திற்கும், இயற்கையைப் பாதுகாப்பதற்கும் பயன்படுத்தப்படவேண்டும் என்பதை நினைவில் கொள்வோம்" என்ற சொற்கள், திருத்தந்தை வெளியிட்ட இரண்டாவது டுவிட்டர் செய்தியில் பதிவாகியிருந்தன.

06 August 2020, 13:52