திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ் 

அடுத்த வீட்டில் வாழும் புனிதர்கள் - திருத்தந்தை

புனிதர்கள் என்பவர்கள், எதிரிகளையும் அன்புகூர்ந்து, அவர்களுக்காகவும் செபிக்கும் மனவுறுதியைக் கொண்டுள்ளார்கள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

நம் ஒவ்வொருவரின் அடுத்த வீட்டில் புனிதர்கள் வாழ்கிறார்கள், என்பதை நினைவுறுத்தி, ஆகஸ்ட் 3, இத்திங்களன்று, தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

"'அடுத்தவீட்டுப் புனிதர்களை' கண்ணோக்குவோம். இவர்கள், எளிய வழிகளில், தீமைக்கு நன்மையால் பதிலளிக்கின்றனர், எதிரிகளையும் அன்புகூர்ந்து, அவர்களுக்காகச் செபிக்கும் துணிவைக் கொண்டுள்ளனர்" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

மேலும், ஆகஸ்ட் 2, இஞ்ஞாயிறன்று திருத்தந்தை வெளியிட்ட மூன்று டுவிட்டர் செய்திகளில், முதல் செய்தி, இஞ்ஞாயிறு நற்செய்தியை மையப்படுத்தியும், இரண்டாவது செய்தி, "அசிசி நகர் மன்னிப்பை" மையப்படுத்தியும் அமைந்திருந்தன.

அத்துடன், நிக்கராகுவா நாட்டின் மனாகுவா  பேராலயத்தில் நடைபெற்ற தாக்குதலுக்கு தன் ஆழ்ந்த அனுதாபங்களையும் ஒருமைப்பாட்டையும் உணர்த்தும்வண்ணம் திருத்தந்தை எழுதிய மூன்றாவது டுவிட்டர் செய்தி, இஸ்பானிய மொழியில், அந்நாட்டு மக்களுக்கென வெளியிடப்பட்டது.

"அப்பத்தைப் பலுகச் செய்த புதுமை வழியே (காண்க. மத். 14:13-21), மற்றவர்களுக்காக நாம் பொறுப்பேற்க வேண்டும் என்பது, கடவுளின் சிந்தனையோட்டமாக விளங்குகிறது என்பதை இயேசு தன் சீடர்களுக்கும் நமக்கும் பாடமாகச் சொல்லித்தருகிறார்" என்பது, திருத்தந்தை வெளியிட்ட முதல் டுவிட்டர் செய்தியில் பதிவான கருத்து. 

நம்மிலும், நம்மை சுற்றிலும், விண்ணகத்தை உருவாக்கும் கடவுளின் மன்னிப்பை எப்போதும் மையமாகக் கொண்டிருப்பது மிகவும் முக்கியமானது என்று, திருத்தந்தையின் இரண்டாவது டுவிட்டர் செய்தி எடுத்துரைக்கிறது..

தன் மூன்றாவது டுவிட்டரிலோ, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நிக்கராகுவா நாட்டின் மனாகுவா பேராலயம் தாக்கப்பட்டதால் துன்பங்களை அனுபவிக்கும் மக்களைக் குறித்து என் எண்ணங்கள் செல்கின்றன. நிகரகுவா நாட்டின் என் அன்பு சகோதர சகோதரிகளே, நான் உங்களுக்கு நெருக்கமாக உள்ளேன், உங்களுக்காக செபிக்கிறேன். என உறுதி வழங்கியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 August 2020, 13:23