தேடுதல்

உரோம் புனித Agostino in Campo Marzio ஆலயத்தில் திருத்தந்தை செபம் உரோம் புனித Agostino in Campo Marzio ஆலயத்தில் திருத்தந்தை செபம்  

புனித மோனிக்கா கல்லறையில் திருத்தந்தை செபம்

மிலான் நகரில், புனித அகஸ்டின், புனித அம்புரோசிடம், திருமுழுக்குப் பெற்றபின், அவரும், அவரது அன்னை புனித மோனிக்காவும், ஆப்ரிக்கா செல்வதற்காக கப்பல் பயணத்தை மேற்கொண்டனர். அச்சமயத்தில் புனித மோனிக்கா (கி.பி.322–387) ஓஸ்தியாவில் இறைவனடி சேர்ந்தார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

“ஆண்டவரில் நம்பிக்கை வைப்பதும், அவரது திட்டங்களில் நுழைவதற்கு முயற்சியை மேற்கொள்வதும், அவரது மீட்பு, நாம் எதிர்பார்ப்பதைவிட, மாறுபட்ட வழிகளில் நம்மை வந்தடையும் என்பதை ஏற்பதுமாகும்” என்று, ஆகஸ்ட் 28, இவ்வெள்ளியன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 28, இவ்வெள்ளியன்று சிறப்பிக்கப்பட்ட புனித அகஸ்டின் அவர்கள், தனது பழைய வாழ்விலிருந்து, புதிய புனித வாழ்வுக்குத் திரும்புவதற்கு, அவரது அன்னை புனித மோனிக்காவின் ஆழ்ந்த இறைநம்பிக்கை எவ்வாறு உதவியது என்பதை மையப்படுத்தி, திருத்தந்தை, இவ்வெள்ளியன்று, தன் டுவிட்டர் செய்தியை, இவ்வாறு வெளியிட்டிருந்தார்.

புனித அகஸ்டின் ஆலயத்திற்கு திருத்தந்தை

மேலும், புனித மோனிக்கா திருவிழா  சிறப்பிக்கப்பட்ட, ஆகஸ்ட் 27 இவ்வியாழன் மாலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் நகரில் அமைந்துள்ள புனித அகஸ்டின் ஆலயம் சென்று, புனித மோனிக்கா கல்லறையில் செபித்தார்.

திருத்தந்தை, உரோம் புனித அகஸ்டின் ஆலயம் சென்றது குறித்து செய்தி வெளியிட்ட, திருப்பீட தகவல் தொடர்பகத்தின் இயக்குனர் மத்தேயோ புரூனி அவர்கள், அந்த ஆலயத்திலுள்ள புனித மோனிக்கா சிற்றாலயத்தில், திருத்தந்தை, சிறிதுநேரம் செபித்து, வத்திக்கான் திரும்பினார் என்று அறிவித்தார். அந்த சிற்றாலயத்தில் புனித மோனிக்காவின் கல்லறை உள்ளது.

இரு அன்னையர்களிடம் செபம்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழனன்று புனித அகஸ்டின் ஆலயம் சென்று, புனித மோனிக்கா கல்லறை முன்பாக இறைவேண்டல் செய்தது, முதன்முறை அல்ல என்றும், இதற்கு இரு ஆண்டுகளுக்குமுன், அயர்லாந்து நாட்டிற்குத் திருத்தூதுப் பயணத்தை முடித்து திரும்புகையில், திருத்தந்தை, உரோம் புனித மேரி மேஜர் பெருங்கோவிலுக்குச் சென்று செபித்தபின், புனித அகஸ்டின் ஆலயத்திற்கும் சென்று புனித மோனிக்காவிடம் செபித்தார் என்றும், புரூனி அவர்கள் கூறினார்.  

அயர்லாந்து நாட்டில் நடைபெற்ற, கத்தோலிக்க குடும்பங்களின் உலக மாநாட்டை  நிறைவுசெய்து வத்திக்கான் திரும்புகையில், அன்னை மரியாவிடமும், புனித மோனிக்காவிடமும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மன்றாடினார்.

இத்தாலி நாட்டின் மிலான் நகரில், புனித திருமுழுக்கு யோவான் ஆலயத்தில், புனித அகஸ்டின், புனித அம்புரோசிடம், திருமுழுக்குப் பெற்றபின், அவரும் அவரது அன்னை புனித மோனிக்காவும், ஆப்ரிக்கா செல்வதற்காக மேற்கொண்ட கப்பல் பயணத்தில், இத்தாலியின் ஓஸ்தியாவில் புனித மோனிக்கா (கி.பி.322–387) இறைவனடி சேர்ந்தார் என்று, புனித அகஸ்டின், தனது மனமாற்றம் பற்றி எழுதியுள்ள Confessions என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 August 2020, 13:18