மானாகுவா பேராலயத்தில்  சேதப்படுத்தப்பட்டுள்ள திருச்சிலுவை மானாகுவா பேராலயத்தில் சேதப்படுத்தப்பட்டுள்ள திருச்சிலுவை 

நிக்கராகுவா மக்களுக்காக திருத்தந்தை செபம்

திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், 1996ம் ஆண்டு பிப்ரவரியில் நிக்கராகுவா நாட்டிற்குத் திருத்தூதுப்பயணம் மேற்கொண்டபோது, இப்போது குண்டுவைத்து அழிக்கப்பட்டுள்ள இந்த திருச்சிலுவையின் முன் செபித்தார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

நிக்கராகுவா நாட்டின் மனாகுவா பேராலயத்தில் நிறுவப்பட்டுள்ள திருச்சிலுவை, பெட்ரோல் வெடிகுண்டு வைத்து சேதப்படுத்தப்பட்டிருப்பதை முன்னிட்டு, அந்நாட்டு கத்தோலிக்கருடன் தன் அருகாமையைத் தெரிவித்திருப்பதோடு, அவர்களுக்காக தான் கடவுளிடம் மன்றாடுவதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இஞ்ஞாயிறன்று கூறினார்.

ஆகஸ்ட் 02, இஞ்ஞாயிறு நண்பகலில், வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு, இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை மையப்படுத்தி, பகிர்தல் மற்றும் தோழமையுணர்வு ஆகிய இரு தலைப்புக்களில் மூவேளை செப உரையாற்றியபின், ஜூலை 31, இவ்வெள்ளியன்று, மனாகுவா பேராலயத்தில் நிறுவப்பட்டுள்ள பழமைவாய்ந்த திருச்சிலுவை, பெட்ரோல் வெடிகுண்டு வைத்து தாக்கப்பட்டிருப்பது குறித்து திருத்தந்தை, குறிப்பிட்டார்.

இவ்வேளையில், இந்த தாக்குதலால் துன்புறும் நிக்கராகுவா மக்களை நினைக்கின்றேன், பல நூற்றாண்டுகளாக விசுவாசிகளின் வாழ்வோடு ஒன்றாகக் கலந்து, மிகுந்த பக்தியோடு வணங்கப்பட்டுவந்த கிறிஸ்துவின் திருச்சிலுவை, ஏறத்தாழ முழுமையாகச் சேதப்படுத்தப்பட்டுள்ளது என்று, திருத்தந்தை கூறினார்.

என் அன்புக்குரிய நிக்கராகுவா சகோதரர்களே, சகோதரிகளே, உங்களுக்கு அருகில் இருக்கிறேன் மற்றும், உங்களுக்காகச் செபிக்கின்றேன் என்று, திருத்தந்தை கூறியுள்ளார்.

மனாகுவா நகரின் அமலமரி பேராலயத்தில் அமைந்துள்ள கிறிஸ்துவின் இரத்தம் என்ற பெயர்கொண்ட சிற்றாலயத்தில், இனம் தெரியாத மனிதர் ஒருவர், தீப்பற்றி எரியும் பெட்ரோல் வெடிகுண்டை வீசியதில், அந்த சிற்றாலயமும், அங்கு 382 ஆண்டுகளாக வணங்கப்பட்டுவந்த சிலுவையில் அறையுண்ட கிறிஸ்துவின் திருவுருவமும் கடுமையாய்ச் சேதமடைந்துள்ளன. 

இந்த வன்முறை குறித்து ஊடகங்களிடம் பேசிய, மனாகுவா பேராயர், கர்தினால் Leopoldo Brenes அவர்கள், நிதானமாக, திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ள இந்த வன்முறை, ஒரு பயங்கரவாதச் செயல் என்று கூறியுள்ளார்.

திருத்தந்தை செபம்

திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், 1996ம் ஆண்டு பிப்ரவரியில் நிக்கராகுவா நாட்டிற்குத் திருத்தூதுப்பயணம் மேற்கொண்டபோது, இப்போது குண்டுவைத்து அழிக்கப்பட்டுள்ள இந்த திருச்சிலுவையின் முன் செபித்தார்.

வாழ்வில் சோர்வு, தனிமை, பிறரால் புரிந்துகொள்ளப்படாமை போன்ற சூழல்கள் உருவாகும்போது, தங்கள் விசுவாசத்தை இழந்துவிடாமல் இருக்குமாறு நிக்கராகுவா மக்களுக்கு அழைப்பு விடுத்த திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், நீங்கள் ஆண்டவரால் அன்புகூரப்படுகிறீர்கள், அவர் எப்போதும் உங்களுக்கு முன்னே சென்று உங்களைப் பாதுகாக்கிறார் என்று ஊக்கப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 August 2020, 12:41