இயேசுவின் திருஇருதயம் இயேசுவின் திருஇருதயம் 

இயேசுவின் திருஇருதய பிரான்சிஸ்கன் சபை சகோதரிகளுக்கு வாழ்த்து

அருளாளர் மரியா மார்கரீத்தா கய்யானி அவர்கள், 1902ம் ஆண்டில், இயேசுவின் திருஇருதய பிரான்சிஸ்கன் அருள்சகோதரிகள் சபையை ஆரம்பித்தார்.

மேரி தேரேசா: வத்திக்கான் செய்திகள்

நம்மை நோக்கி தம் கரத்தை நீட்டும் இறைத்தந்தை நம் அனைவருக்கும் தேவை, அவரிடம் மன்றாடுவது, அவரிடம் விண்ணப்பிப்பது வெறும் மாயை அல்ல என்றும், மாயையானது, இறைத்தந்தையின்றி நம்மால் எதையும் ஆற்ற முடியும் என்று நினைக்க வைக்கின்றது, இறைவேண்டலே, நம்பிக்கையின் ஆன்மா என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆகஸ்ட் 08, இச்சனிக்கிழமையன்று, தன் டுவிட்டர் செய்தியில் பதிவுசெய்துள்ளார்.

வாழ்த்துச் செய்தி

மேலும், அருளாளர் மரியா மார்கெரித்தா கய்யானி (Maria Margherita Caiani) அவர்கள், விண்ணகப்பேற்றை அடைந்ததன் நூறாம் ஆண்டை முன்னிட்டு, ஆகஸ்ட் 08, இச்சனிக்கிழமையன்று யூபிலி ஆண்டைத் தொடங்கியுள்ள, இயேசுவின் திருஇருதய பிரான்சிஸ்கன் சபை அருள்சகோதரிகளுக்கு, தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

1902ம் ஆண்டில், அருளாளர் மரியா மார்கரீத்தா கய்யானி அவர்கள், இயேசுவின் திருஇருதய பிரான்சிஸ்கன் அருள்சகோதரிகள் சபையை ஆரம்பித்ததையும், ஏறத்தாழ 120 ஆண்டுகளாக அச்சபை வளர்ந்து வந்துள்ளதையும் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, இச்சகோதரிகள், தங்கள் வாழ்வு வழியாக, இவ்வுலகில், தொடர்ந்து நறுமணத்தைப் பரப்பி வருமாறு கேட்டுக்கொண்டார்.

அருளாளர் மார்கரீத்தா அவர்கள், அச்சபையின் பெயருக்கேற்ப, அச்சகோதரிகளின் வாழ்வுமுறை, எளிமையாக, சிறியோர் பண்பைக் கொண்டிருக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதைக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, கிறிஸ்துவைப் பின்பற்றும் பாதையில், புனித பிரான்சிசின் வழியில் செல்வதற்கு, அச்சகோதரிகள் தூண்டப்படுகின்றனர் என்று கூறியுள்ளார்.

குறுகிய மற்றும், கடினமான பாதையில், ஒருவர் இறுதிவரை செல்லும்போது, வாழ்வு மிகவும் பலனுள்ளதாக அமையும் என்று கூறியுள்ள திருத்தந்தை, அச்சபையின் பெயரில் பிரான்சிஸ் மற்றும், இயேசுவின் திருஇருதயம் ஆகிய இரு பெயர்கள் இருப்பதையும்,  அவற்றின் முக்கியத்துவத்தையும் குறிப்பிட்டுள்ளார்.

அன்பின் ஊற்றாகிய இயேசுவின் திருஇருதயத்திடமிருந்து இச்சகோதரிகள் தங்களுக்குத் தேவையான சக்தியைப் பெறுகின்றனர் என்றும், இயேசுவின் கனிவான இதயத்தோடு வாழவேண்டிய இவர்கள், முதலில் அதனை குழு வாழ்வில் வாழ்ந்து காட்டவேண்டும் என்றும் திருத்தந்தை கூறினார்.   

திருப்பலி, திருப்புகழ்மாலை, திருநற்கருணை ஆராதனை, இறைவார்த்தையை தியானித்தல், செபமாலை, ஞானவாசகம் போன்ற பக்தி முயற்சிகள், ஒவ்வொரு நாளும் கடவுளோடு ஒன்றித்திருக்க உதவும் என்றும், சபையின் தனிவரத்திற்கேற்ப வாழுமாறும் திருத்தந்தை கூறினார்.

இயேசுவின் திருஇருதய பிரான்சிஸ்கன் அருள்சகோதரிகள் சபையினர், தங்கள் சபையை ஆரம்பித்தவர், இறைவனடி சேர்ந்ததை சிறப்பிக்கும் யூபிலி ஆண்டை, 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி நிறைவு செய்கின்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 August 2020, 13:38